(குறள் கடலில் சில துளிகள் 3 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி)

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி

 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 418)

கேள்விச்செல்வத்திற்கு இடம் தராத காதுகள் ஓசையை மட்டும் கேட்கும் செவிட்டுத்தன்மை உடையனவே என்கிறார் திருவள்ளுவர்.

புறச்செவி உள்ளே நடுச்செவி உள்ளது. இதில் செவிப்பறை குழி உள்ளது. செவியில் அமைந்த இயற்கைத் துளை என்னும் அறிவியல் உண்மைபோல் அதில் நற்பொருள்ள ஒலி அதிர்வுகள் மோதுவதையே தோட்கப்படுதல் என்கிறார் திருவள்ளுவர்.

கேள்வியால் தோட்கப்படாத செவி = கேள்வியால் துளைக்கப்படாத செவி. பொதுவாக யாரும் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் அல்லது பேசிக்கொண்டே இருந்தால், ஏன் இப்படிக்காதைத் துளைத்தெடுக்கிறாய் என்று இப்பொழுதும் சொல்வதுண்டு. துளை > தொளை என்றாகி அதன் வேர்ச்சொல்லான தொள் > தோள் ஆனது. எனவே, தோள் என்றால் துளை என்றும் பொருள். அறிவார்ந்த செய்திகளால் துளையின் வழியாக உள்ளே செல்லாத – தோட்கப்படாத செவி – என்கிறார். செவி ஓசைகளைக் கேட்கும் புலனாகும். எனினும், கேள்விச்செல்வம் செவிகளில் தோட்கப்படாவிட்டால் அவை பயனற்றன. வெறும் ஓசைகளைமட்டும் கேட்கும் திறன் உள்ள அவை செவிகளல்ல என்கிறார் திருவள்ளுவர்.

காலிங்கர், “சான்றோருழைச் சென்று தாம் கேட்கும் கேள்வியாகின்ற கூரிய கடைகோலான் இரண்டாவது துளையிடப்படாத செவிகள்” என விளக்குகிறார். பரிமேலழகர், “மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார்” என்கிறார்.

 அறிவுரைகளைக் கேட்கும் பொழுது காதைத் துளைப்பது போன்று துன்பம் தருவதாக இருக்கலாம். எனினும் உயர்ந்த கருத்துகளைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். கற்காதவன் கண்ணில்லாதவன்கேட்காதவன் செவி இல்லாதவன் என்பதே திருக்குறள் நெறி.