(குறள் கடலில் சில துளிகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 416)

சொல்லப்படும் அளவைப் பொருட்படுத்தாமல் நல்லவற்றைக் கேட்க. அஃது அந்த அளவிற்கேனும் சிறந்த பெருமை தரும் என்கிறார் திருவள்ளுவர்.

பெருனார்டு பரூச்சு (Bernard M. Baruch) என்னும் அரசியலாளர், “நான் அறிந்த பெரும்பாலான வெற்றியாளர்கள், கேட்பதில் கருத்து செலுத்தியவர்களே” என்கிறார்.

“எனைத்தானும்” என்பதற்கு எவ்வளவு ஆயினும் என்று மணக்குடவர்காலிங்கர்பரிமேலழகர்  உரைக்கின்றனர். பரிதிபரிப்பெருமாள் ஆகிய இருவரும் எத்தன்மையாயினும் என்று விளக்குகின்றனர். பரிதி “எனைத்தானும்” என்பதற்கு என்றென்றும் ஏதாயினும் என்று  அளவுடன் காலத்தையும் குறிப்பிடுகிறார்கேட்கும் அளவு சிறியதாக இருந்தாலும் எத்தன்மை கொண்டதாக இருந்தாலும் எக்காலமாக இருந்தாலும் நல்லவற்றைக் கேட்க வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். இல்லையேல் தீயானவற்றைக் கேட்டு அதனால் தாமும் கெட்டுத் தம்மைச் சார்ந்தோரையும் தீயவற்றில் தள்ளுவர்.

“அனைத்தானும்” என்று கேட்கும் அளவிற்குச் சிறப்பான பெருமை தரும் எனக் கூறுவதன் மூலம் மிகுதியாகக் கேட்டு மிகுதியாகப் பெருமை அடைய திருவள்ளுவர் உணர்த்துகிறார். அதே போல் நல்வற்றைக் கேட்கச் சிறிது நேரம் கிடைத்தால் சிறிதுநேரம்தானே என்று ஒதுக்கக் கூடாது. அந்த அளவிற்கேனும் நல்லன நடக்கும் என்பதால் சிற்றளவுபேரளவு என்று அளவைப் பொருட்படுத்தாமல் கேட்க வேண்டும்.  கேட்பது சிறியதாயினும் சீரியன நடக்கும் என்பதை உணர வேண்டும்.

உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் நமக்குச் சொல்ல இவர்களிடம் என்ன இருக்கிறது என்ற எண்ணாமல் நல்லனவற்றைக் கேட்க வேண்டும். எளிய நிலையில் இருந்தாலும் இவற்றைக் கேட்டு என்ன பயன் என எண்ணாமல், தன்னலம் கருதியும் தன்னைச்சார்ந்தோர் நலன் கருதியும் நல்லனவற்றைக் கேட்க வேண்டும்.