Saturday, January 10, 2015

கலைச்சொல் தெளிவோம் 35 : தாழி மரம் – bonsai


தாழிமரம்
தாழிமரம்
kalaicho,_thelivoam01 
போன்சாய் (bonsai) என்றால் குறுஞ்செடி வளர்ப்பு, குறுமர வளர்ப்பு என மனையறிவியலில் கையாளுகின்றனர். பொருள் சரியாக இருந்தாலும் சங்கச் சொல் அடிப்படையில் நாம் புதுச் சொல் உருவாக்குவது நன்றல்லாவா?
பானையைக் குறிக்கும் தாழி என்னும் சொல் சங்க இலக்கியங்களில்   எட்டு இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க வரி பின்வருமாறு ஆகும்.
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி (குடவாயில் கீரத்தனார்ர : அகநானூறு 129: 7)
தாழியாகிய மட்பாண்டத்தில் வளர்க்கப்படும் பருத்திச் செடியை இது குறிக்கிறது. மண்தொட்டிகளில் சிறு செடிகளை வளர்க்க இயலும். ஆனால் பிறவற்றையும் வளர்க்கும் வேளாண் நுண்ணறிவு பழந்தமிழர்க்கு இருந்துள்ளது. பின்னரும்
தாழிக்குவளை சூழ்செங்கழுநீர் (சிலப். 5, 192) என வந்துள்ளதை நோக்கும் பொழுது தோட்டக்கலையிலும் சிறந்திருந்த தமிழர்கள் தாழியில் மரம், செடி, கொடிகள் வளர்க்கும் கலையையும் அறிந்திருந்தனர் எனலாம். எனவே, இப்பொழுது போன்சாய் (bonsai) எனப்படும் பானையில் வளர்க்கப்படும் மரத்தைத் தாழி மரம் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
தாழி மரம் – bonsai
 இவ்வாறு பழந்தமிழ்ச் சொற்களை நேரடியாகவும் அவற்றின் அடி ஒற்றியும் புதிய கலைச்சொற்களாக மீட்டுருவாக்கம்செய்வது கலைச் சொல்வளத்தைப் பெருக்குவதாக அமையும்.
எனவே, இருக்கும்இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலையும் அறியாமையை நீக்க நாம் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்ற சொற்கள்அடிப்படையில் கலைச் சொல்வளம் காண்பது தமிழுக்கும் பெருமை சேர்க்கும்; சங்க இலக்கியத்திற்கும் புகழ்சேர்க்கும். ஆதலின், சங்க இலக்கியக் கலைச் சொற்கள்என்னும் தலைப்பில்அக்காலச் சொற்களை இக்காலக் கலைச் சொற்களாக மீட்டுருவாக்கம் செய்வது சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு, நூற்படைப்பு, தமிழ்வழிக் கல்வி, அறிவியல்தமிழ் வளர்ச்சி முதலான பலவற்றிற்கும் உறுதுணை புரியும் எனலாம்.
 – இலக்குவனார் திருவள்ளுவன்
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive