மொழிப்போர் நமது பாடத்திட்டத்தில் இடம் பெறாததால்தான் இன்றைய தலைமுறையினருக்கு மொழிப்போராளிகள் குறித்தோ, இந்தி முதலான பிற மொழித்திணிப்புகளின் கொடுமை குறித்தோ தமிழ்க்காப்பு உணர்வு தேவை என்பது குறித்தோ ஒன்றும் தெரியவில்லை. இனி ஒரு மொழிப்போர் தோன்றாத அளவிற்கு இந்தித்திணிப்புகளும் பிற மொழித்திணி்பபுகளும் இலலாதவாறு ஆவன செய்ய மொழிப்போர் வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும்.

  இந்தித்திணிப்பை மட்டும் குறிப்பிடாமல் சமற்கிருதம், ஆங்கிலம் முதலான பிற மொழித்திணிப்புகளையும் அவற்றிற்கான எதிர்வினைகளையும் பார்க்கப்போகிறோம். எனவே்தான்,  இந்தித்திணிப்பு என்றோ இந்தி எதிர்ப்புப் போர் என்றோ குறிக்காமல் பொதுவாக மொழிப்போர் எனக் குறித்துள்ளேன்.

மொழிப்போர் என்பது அதனதன் வளர்ச்சியில் செல்லும் எந்த மொழிக்கும் எதிரான போரன்று. சொந்த மொழிக்கு எதிராக எந்த மொழியேனும் ஆதிக்கம் செலுத்துமானால் அவ்வாறு வந்த மொழிக்கு எதிரான தாய்மொழிக்காப்புப் போர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமற்கிருதமும் இந்தியும் இப்போது ஆங்கிலமும் தமிழின் வளர்ச்சியைக்  கெடுப்பதற்காகத் தமிழ்ப்பயன்பாட்டை இல்லாமல் ஆக்குவதற்காகத் திணிக்கப்படுவதால் அவற்றிற்கு எதிரான போர். போர் என்றால் ஆயுதந் தாங்கி எதிர்க்கும் போரன்று. ஆனால், இப்போதைய நிலை நீடித்தால் அத்தகைய நிலை கூட வரலாம். கருத்துப் போராகவும் கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம், சிறை புகுதல், தன்னுயிர் இழத்தல் என்று தம்மைப் பலிகொடுக்கும் செயற்போராகும்.  

விடுதலை வீரர் இயோமேன் டி.வேலரா(Éamon/Yeoman de Valera: 14.10.1882-29.08.1975) அயர்லாந்து நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர். நாட்டு விடுதலைக்குப் பின் அந்நாட்டின் மூன்றாவது தலைவரானவர். அவரிடம் ஆங்கிலேய அரசு கேட்டது, “உங்களுக்கு மொழி வேண்டுமா? நாடு வேண்டுமா?” “‘எங்களுக்கு முதலில் மொழி வேண்டும். பிறகு நாடு!” எனத் தெளிவாய்ச் சொன்னார் டி. வேலரா. “ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் இனத்தை அழிக்க வேண்டும். இனத்தை அழிக்க வேண்டுமென்றால் மொழியை அழிக்க வேண்டும்.” என்பர் வரலாற்று அறிஞர்கள். எனவேதான் தமிழ் மக்களும் தமிழ் நாட்டைக் காக்க, தமிழினத்தைக் காக்க, தமிழ் மொழியைக் காக்கத் துடித்தெழுந்தனர்; துடித்தெழுகின்றனர்.

தமிழ்நாட்டில் மொழிப்போர் வரலாற்றை நான்கு காலக்கட்டங்களாகப் பிரிக்கின்றனர்.

   1938 – 1940: முதல் மொழிப்போர்

   1948 – 1952: இரண்டாம் மொழிப்போர்

   1965 – ஐம்பது நாட்கள் – மூன்றாம் மொழிப்போர்

  1986 – நூற்று நாற்பத்து நான்கு நாட்கள் – நான்காம் மொழிப்போர்.

கட்டாய இந்திக்கல்வி ஆணையால் நேர்ந்த மொழிப்போராட்டங்களின் தீவிர அடிப்படையில் 1938-40 எனக் குறித்தாலும் சிலர் இதன் தொடக்க அடிப்படையில் 1930-40 என்றும் சொல்வர்.

அதுபோல் 1965 என்பதுதான் மொழிப்போர் நடைபெற்ற ஆண்டு. எனினும் இதற்கான போராட்டக் களம் தொடங்கிய அடிப்படையில் சிலர் 1962-65 என்றும் குறிப்பர்.

இதனை ஐந்து கட்டங்களாகக் கூறுவோரும் ஆறு கட்டங்களாகக் கூறுவோரும் உளர். படைத்துறையினரை அரசு வரவழைத்துக் கொடுமைகள் நேர்ந்த 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புதான் மொழிப்போர். பிற போராட்டங்களே என்பர் பலர். இஃது உண்மையாக இருந்தாலும் போரின் பகுதிகளே போராட்டங்கள் என்ற அளவில் அனைத்தையும் நாமறிய வேண்டும்.

நாம் ஈராயிரம் ஆண்டுகளாகச் சமற்கிருதத்திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் மொழிப்போர் வரலாற்றில் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதுபோல், நான்காம் போருக்குப் பிந்தைய மொழித்திணிப்பு எதிர்ப்புக் கிளர்ச்சிகள் என  அவற்றையும் இவற்றிற்கெல்லாம் காரணமான இந்தித்திணிப்புகள் தொடருவதையும் பார்ப்பதே சரியாக இருக்கும்.

எனினும் இப்போது நமக்குத் தேவை மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு. சமற்கிருதம், இந்தி, ஆங்கிலத் திணிப்பு நாளும் நடந்து கொண்டு வருகிறது. இதற்கு எதிரான மாபெரும் எதிர்ப்பு மக்களிடம் இருந்து கிளம்பியாக வேண்டும். மும்மொழித்திணிப்பு நின்று போனாலே தமிழ்க்காப்பு உணர்ச்சி நிலை நின்று, இசையில் தெலுங்கு முதலான பிற மொழித் திணிப்புகள் நடைபெறுவதும் நின்று விடும்.

கடந்த நூற்றாண்டில் உருவாகிய இந்தித் திணிப்பையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் இவற்றின் தொடர்ச்சிகளையும் நாம் காணப் போகிறோம். ஆனால், அதற்கு முன்னதாகத் தமிழ்க்காப்புணர்வு  நமக்குக் காலங்காலமாக இருந்தது என்பதையும் பார்ப்போம்.

பாலி, பிராகிருதம் என்பன சமற்கிருதத்திற்கு முற்பட்டவை. சமற்கிருதத்தைச் சங்கதம் என்பர்.  பிராகிருதம் தனி மொழியல்ல, ஒரு மொழிக் குடும்பத்தின் பெயர் என்றும் கூறுவர். எவ்வாறு இருப்பினும் இவை தமிழுக்குப் பிற்பட்டனவே. அவ்வாறாயின் சமற்கிருதம் முற்றிலும் பிற்பட்டது என்பது புரியும். சமற்கிருதம் மிகவும் பிற்போக்கான மொழியும் கூட. பெண்களை இழிவுபடுத்துவனவே சமற்கிருத நூல்கள். பெண்கள் சமற்கிருதத்தைப் பேசக் கூடாது என்பதால் சமற்கிருத நூல்களில் கல்விக் கடவுளான சரசுவதியும் சமற்கிருதத்தில் பேசாமல் பிராகிருதத்தில் பேசுவார். எனவே, சமற்கிருதம் என்பது பேச்சு மொழியாக இ ருந்ததில்லை எனலாம்.

தமிழைப்பழித்துச் சமற்கிருதத்தை உயர்த்தியவனுக்கு நக்கீரர் வழங்கிய சாவுத் தண்டனையும் மறுவாழ்வும்

இப்படிப்பட்ட சமற்கிருதத்தைக் குயக்கொண்டான் என்பவன் உயர்த்திக் கூறித் தமிழைத் தாழ்த்திக் கூறினான். எனவே புலவர் நக்கீரர் அவனுக்கு  எதிராக

முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி – யரணிய
லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட
னானந்தஞ் சேர்க சுவா

எனப்பாடி அவனைச் சாகடித்தார். பிறர் அவன்மீது கருணை காட்டுமாறு மக்கள் கூறியதால்

ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் – சீரிய
வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா

 என மற்றொரு பாடலைப்பாடி அவனுக்கு உயிர் கொடுத்தார்.

“நிறைமொழி மாந்தர்” என்னும் தொல்காப்பியச் சூத்திர உரையில் மந்திரம் என்பதை விளக்க வந்த பேராசிரியர், நக்கீரரின் இப்பாடல்களை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். எனவே, காலங்காலமாக இச்செய்தி வழக்கில் இருந்து வருவதை அறியலாம்.

இதனைக் கட்டுக்கதை என்பாரும் உளர். அவ்வாறு கற்பனையாக இருப்பினும் இத்தகைய கதை எழுவதற்கான காரணம் என்ன? சமற்கிருத்தைத் தவறாக உயர்த்திக் கூறியதால் எழுந்த சமற்கிருத எதிர்ப்பு உணர்வுதானே. எனவே தமிழ்க்காப்பு உணர்வும் அதனால் சமற்கிருத எதிர்ப்பு உணர்வும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன என அறியலாம்.

(தொடரும்)