இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 415)

வழுக்கும் சேற்று நிலத்தில் நடக்க உதவும் ஊன்றுகோல்போல் வாழக்கையில் வழுக்க நேரும் பொழுது ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் உதவும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆள்வோர் வழிதவற நேரும் பொழுது  ஒழுக்கமுள்ளவர்கள் சொற்கள் நல்வழி காட்டும் என்கின்றனர் அரசியலறிஞர்கள். ஆள்வோருக்கு மட்டுமல்ல யாவருக்குமே இது பொருந்தும்.

கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’  எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார் என்கிறார் பரிமேலழகர். எனவே, கல்வி ஒழுக்கங்களில் சிறந்தவர் சொற்களே நமக்குத் துணை புரியும். மாறானவர்கள் சொற்கள் நம்மைத் தீய வழியில் இட்டுச் செல்லும். எனவே, கேட்பது முதன்மை அல்ல. யாரிடம் கேட்க வேண்டும் என்பதுதான் முதன்மையானது.

பேராசிரியர் சி.இலக்குவனார், “அரசியல் வாழ்வும் சேற்று நிலம் போன்றதே வழுக்கி விழக்கூடிய வாய்ப்புகள் அடிக்கடி ஏற்படும். அவ்வமயங்களில் துணை புரிவது ஒழுக்கமுடையார் அறிவுரை” என்கிறார். ஆதலின் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களும் அரசியலிலும் ஆட்சித்துறைகளிலும் இருப்பவர்களும் நல்லோர் அறிவுரைகளைக் கேட்டு நடந்தால் நாட்டில் நல்லாட்சி நடைபெறும். குடும்பத்திலும் நல்லோர் அறிவுரைகளைத் துணையாகக் கொண்டால்,  தீமைகள் வராமல் தடுக்கவும் வந்த தீமைகளிலிருந்து மீளவும் முடியும்.

“வாய்ச்சொல் என்பது தப்பாது பயன்படும் வாய்மைச்சொல் எனினுமாம்” எனத் தேவநேயப்பாவாணர் விளக்குகிறார். வழுக்கு நிலத்தில் தடையின்றி நடக்க ஊன்றுகோல் உதவத்தான் செய்யும். நடக்க வேண்டியது நாம்தான். எனவே, ஊன்றுகோல் துணையின்றி நடக்கும் வகையில் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து இருத்தல் வேண்டும்.

ஒழுக்கமுடையார் அறிவுரைகளை ஊன்றுகோலாகக் கொண்டு சிறந்திடுக!