(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-2 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
தமிழினம் வாழ
மொழிப்போர் வரலாறு அறிவோம்!
3
ஆரிய மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை
இடைக்காலத்தில் திருஞானசம்பந்தரே ஆரியச் சடங்குகளைத் தவிர்த்துத் தமிழ் மறை ஓதிச்சடங்கு செய்து கொண்டார் அல்லவா? அவ்வாறிருக்க சங்கக்கால இறுதியில் மட்டும் ஆரியச்சடங்குகளைச் செய்திருப்பார்களா?
ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!, தினச்செய்தி, 05.09.2019)
பாவேந்தர் பாரதிதாசன் மறைமலையடிகளாரின் தமிழ் நான்மறை கருத்தை ஏற்று,
“மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்
மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல்”
என்கிறார்.
சைவ சமயத்திலும் சமற்கிருத எதிர்ப்பு, சமற்கிருத ஆதரவு என்ற இரு நிலைப்பாடு உள்ளது. சைவம் வளர்த்த குரவர்கள், தமிழுக்குத்தான் முதன்மைஅளித்துள்ளனர். ஆனால், ஒரு பகுதியினர், சைவம் தமிழ் மதம் அல்ல, வேத நெறியில் இருந்து உருவானது என்று பரப்பி வருகின்றனர். தலைவர்களைத் திராவிடர் இயக்கத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்கிறார்கள் இத்தகையோர்.
“சைவாலயங்களில் சமற்கிருத மந்திரங்களே வேண்டும். “தமிழர்ச்சனைக் கலகம்” என்றெலலாம் நூல்கள் எழுதி உள்ளனர். இது குறித்துச் ‘சைவ சமயத்தில் மொழிப்போர்’ என்னும் நூலில் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை(1897-1971) எழுதியுள்ளார். தமிழ் வழிபாடுகளை வலியுறுத்தும் சைவ நெறித் தலைவர்களைச் சைவசமயத்தை ஆரியமதமாகத் திரிப்போர் கண்டிக்கின்றனர். குன்றக்குடி அடிகளார் போன்ற ஆதீனகர்த்தர்களையும் பழிக்கின்றனர். இத்தகைய போக்கினால்தான் ஆதினகருத்தாக்களில் ஒரு பகுதியினர் சமற்கிருத ஆதரவாளராக இருக்கின்றனர். இன்றைக்கும் வரைக்கும் தருமபுரம் ஆதினத்தில் உள்ள கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் வழிபாடு இல்லை.
‘அந்தணர்’ என்போர் தமிழரே! ‘மறை’ என்பது தமிழ் மறையே! பின்னர் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்த பின்னர், அவருள் சிறந்தோரையும் அவர் உயர்வெனக் கருதிய நூலையும் ‘அந்தணர்’ என்றும் ‘மறை’ என்றும் அழைத்துக் கொண்டனர். மேலைநாட்டுக் கிறித்துவர்கள் ‘ஐயர்’ என்றும் ‘சாசுதிரி’ என்றும் அழைத்துக் கொண்டனர் அன்றோ?(பேரா.சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி)
தமிழ்ப்பயன்பாட்டை வலியுறுத்துவதும் மொழிப்போர் அடையாளமே!
பல்லவர் காலத்தில் தமிழினும் சமற்கிருத மொழி உயர்ந்தது என்றும் கடவுளுக்கு அம்மொழியே உகந்தது என்றும் கூறிச் செயற்பட்டோர் உருவாகினர். எனவேதான், அப்பர்,
‘தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்‘
என்று பாடினார். அவ்வாறு அவர் பாடியதும் மொழிப்போராட்டத்தின் அடையாளமே. மொழிப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் வாழ்வார் தம்மைத் தமிழராகக் கொண்டு, தமிழே சிறந்த மொழி என உணர்ந்து இணைந்து வாழ வேண்டும்.
இவ்வாறு சமயத்தில் சமற்கிருதம் புகுந்ததும் இறைநெறியாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவும் மொழிப்போராட்டம்தான். இந்த மொழிப்போராட்டம் இன்றும் ஓயவில்லை. விரும்புவோர்க்குத் தமிழ்வழிபாடு என்பதும் அலைபேசியில் அழைத்து அருச்சகர்களை வரவழைத்துத் தமிழ் அருச்சனை செய்யலாம் என்பதும் தமிழன்னையை இழிவு படுத்துவதே! தமிழ்நாட்டில் எதற்குத் தமிழ் வழிபாட்டை விருப்ப வழிபாட்டாக மாற்ற வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழ்வழிபாடு மட்டுமே என்ற நிலை இருந்தால்தான் தமிழர்க்கு அழகு. அந்நிலை வரும் வரை இதற்கான மொழிப்போராட்டமும் தொடரத்தான் செய்யும்.
இசையிலே புகுந்தன தெலுங்கு, கன்னட, சமற்கிருதப்பாடல்கள். மொழித்தொன்மையைப்போன்ற தொன்மையுடையது இசைத்தமிழ். அந்த இசைத்தமிழ் மேடைகளில் புறக்கணிக்கப்பட்டது. தமிழ்ப்பாடல்களைக் கேட்டுக்கேட்டுத் தெலுங்கு முதலிய மொழிகளில் பாடியோர் அவரவர் மொழிப்பகுதிகளுக்குச் சென்றவர் அல்லர். அஃதாவது தமிழ்நாட்டைக் கடந்தவர்கள் அல்லர். தமிழிசையால் கவரப்பட்டுத் தம் மொழிக்கு அவற்றை ஈர்க்க வேண்டும் என்ற மொழிப்பற்றால் பாடினர். ஆனால், நாமோ அப்பாடல்களை எடுத்துக் கொண்டு தமிழ்ப்பாடல்களைத் தூக்கி எறிந்து விட்டோம். சீர்காழி மூவர் தமிழிசைக்கு மீளேற்றம் கொடுத்ததும் மொழிப்போராட்டம்தான்.
எனினும் மேடைகளில் தமிழ்ப்பாட்டிற்கு இடமில்லை. அப்படி இடம் பெறும் இடங்களிலும் கடைசியாகத் ‘துக்கடா’ என்ற பெயரில் இடம் பெறும்.
பிறமொழி இசைத்திணிப்புகளை எதிர்த்ததும் மொழிப்போரே!
இதுகுறித்துப் புரட்சிக்கவிஞர் பாரதியார், தோல்காது உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் இரும்புக்காதுகள் நமக்கு உள்ளதால்தான் நாம் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் அன்றே கவலைப்பட்டார். பாரதி பெயரால் தமிழ் வளர்ப்போர்கள் இனியும் பொறுக்கலாமா? “பாடுகிறவர்கள் தமிழர்கள்; கேட்பவர்களும் தமிழர்கள்; ஆனால், தமிழ்ப்பாட்டுமட்டும் பாடுவது கிடையாது. என்ன வெட்கக்ககேடு! எவ்வளவுகாலம் தமிழர்கள் இதனைச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்” என அன்றே கேட்டார் அறிஞர் வெ.சாமிநாதசர்மா. இன்னும் நாம் பொறுமை காக்கின்றோமே! பிடில் சீனிவாசையர், “தமிழிசைதான் தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும் மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பண்பு தமிழிசைக்குஉண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்கவந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என வேதனையில் வெடித்தாரே! நாம் தொடர்ந்து எத்தனை காலம்தான் களைகளை வளர்த்துத் தமிழ்ப்பயிரை அழித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
தமிழைப் புறக்கணிக்கின்றவர்களுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்ற நிலை என்று உருவாகும்? யாரால் உருவாகும்? நாம் நினைத்தால் அந்த நிலை இன்றே உருவாகும். அது நம்மால்தான் உருவாக வேண்டும்! எனவே, முதலில் நாம் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும். ஆனால், நாம் இந்த நிகழ்ச்சியை மட்டும்புறக்கணித்தால் தமிழ்த்தாய் மகிழ மாட்டாள். (தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா?-3, இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல மின்னிதழ்,29.12.2013)
தமிழ்ப்பாட்டு பாடு இல்லையேல் ஓடு!
தமிழ்க்கடலில் நஞ்சு கலக்கும் இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள், விளம்பரதாரர்கள், என அனைத்துத் தரப்பாரின் பிற நிகழ்ச்சிகளையும் அவர்கள் தொடர்பான பொருள்களையும் நாம் புறக்கணிக்கவேண்டும்.
தமிழ்ப்பாட்டு பாடு
தமிழ்ப்பாட்டிற்கு ஆடு
இல்லையேல் ஓடு
என்பதை நாம் ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டும். ஊர்கள் தோறும் நஞ்சாறு ஓடும்முன் நாம் சென்னையிலேயே அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
உலக இசைகளி்ல் எல்லாம் தொன்மையும் நுண்மையும் மிக்கத் தமிழிசையைக் காக்கவேண்டும் எனில் காவலுக்கு இடையூறு தருபவர்களை இடறி விழச் செய்ய வேண்டும்.(சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு : இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல).
இன்றைக்குச் சென்னையில் திருவையாறு என்பதுபோல், கோவையில் திருவையாறு எனப் பிற ஊர்களிலும் தமிழிசைக்கு எதிரான இசையரங்குகள் நிகழ்கின்றன. இவர்கள் ஆந்திராவில் திருவையாறு எனக் கொண்டாடுவதுதானே?
இவ்வாறு காலங்காலமாக நம் மொழியில்,இலக்கியத்தில், இசையில், கலையில், பண்பாட்டில் ஆரிய ஊடுருல் வரும் பொழுதெல்லாம் மக்கள் எதிர்ப்பு வந்துகொண்டுதான் உள்ளது. இவற்றையெல்லாம் முற்றிலும் ஒழிக்கும் வரை நமக்கு விடிவு இல்லை என்பதை உணர்ந்து இப்பொழுதாவது நாம் விழித்தெழ வேண்டும். பிற மொழிகளின் ஆதிக்கம் எந்த வகையிலும் நம் மீது ஏற்படாத வண்ணம் முனைப்புடன் செயலாற்றி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிப்போர் வரலாறு அறிவோம்!
No comments:
Post a Comment