(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – தொடர்ச்சி)

செம்மை வழக்குகள் தமிழிலும் சிதைந்த வழக்குகள் பிற மொழிகளிலும் உள்ளன.

தமிழ்ச்சொற்கள் செப்பமுற்ற நிலையிலும் தமிழ்க் குடும்ப மொழிகளில் உள்ள சொற்கள் சிதைந்த நிலையிலும் உள்ளமை குறித்துப் பின்வருமாறு பேரா.இலக்குவனார் கூறுகிறார்.

 “இவ்வாறு எவ்வகையில் நோக்கினாலும் தமிழும், தமிழல் திராவிட மொழிகளும் ஒரு மொழி போலவே தோன்றுகின்றன. பெரும்பாலும் செப்பமுற்ற வழக்குகள் தமிழிலேயே உள்ளன. பிறமொழிகளின் சொற்கள், சிதைந்த வழக்குகளாகவே யுள்ளன. பண்பட்ட பழந்தமிழிலிருந்து பிரிந்து, நெருங்கிய தொடர்பு குறைந்த மொழிப் பகுதிகள் காலம் செல்லச் செல்ல உருமாறிக்கொண்டே வந்துவிட்டன. செப்பமுற்ற தமிழையொட்டி அவை இயங்குவதற்கேற்ற சூழ்நிலைகள் இல்லை..” (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)

மலையாளத்தை அடுத்துத் தமிழோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பது கன்னடம். கன்னடம் என்ற சொல் கருநாடகம் என்ற சொல்லின் சிதைவாகும். கருநாடகம் என்பது நாட்டைக் குறிக்கும் சொல்லாகும். அதிலிருந்து தோன்றிய கன்னடம் மொழியைக் குறிப்பதாகும். (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)

கன்னடம் கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில் தனிமொழியாக உருப்பெறவில்லை.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கருதப்படும் குமாரிலபட்டர் தென்னிந்திய மொழிகளைக் குறிக்குங்கால் ஆந்திர திராவிட பாசா என்று குறிப்பிட்டுள்ளார். ஆந்திரம் தெலுங்கையும் திராவிடம் தமிழையும் குறிப்பதாகும். ஆதலின் கன்னடம் கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில் தனிமொழியாக உருப்பெறவில்லை.  (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்) தமிழோ இன்றைக்கு மூவாயிரம்ஆண்டுகட்கு முந்தைய தொல்காப்பியத்தை உடையது. அந்நூல்வழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை அறியலாம். தொல்காப்பியத்தில் மொத்த நூற்பாக்கள் 1571; இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல்லதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும் என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார் (தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15) எனவே, இத்தகைய தொன்மையான தமிழ் வழங்கிய பகுதியில் இருந்த ஒரு மொழி பேச்சு வழக்கால் புதுமொழியாக மாறியிருக்கும் பொழுது தமிழில் இருந்து பிறந்ததுதான் அப்புதுமொழியாகிய கன்னடம் எனச் சொல்வதில் என்ன தவறு உள்ளது? இத்தகைய கன்னட மொழியைத் தமிழின் தாயாகச் சிலர் கூறுவது எத்தகைய அறியாமை மிக்கது?

கன்னடம் எப்பொழுது எப்படிப் பிறந்தது?

  “பம்பாய் மாகாணமும் ஐதராபாத்துச் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு, கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னால் வடசொற் கலப்பு மிகுதியாலும் ஒலி வேற்றுமைச் சிதைவாலும் கன்னடமென வேறு மொழியாகப் பிரிந்துவிட்டது” என்கிறார் பேரா.முனைவர்  சி.இலக்குவனார் (பழந்தமிழ்) கொடுந்தமிழ் வழக்கே கன்னடமாக மாறியது என்னும் பொழுது தமிழ்தானே கன்னடத்தின் தாய் என்பது சரியாக இருக்கும்.

கன்னட மொழியின் முதல் இலக்கியமே கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டுதான்

“தென்னிந்திய மொழிகள் எனப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழோடு தாம் கொண்டுள்ள நெருங்கிய உறவை இன்னும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவை தமிழிலிருந்து விலகி ஆரியத்தோடு தொடர்பு கொண்டு தனி மொழிகள் ஆகிவிட்டன. அவ்வாறு ஆன பிறகு அவற்றில் இலக்கியம் தோன்றிய காலம் வடஇந்திய மொழிகளின் இலக்கியக் காலத்தையே ஒட்டியுள்ளது. . . . . . . . . . . . . .  கன்னட மொழியில் நமக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கியம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இயற்றப்பட்ட கவிராச மார்க்கமாகும்.” எனப் பழந்தமிழ் நூலில் குறிப்பிடுகிறார். 

(தொடரும்)