Wednesday, January 7, 2015

இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது!

இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது!

  வரும் மார்கழி 24 ,2045 / சனவரி 8, 2015 அன்று இலங்கையில் அரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையில் தலைவர் பதவிக்காலம் 6 ஆண்டுகள். எனவே 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்தல் நிகழ வேண்டும். ஆனால், இரண்டாம் முறையாக 2010 இல் தலைரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலன் இராசபக்சே எதிர்ப்புகள் வலுத்து வருவதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறான்.
  பொதுவாகத் தேர்தல் என்றால் தகுதியுடையவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டாமல் போகிறது. போட்டியிடுபவர்களில் குறைந்த தீமையாளன் யார் என அறிந்தே வாக்களிக்கத் தள்ளப்படுகிறோம். இலங்கைத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இதுதான் நிலைமை. பன்னூறாயிர ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த பின்பும் எஞ்சியவர்களுக்கு இழைத்து வரும் கொடுமைகள் நின்றபாடில்லை. எனவே, அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுத் தன்னுடைய கொடுமைகளுக்கெல்லாம் கடுமையாகத் தண்டனை பெறவேண்டிய இராசபக்சே மீளவும் ஆட்சியில் அமரவிடக்கூடாது. எனவே, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இவனை வீழ்த்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர்.
இலங்கையின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1.50.44,490; இவர்களுள் ஈழத்தமிழர்கள் 11.20% உள்ளனர். இன அடிப்படையில் தமிழர்கள் என்று சொல்லாமல் இசுலாமியர்கள் எனப்படுபவர்கள் 9.7% மலையகத் தமிழர்களும் தமிழ்நாட்டு மரபுவழித் தமிழர்களும் 4.20% உள்ளனர். இவர்கள் தாங்களும் தமிழர்கள்தாம் என்பதையும் தமிழ் மக்களுக்கு ஏற்ற தன்னுரிமைஅரசுதான் தாங்களும் சம உரிமையுள்ள குடிமக்களாக வாழ வழி என்பதையும் உணர வேண்டும். அச்ச உணர்விலும் அடிமை உணர்விலும் சிங்களத்தை அண்டிப் பிழைக்கலாம் என எண்ணக்கூடாது. இலங்கையில் சிங்களக் கிறித்துவர்கள் 4.7% பங்கு உள்ளனர். பௌத்தப் பேரினவாதக் கொள்கையாலும் கொடுமைகளாலும் இவர்களும் இன்னல்களுக்கு உள்ளாகி வருபவர்களே! இவர்கள் ஒன்றிணைந்து, சிங்கள மக்களில் மனித நேயம் உள்ளவர்களை ஒருங்கிணைத்தும் சிங்கள வெறியிலிருந்து இளைஞர்களை மீட்டெடுத்தும் தொண்டாற்றினால் சிங்கள-பௌத்த வெறியர்களின் கொட்டத்திற்கு முடிவுகட்ட இயலும்.ஆனால், அதற்கான வாய்ப்பு இத்தேர்தலில் அமையவில்லை.
  இராசபக்சே வரக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருந்தாலே சிறப்புதான். ஆனால், எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் மைத்திரிபாலா சிரிசேனா தேர்தலில் போட்டியிடும் வரை இராசபக்சேயின் அரசில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவன்; பக்சேவிற்கு அடுத்த நிலையில் இருந்து எல்லாவகையிலும் அவனுக்கு இணையான ஊழல் பேர்வழியாகச் செயல்பட்டவன்; பக்சே போன்றே தன்னுடைய உறவினர் கூட்டத்திற்கு மிகுதியான பதவிகள் அளித்தவன்; முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பொழுது சில காலம் படையணிக்கு அதிகாரம் இடும் பொறுப்பில் இருந்து தமிழர்களை அழித்தவன்; தேர்தலில் போட்டியிடும் பொழுதும் கூடத் தன்னுடைய தமிழ்எதிர்ப்போக்கை வெளிப்படுத்தத் தயங்காதவன். இருப்பினும் பக்சே வீழ வேண்டும் என்பதால் தமிழ்த்தேசியக் கூட்டைமைப்பு இவனை ஆதரிக்கிறது. இவ்விருவருள் எவன் வந்தாலும் தமிழ் மக்களுக்குப் பேரவலமே! ஆனால், பக்சே வந்தால் தன் கொடுமைகளைத் தமிழ் மக்களே எதிர்க்கவில்லை எனக் கொக்கரித்து மேலும் எக்காளமிடுவான்.
இவ்விருவரையும் புறக்கணித்து, அங்குள்ள பெரும்பான்மைச் சிங்கள இனத்திலிருந்தே மக்கள் நலம் நாடும் தலைவரை – தமிழர் ஆதரவுத் தலைவரை உருவாக்கத் தவறிவிட்டார்கள். எனவே போட்டியிடும் பிற 17 பேரில் யாரையும் தேர்ந்தெடுக்கும் சூழலும் இல்லை. இச்சூழலில் நாம் அயலகத்திலிருந்து கொண்டு எதுவும் சொல்ல இயலாது.
  தெரியாத தேவதையைவிடத் தெரிந்த பேய்க்கு வாக்களிக்குமாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும், “இது சிங்கள நாடு, நானும சிங்களன்தான். தமிழா வெளியே போ” எனத் தேர்தல் கூட்டம் ஒன்றில் தன் நிலைப்பாட்டைப் பக்சே வெளிப்படுத்தத் தயங்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டைமைப்பு, இசுலாமியத்தமிழர் ஆதவு பெற்ற சூழலிலும் தமிழ் ஈழப்பகுதிப் படைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் தன் தமிழ்ப்பகைப் போக்கையும் சிரிசேனா மறைக்கவில்லை. எனவே, இருவரில் யார் வென்றாலும் தமிழர் நலன்நாடும் செயல் எதுவும் நடைபெறப்போவதில்லை.
  இருவரையும் புறக்கணித்தால், முந்தைய தேர்தல்போல் பக்சேவிற்குச் சார்பாக அமையும் என்றும் கூறுகிறார்கள். அதே போல், தமிழர்களை அச்சுறுத்தியும் கள்ள வாக்களித்தும் வெற்றி பெற எண்ணும் பக்சேவிற்கு நல் வாய்ப்பாக அமையும் என்பதிலும் ஐயமில்லை. ஒரு வேளை யார் வெற்றி பெற்றாலும், வந்த பின் தனக்கு வாக்களிக்கவில்லை என
rajapakshe+1 maithri-sresena01மேலும் கொடுமையைக் கட்டவிழ்த்துவிடலாம். யார் வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை இல்லை.
  இலங்கை அரசுத்தலைவர் விருப்பு வாக்கு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு வாக்காளரும் மூவருக்குத் தன் விருப்ப வாக்கினை அளிக்கலாம். எனவே, 50% இற்கும் மேலாக யாரும் வாக்கு பெறாதபொழுது முதலிரு இடம் பெற்றவர்கள் இரண்டாம் வாக்கு அடிப்படையில் வெற்றி வாய்ப்பைப் பெறுவார்கள். அஃதாவது முதலிரு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பர். பிற வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்களின் இரண்டாம் விருப்ப வாக்குகள் எண்ணப்பெற்று அதிலும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முறையே அதற்கடுத்த, அதற்குமடுத்த விருப்ப வாக்குகள் சேர்க்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் பெரும்பான்மை பெறுபவரே வெற்றி பெற்றவராவார். எனவே, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும். தம் விருப்ப வாக்கு எதையும் இவ்விரு கொடுங்கோலன்களுக்கும் அளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் (திருக்குறள் 508)
என்கிறார் திருவள்ளுவர். ஆராயாமல் ஒருவனைத் தேர்ந்தெடுத்தால் துன்பம் அவ்வாறு தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் வழி முறையினருக்கும்தான் என்பதுதான் இப்போது தமிழர்கள் முன்னுள்ள எச்சரிக்கை. எனவே, நன்கு ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். அத்துடன் கடமை முடிந்ததாக எண்ணாமல் ஈழம மலர உரிய பங்களிப்பையும் ஆற்ற வேண்டும்.
அதே நேரம் இத்தேர்தல் பா.ச.க.வை மேலும் அடையாளம் காட்டுவதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி பெறுபவரின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதாலும் அரசியலறத்தாலும் எந்த நாட்டுத்தலைவரும் பிறநாட்டுத்தலைவர் தேர்தலில் தம் விருப்பையோ வாழ்த்தையோ தெரிவிப்பதை அறிவுடையைமாகக் கருதுவதில்லை. ஆனால், நரேந்திர(மோடி) நேரிலேயே பக்சைவே வாழ்த்தி உள்ளார். பாசகவின் ஊதுகுழலில் ஒன்றான இராசா, பக்சேவை இந்து எனக் கூறுகிறார். அங்கு அழிக்கப்பட்ட தமிழர்களை இந்துக்களாக எண்ணி உள்ளம் வேதனையுறவில்லை. ஆனால், கிறித்துவனாக இருந்து பௌத்தனாக மாறி இனப்படுகொலை செயதவன், தமிழின் அழிப்பு வேலையில் ஈடுபடுவன் இந்துவாகத் தெரிகிறான். ஒருவேளை பக்சே தோல்வியுற்றால் இந்தியா அடைக்கலம் தரலாம். அல்லது குறுக்கு வழியில் பதவியில் அமர உதவலாம். அதையும் மீறி வேறுஒருவர் வெற்றி பெற்றால் அவருடன் இணைந்து அழிப்பு வேலையில் பாசக அரசு துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய போக்கினை மாற்றாவிட்டால தமிழகத்தை மறக்கவேண்டியதுதான் என பா.ச.க.-வின் தமிழகத் தலைவி மரு.தமிழிசைதான் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆனால், நாம் மத்தியில் இருப்பது நமக்குப் பகையான அரசு என்பதை மனத்தில் கொண்டு தமிழையும் தமிழரையும் காப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பக்சேவின் வீழ்ச்சி, காங்கிரசு, பாசகவிற்கும் மரண அடியாக மாற வேண்டும். இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் முடிவிற்குப் பின்னர் இவர்களையும் நாம் திருத்த வேண்டும்.
கொடுங்கோலர்கள் ஒழியட்டும்! துணைநிற்பவர்கள் வீழட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை 60  feat-default
மார்கழி 30, 2045 / சனவரி 4, 2015


No comments:

Post a Comment

Followers

Blog Archive