(குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை
(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் ௪௱௪௰௪ – 444)
பதவுரை: தம்மின்-தம்மைக்காட்டிலும், தம்மைவிட; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தம்மவராக, சுற்றமாக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்; வன்மையுள்-வலிமையுள், வல்லமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறந்தது.
பொழிப்புரை: நம்மினும் பெரியவரை நம்மவராக ஏற்றுப் பின்பற்றல் எல்லா வன்மையினும் சிறந்தது.
‘தம்மின் பெரியார்’ என்பதற்குத் ‘தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்’ என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் கூறுகின்றனர்.
செல்வம், கல்வி, அறிவு இவற்றில் தம்மிலும் பெரியாரைத் தமக்கு உறவாகப் பண்ணிக்கொள்ளுதல் என்று பரிதி சொல்லியுள்ளார்.
குலத்தாலும் குணத்தாலும் கல்வியானும் தம்மின் சிறந்த பெரியோரை இவ்வரசர்க்குத் துணையாகக் கொண்டு ஒழுகுதலே என்கிறார் காலிங்கர். குலம் என்றது வருண அடிப்படையிலான சாதியைக் குறிப்பது அல்ல. கல்வி, கேள்வி, பண்புகளில் தலைசிறந்த வழி வழி குடிப்பெருமையைக் குறிப்பதே குலம்.
அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல் என்கிறார் பரிமேலழகர்.
தன்னைவிடச் சிறந்தவரைத் துணையாகக் கொள்ளுதலால் குறைவு ஒன்றும் இல்லை; நிறைவே காணலாம்.
‘தமராக் கொளல்’ என்றதற்குத் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல், தமக்குத் துணையாகக் கோடல், தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், தமக்கு மெத்த நண்பராகக் கொள்ளுதல், தமக்குத் தமராய்க் கொள்ளுதல், தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், தமக்கு வேண்டியவர்களாக ஆக்கிக் கொள்ளுதல், உறவாகக் கொள்ளல், தமக்குச் சிறந்தவராகத் துணையாகக் கொள்ளுதல், தமக்கு உறவினராகக் கொள்ளுதல், தமக்கு உற்றாராகப் பெற்றுக் கொள்ளுதல், உறவாக்கிக் கொள்ளுதல், தம்மவர் ஆக்கிக்கொள்வது என்றவாறு உரையாளர்கள் முந்தைய குறள்(444) விளக்கத்தின் பொழுது தெரிவித்துள்ளனர். இங்கும் அவற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும்
தம்மைக் காட்டிலும் மிக்காராக இருக்கும் பெரியார் தனக்குச் சுற்றத்தவராக இருந்து நடந்து கொள்ளுதல் தமக்குள்ள வன்மைகள் பலவற்றுள்ளும் தலையானதாகும்.
பெரியாரின் துணை, தேவைப்படும் காலத்தில் அறிவையும், ஆற்றலையும், ஊக்கத்தையும், சூழ்ச்சித் திறனையும், தன்னம்பிக்கையையும் தந்து துணை நிற்பதால், வலிமைகளுள் தலையாய வலிமையாகத் திகழ்வதாக உரையாளர்கள் விளக்குகின்றனர்.
சிலர் செல்வத்திலும் பெரியாராக இருக்க வேண்டும் என்று விளக்குகின்றனர். திருவள்ளுவர் கூறும் தாழ்விலாச் செல்வராக, நல்வழியில் பொருள் ஈட்டி நல்வழியில் செலவழிப்பவராக இருப்பின் அவர் துணை சிறந்ததே. மாறாகத் தீயவழியில் பொருள் ஈட்டுவோர் தீய வழிகளில் செல்வத்தைச் செலவழிப்போர் துணை இருப்பது தீதே. எனவே, பெரியாரைப்பற்றிச் சொல்லும் பொழுது செல்வம் என்பது குறித்துச் சொல்ல வேண்டிய தேவையில்லை.
உரையாசிரியர்கள் அக்காலச் சூழலுக்கேற்ப அரசர்களை மையமாகக் கொண்டே விளக்கியுள்ளனர். ஆனால், ஆள்வோருக்கு மட்டுமல்ல, பிற நிலைகளிலும் எளிய வகையிலும் வாழ்வோருக்கும் உரியதே இக்குறள். தனியரின் தொழில், வணிகம், வாழ்க்கை முறை, பணி தொடர்பானவற்றிலும் சிக்கல்கள் வராமல் இருக்கவும் சிக்கல்கள் வரின் அவற்றைக் களையவும் வாழ்வில் முன்னேறவும் கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் பெரியோராய் இருப்போரின் துணை வலிமையானதாகும்.
எனவே, வாழ்வில் நேரும் இன்னல்களையும் இடுக்கண்களையும் களைந்து உயர்ந்து வளர, சிறந்து விளங்க, நம்மைவிடப்
பெரியாரின் துணையைக் கொள்வதே
வலிமைகளுள் எல்லாம் வலிமையானதாகும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment