(சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 தொடர்ச்சி)

      
 986. Audit notesதணிக்கைக்‌ குறிப்புகள்‌

தணிக்கை அல்லது கணக்கு அலுவலகத்தில் கிடைக்கும் தரவு, தகவல் அல்லது ஆவணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கை முடிவுகளைக் கொண்ட, தணிக்கை அலுவலகத்தால் வெளியிடப்படும் குறிப்பே தணிக்கைக் குறிப்பாகும்.
 987. Audit of accountsகணக்குகளின் தணிக்கை

கணக்கியல் உலகின் ஒரு பகுதியாகத் தணிக்கை உள்ளது.

கணக்கியல், நிதிப் பதிவுகளை எச்சார்புமினறித் தற்போக்கில் மேற்கொள்ளும் ஆய்வு ஆகும்.

நிறுவனம் அல்லது வணிக நிறுவனத்தின் செயற்பாடுகள்,  சட்டங்களுக்கும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கை களுக்கும் இணங்கியுள்ளனவா என்பதைத் தீர்மானிக்க மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டம், 1959 இன் பிரிவு 6(1) [Section 6(1) of The Indian Statistical Institute Act, 1959 – ISIA 1959] நிறுவனfக் கணக்குகளின் தணிக்கையைக் குறித்துக் கையாள்கிறது. குறிப்பாக, இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் கணக்குகள், நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் நிறுவனங்களின் தணிக்கையாளர்களாகச் செயல்படத் தகுதியுள்ள தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், இந்தியத் தலைமைக் கட்டுப்பாட்டாளர்-தணிக்கையாளருடனும் நிறுவனத்துடனும் கலந்தாலோசித்த பிறகு நிறுவனம் அத்தகைய தணிக்கையாளர்களை அமர்த்த வேண்டும் என்றும் கூறுகிறது
 988. Auditor      தணிக்கையாளர்

தணிக்கையர்

கணக்காய்வர்
அதிகார முறையில் கணக்குகளைச் சரிபார்ப்பவர்.

கலைஆய்வர்

மேலே Audit காண்க.

இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டம், 1959 இன் பிரிவு 6(1) [Section 6(1) of The Indian Statistical Institute Act, 1959 – ISIA 1959] காண்க.
 989. Auditor General of India        இந்தியாவின்‌ தலைமைத்‌ தணிக்கையாளர்‌

இந்தியாவின்‌ தணிக்கைத் தலைமையாளர்.

 மத்திய, மாநில அரசாங் கங்களின் செலவுகளின் புற/ அகத் தணிக்கைகளுக்குப் பொறுப்பான உச்ச அதிகார அமைப்பாகும்.

நாடெங்கும் ஏறத்தாழ 58,000 ஊழியர்களைக் கொண்ட இந்தியத் தணிக்கை – கணக்குத் துறையின் தலைவராகவும் செயல்படுகிறார். இவர்களுள் தேவைப்படுபவர்களைக் கொண்டு நெறியுரை வழங்கி தணிக்கை மேற்கொண்டு அவற்றின் அடிப்படையில், தான் தணிக்கை ஆய்வு மேற் கொள்வதால் அமைப்பு எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

இந்திய அரசு, மாநில அரசுகள், அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (இயல் 5) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். இவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.

அரசுடைமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப் பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொதுக் கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்திய அதிகார முன்னுரிமைப் பட்டியலில் ஒன்பதாவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளார்.         
 990. Auditor’s report   தணிக்கையாளரின் அறிக்கை தணிக்கையாளரின் அறிக்கை பெரும்பாலும் கணக்காளரின் மதிப்பீடு அல்லது கருத்துரை என்று அழைக்கப்படுகிறது. கருத்துரை எனில் கணக்கு வழக்குகள், வரவு-செலவினங்கள், தொடர்பான செயற்பாடுகள் குறித்த முறையான ஏற்புரை அல்லது மறுப்புரை/ தடையுரை ஆகும். அகத்தணிக்கை அல்லது புறத தணிக்கையினால் அகத் தணிக்கையாளர் அல்லது தற்சார்பான புறத் தணிக்கையாளரால் அளிக்கப்படுவதாகும்.  தணிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் பயனர் முடிவுகளை எடுப்பதற்கான உறுதிப்பாட்டுப் பணியாகும்.