(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – தொடர்ச்சி)
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்
4
வணக்கமுங்க ஐயா. காலையில் சாப்பிட்டீர்களா?
அதெல்லாம் முடித்து விட்டேன். இன்று நம் வேலையைத் தொடருவோம்.
சரிதாங்க ஐயா. மாறன் மல்லிகை உடனே சேரக் கூடாது. அது பற்றிப்பேசப் போகிறேன். மாறன் மல்லிகை காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும் சீக்கிரமே எல்லாரும் ஒத்துக் கொள்கிறார்கள் அல்லவா?
ஆமாம். மரபு தழைக்க வேண்டும். உறவு வலுப்பட வேண்டும் என இவர்களின் காதலுக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால், இவர்கள் உடனே சேரக்கூடாது. பல தடைகளை மீறித்தான் சேர வேண்டும்.
கதையிலேயே சில தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு மேலும் வேண்டுமா?
ஆமாம். ஆமாம். அப்பொழுதுதான் கதையில் விறுவிறுப்பு இருக்கும். மாறனுக்கும் மல்லிகைக்கும் சண்டை ஏற்பட்டு அவர்கள் முதலில் பிரிய வேண்டும். இது முதல் பிரிவு. அவர்களாகவே பிறகு சேர்ந்து விடுவார்கள். அடுத்தும் சண்டை வந்து பிரிய வேண்டும். அப்பொழுது மாறனுக்கு வண்டி மோதி உயிருக்கு ஆபத்து ஏற்பட வேண்டும். அப்பொழுது மல்லிகை வந்து அவனருகேயே நின்று அவனையே பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் நினைவிழந்து இருக்கும்போது மல்லிகை ‘மாறன், மாறன்’ எனச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் அவனுக்கு நினைவு வரவேண்டும். பின் மீண்டும் அவர்கள் சேர வேண்டும்.
பின்னர்த் திருமணம் ஆனாலும் முதலிரவு நடக்கக் கூடாது. மல்லிகையின் சித்தி ஏதாவது தடை உண்டாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். புனிதாவும் அவருடன் இணைந்து மல்லிகைக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் தனி யறையில்தானே இருப்பார்கள். எப்படி அவர்கள் சேருவதைத் தடுக்க முடியும்?
தொலைக்காட்சிக் கதை என்றால் அப்படித்தான் முடியும். தனியறையில்தான் இருப்பார்கள். ஆனால், சன்னல் வழியாக இவர்கள் பார்க்க இயலும். மல்லிகையோ மாறனோ கீழே விழுந்து அடிபடும் வகையில் ஏதும் செய்வார்கள். அதனால் சேர முடியாது. மல்லிகையிடம் நீ உன்னுடைய இலட்சியம் அல்லது மாறனின் இலட்சியம் நிறைவேறும் வரை சேரக்கூடாது.சேர்ந்தால் அது நிறைவேறாது என்று சொல்லி அதற்கும் சத்தியம் வாங்க வேண்டும். அதையும் மீறி மாறன் நெருங்கி வந்தால், மல்லிகை கண்டபடி அவனை ஏசி விலகி இருக்கச் செய்ய வேண்டும்.
தனக்குத் தெரிந்த கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள் மூலம் மல்லிகையைக் கடத்த வேண்டும்.
கடத்தல்காரர்கள் எல்லாம் சித்திக்கு எப்படித் தெரியும். அவர்களுக்குக் கொடுப்பதற்கு எப்படிப் பணம் கிடைக்கும்.
ஐயோ! நீங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் பார்ப்பது இல்லை. அதான் இப்படிக் கூறுகிறீர்கள். தொலைக்காட்சிக் கதைகளில் ஆண்களைவிடப் பெண்கள் தான் அதிகம் வஞ்சகர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குப் பெரிய பெரிய கடத்தல்காரர்களையும் கொலைகாரர்களையும் தெரிந்து இருக்க வேண்டும். அவர்கள் கேட்பதைவிட அதிகமாகப் பணம் கொடுக்கும் அளவிற்கு இவர்களுக்கு வசதி இருக்கும்.
அவ்வளவு வசதியா?
வசதியாக இருக்க வேண்டும் என்று இல்லை. கதையில் ஏழைகளாக இருந்தாலும் பெருந்தொகையை அவர்களுக்கு மாற்றி அனுப்புவார்கள். எனவே, இதிலும் இவ்வாறு இருந்தால்தான் மக்கள் வரவேற்பார்கள். பெரிய கொலைகாரர்களாக இருப்பார்கள். ஆனால், சித்தி அவர்களை மிரட்ட வேண்டும். சதிச்செயல் நிறைவேறாது. அப்போது, “என்னடா நீயெல்லாம் பெரிய கொலைகாரன் என்று சொல்கிறாய்? ஒரு பெண்ணைக் கொலை செய்ய முடிவில்லையே ! சொதப்பி விட்டாயே! இன்னொரு முறை வாய்ப்பு தருகிறேன். சரியாக முடி. இல்லாவிடடால் உன்னை நான் முடித்து விடுவேன்.” என்று மிரட்ட வேண்டும். இவரே, விட்டில் கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்திருப்பார். ஆனால் பயன்படுத்த மாட்டார்.
கதையில் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டால் கதை முடிவதற்குள் அக்கத்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார் புகழ்பெற்ற திறனாய்வாளர் ஒருவர்.
அதெல்லாம் கதை இலக்கியத்திற்குத்தான். தொலைக்காட்சித் தொடருக்கான கதை இலக்கணமே இதுதான்.
உங்கள் கதையெல்லாம் கேட்டால் எனக்குத் தலை சுற்றுகிறது. மீதி நாளை பார்ப்போம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment