சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19
மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார்
புலவர் கணி புன்குன்றனார், நற்றிணை 226.1-3
சிலர் புலவர் பெயரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடிய கணியன் பூங்குன்றனார் எனக் குறிப்பிடுகின்றனர்.
சொற்பொருள்: மரம் சா – மரம் சாகும்படி; உரம் சா – வலிமை குன்றும்படி: பொன்னுங் கொள்ளார் மன்னர் – ஆள்வோர் இறைப்பொருள் வாங்க மாட்டார்.
இலை, பூ, காய், கனி, வேர், பட்டை முதலான எல்லா வகையிலும் மருந்தாகப் பயன்படும் மருந்து மரத்தை அதன் சிறப்பான பயன் அனைத்தும் ஒருங்கே கிடைக்க வேண்டும் என்று மரத்தை வீழ்த்திப் பயன்படுத்துவார்களா? அல்லது மரத்தைப் பட்டுப்போகச் செய்வார்களா?
வலிமை பெறத் தவம் இருப்பவர்கள், தங்கள் வலிமை கெடும்படிப் பட்டினி கிடந்து வலிமை குன்றுவார்களா?
மக்களின் பொருள் வளம் அழியும்படி வரிப்பொருள் பெறுவார்களா?
இவ்வாறெல்லாம் செய்ய மாட்டார்கள் அல்லவா?
இப்பாடலின் மையப் பொருள் இக்கருத்துகள் அல்ல. இவற்றின் மூலம் பொருள் திரட்டச் சென்ற தலைவன் திரும்புவதற்குள் அதன் பயனைத் துய்க்கத், தான் இருக்க வேண்டுமல்லவா?
தானில்லாதுபோன பின்பு செல்வம் திரட்டி வந்து என்ன பயன்? எனத் தலைவி, தோழியிடம் உணர்த்துவதே! இருப்பினும் இவ்வுவமைகள் மூலம் மூன்று அறக்கருத்துகளைப் புலவர் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்றைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம்.
அரசன் எவ்வாறு வரி திரட்ட வேண்டும்?
“காய் நெல்லறுத்து” எனத் தொடங்கும் பாடலில் புலவர் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வரியை அளவறிந்து பெற வேண்டும் என அறிவுரை கூறியுள்ளதை நாமறிவோம்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
(திருக்குறள், ௫௱௫௰௨ – 552)
என்கிறார் திருவள்ளுவர்.
ஆள்வோர் குடிமக்களிடம் முறை கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்கிறார் இதில்.
அதேபோல் மக்களிடம் பொருளைப் பறித்துப் பொருளைத் திரட்ட மாடடார்கள் என்று அக்கால் ஆள்வோர் நடைமுறையைக் குறிப்பிடுகிறார். இதன்மூலம் மக்களிடம் பொருளைப் பறித்துப் பொருளைத் திரட்டாதே எனப் பிற்காலத்தவருக்கு அறிவுரை வழங்குகிறார் புலவர் கணி புன்குன்றனார்.
“வரியை அளவோடு! பெறுக! நாட்டை வளமாக ஆக்குக!” என்பதே தமிழ் நெறி.
எனவே, சங்கப் புலவர் பொன்னுரை வழி நடந்து ஆள்வோரிடம் மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே! என்கிறோம் நாமும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
தாய் 31.07.2025
No comments:
Post a Comment