(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – தொடர்ச்சி)
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4
தமிழின் தாய்மையை ஒத்துக் கொள்வது பிற மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயலல்ல!
“தமிழ் மொழிதான் அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் தாய் மொழி என நிலைநாட்ட நினைப்பது மற்ற திராவிட மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயல்” என்று சிலர் கூறுகின்றனர். தாய்க்குப் பலர் மகவுகள் இருக்கும் பொழுது அது பெருமைக்குரிய செய்தியே தவிர யாரையும் இழிவுபடுத்தும் செயலல்ல. இது குறித்து அறிஞர் அ.அரசேந்திரன் பின்வருமாறு கூறுகிறார்:
“ஓர் அம்மாவிற்கு இத்தனை மகள்கள் என்று சொல்வது அந்த மகள்களை தரம் தாழ்த்துவதாகுமா? அனைத்து உலக மொழிகளுக்கும் தாயாக விளங்குவது தமிழ் தான் என்பது பெருமைக்குரிய விசயம் தானே? எந்த ஓர் அகழ்விலும் தமிழைத் தாண்டிய தொன்மையான மொழியே இந்தியாவில் கிடைக்காத போது எதை வைத்துத் தமிழ் மொழி குடும்பத்தில் வந்த மொழிகள் தமிழைவிட மூத்தது?
எத்தனைச் சங்கங்கள் வைத்து மொழி வளர்த்தன இம்மொழிகள்?
தமிழ் மொழி எதையும் நிலைநாட்ட வேண்டியதில்லை உண்மை என்னவோ அதைத் தான் சொல்கிறார்கள். வெற்றுப் பெருமையை நாடும் பிற மாநில மக்கள் தேவையில்லாத போட்டியில் இறங்குவது தான் தவறானது உண்மைக்குப் புறம்பானது.”(மகள், மகன் என்பனவற்றிற்குப் பன்மை மக்கள்.)
இதே வினாவிற்கு ஆராய்ச்சியாளர் இரவிசிவன் பின்வருமாறு விடையிறுக்கிறார்
காலச்சூழலில் தாயை விட்டு தொலைதூரம் சென்ற காரணத்தினால் மற்றும் அறியாமையால் தாயைத் தெரியாத குழந்தைகள் இருக்கலாம். ஆனால் தாய்க்கு மட்டும்தான் தெரியும் தன்னிலிருந்தே பிறந்தவர்கள் இவர்கள் என்று . அவர்களுக்கு இச்செய்தியை உணர்த்த வேண்டிய கடமையும் தாய்க்குத்தான் உண்டு.
இல்லையெனில், தாயை வழிபட வேண்டிய பிள்ளைகள் மூடர்களின் வழிகாட்டுதலில் தன் பிறப்புக்கு காரணமான தாயைத் தூற்றிக் கொண்டிருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
தாயும் வாயை மூடி மௌனித்திருந்தால், தகுதியற்றவள் கூட உள்ளே நுழைந்து ‘தான்தான் தாயென’ – சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிடுவாள். (விட்டாள்??).
கன்னடம் திரிந்துள்ள முறைகள்
மொழி ஞாயிறு பாவாணர், பேரா.முனைவர் சி.இலக்குவனார் முதலிய அறிஞர்கள் கன்னடம் திரிந்துள்ள முறைகள் எனப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
1. ப ஃக வாக மாறியுள்ளது.
பள்ளி ஃகள்ளி; பாடு ஃகாடு.
2. உயிரீற்றுப் பேறு.
எதிர் எதிரு; இருந்தேன் இருந்தேனெ.
3. தொகுத்தல் திரிபு.
இருவர் இப்பரு; இருந்தேன் இத்தேன.
4. வல்லொற்று மிகாமை.
ஓலைக்காரன் ஓலகார; நினக்கு நினகெ.
5. சொற்றிரிபு.
மற்றொன்று மத்தொந்து
முதலாயின மொதலானய.
6. போலி.
வேடர் பேடரு ; செலவு கெலவு.
7. எதிர்மறை இடைநிலைக் குறுக்கம்
இராதே இரதெ.
8. பெயரீற்றுப் பால் விகுதிக் கேடு.
குருடன் குருட; மகன் மக;
அப்பன் அப்ப.
9. வேற்றுமை உருபின் திரிபு.
நின்னால் நின்னிந்த
நின்கண் நிந்நொள் நிந்நல்லி
10.விகுதி மாற்றம்
அன் அம் ஆதல்;
செய்கிறேன் செய்தபெம்.
இவ்வாறு இலக்கண வகையாக மொழியியல் நோக்கில் அறிஞர்கள் மெய்ப்பித்திருக்கும் பொழுது தமிழ்த்தாயிலிருந்து பிறந்ததே கன்னடச்சேய் என்னும் ஆய்வு உண்மையை ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம்?
கன்னடத்தை முற்பட்டதாகக் கூறும் தவறான வாதங்கள்
கன்னடத்தைக் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்று முற்பட்டதாகக் காட்ட சிலர் முயல்கின்றனர். ஒரு வேளை அது உண்மையாக இருந்தாலும் தமிழுக்குப் பிற்பட்டதே ஆகும். எனினும் இவ்வாறு கூறுவது தவறு எனப் பேரா.முனைவர் சி.இலக்குவனார் பின்வருமாறு கூறுகிறார்.
“கன்னடச் சொற்கள் கிரேக்க மொழியார் நூல்களில் காணப்படுகின்றனவென்றும், அந் நூல்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும் கூறிக் கன்னடத்தின் பழமையை நிலைநாட்டுவாருமுளர்.
கன்னட மொழியின் பழமையான நூல் கவிராசமார்க்கம் என்ற இலக்கண நூல்தான். அதன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்பர். அஃது ஓர் அணியிலக்கண நூலாக இருத்தலினால் அதற்கு முன்பு பல இலக்கண இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும் என்பாரும் உளர். கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர்க் கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளில் இலக்கியம் தோன்றவில்லை என்று ஆராய்ச்சியாளர் வரையறுத்துள்ளனர்.” எனவே, முன்பு பல இலக்கண இலக்கியங்கள் இருந்திருக்கக் கூடும் என்ற கருத்தும் தவறாகும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
இனிய உதயம், சூலை 2025, பக்.24-25
(தொடரும்)
No comments:
Post a Comment