(குறள் கடலில் சில துளிகள் 2 – இலக்குவனார்திருவள்ளுவன்-தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள் 3
கேள்விச்செல்வத்தால் அறியாமையைப் போக்கு!
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 417)
நுட்பமாக ஆராய்ந்து மிகுதியான கேள்விச்செல்வம் பெற்றவர்கள் தவறாக உணரந்தாலும் அறியாமையானவற்றைச் சொல்ல மாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர்.
உளவியலறிஞர்கள். கவனித்துக் கேட்டல் அறிவாற்றலையும் ஒழுக்க நடத்தையையும் உள்ளடக்கியது. ஆதலின் அறியாமையை வெளிப்படுத்த மாட்டார்கள் என்கின்றனர்.
காலிங்கர், “ ‘பிழைத்தும்-உணர்ந்தும்’ எனப் பிரித்துத் ‘தப்பியும்’ ‘குறிக்கொண்டும்’ என்று இரண்டாக்கினார். இது கேள்விச் செல்வம் உடையோர் அறியாமலோ அறிந்தோ இவ்விருவகையானும் அறிவற்ற பேச்சு பேசார் என்ற பொருள் தரும்.” என விளக்குகிறார்.
பரிமேலழகர், இழைத்துணர்ந்து என்பதற்குப் “பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்; ஈண்டுதல்- பலவாற்றான் வந்து நிறைதல்” என்கிறார்.
பிழைத்து உணர்ந்து என்று சொல்லாமல் உம்மைச் சேர்த்துப் பிழைத்து உணர்ந்தும் என்று சொல்வதால், நன்கு ஆராய்ந்து கற்போர், தவறாக உணரமாட்டார். ஒருவேளை உணர்ந்தாலும் அதனைப் பிறருக்குச் சொல்ல மாட்டார் என்பதைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.
ஒன்றைப் படிக்கும் பொழுது சொல்லப்பட்ட முறையாலோ புரிதலில் இடர்ப்பாடு ஏற்பட்டாலோ பிழையாகப் புரிந்து கொள்ள நேரிடும். கற்றதில் தவறு நேர்ந்தது என உணர்ந்தவரகள் உடன் தன் அறியாமையைப் பிறருக்குப் புலப்படுத்த மாட்டார். கேள்விச் செல்வத்தால் அறியாமையை அகற்றிக் கொள்வார். கேட்பதிலும் தவறானவை இடம் பெறலாம். எனவேதான் நிறைந்த கேள்வி என்கிறார் திருவள்ளுவர். எனவே, நுட்பமாக ஆராய்ந்து கற்றவர்கள் தங்கள் அறியாமையைப் புலப்படுத்தாமல், கேள்விச்செல்வத்தால் அவற்றைப் போக்கிக் கொள்வர். எனவே, கற்பதில் ஏற்படும் ஐயங்களைப் போக்கவல்லது கேள்விச்செல்வமே!
தவறானவற்றைப் பிறருக்குச் சொல்லாமல், கேள்விச்செல்வத்தால் அவற்றைப் போக்கு!
– இலக்குவனார் திருவள்ளுவன்
குறட் கடலிற் சில துளிகள்
No comments:
Post a Comment