Friday, February 28, 2025

வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!-இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்

 

வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!-இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்


பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்,
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; 5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல் ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

– புறநானூறு 195
– திணை : பொதுவியல்;
– துறை: பொருண் மொழிக் காஞ்சி.
– நரிவெரூஉத்தலையார்

பொருள்:

பல்வைக் குணங்களை உடையோரே! பல்வைக் குணங்களை உடையோரே! எனப் புலவர் நரிவெரூஉத்தலையார் பயனின்றி வாழ்ந்து மூப்பு அடைந்தவர்களைப் பார்த்துக் கூறுகிறார்.

மீன்முள் போன்ற வெண்முடி கொண்ட தாடியைச் சுருங்கிய கன்னத்தில் உடைய மூப்படைந்தவர்களிடம் கூறுகிறார்.

கன்னத்திலுள்ள நரைத்த தாடியை மீன்முள் போன்றதாக உவமைச் சிறப்புடன் குறிப்பிடுகிறார். கவுள் என்றால் கன்னம். திரை என்றால் அலை. இங்கே அலைபோல் மடிந்து, சுருங்கி அமைந்துள்ள கன்னத்தைக் குறிப்பிடுகிறார்.

யாருக்கும் பயன்படாமல் வாழ்ந்து மூப்படைந்துள்ளமையால் பயனில் மூப்பு என்கிறார்.

பாசக்கயிற்றைக் கொண்டு வந்து கட்டி இழுத்துச் செல்ல, காலன் வரும்பொழுது “இதுவரை எந்த நன்மையும் செய்யவில்லையே” என அஞ்சுவீர்களோ என்கிறார்.

வாழுங் காலத்திற்கு முடிவு கட்டுபவனைக் காலன் என்றனர் பழந்தமிழ் மக்கள்.

நன்மை செய்யாததால் நரகுலகு செல்ல நேரிடும் என்று அச்சம் வருகின்றது. எனவே, இறப்புக் காலம் வரும்பொழுது அஞ்சாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? நல்லன ஆற்ற வேண்டும்.

அவ்வாறு நல்லன செய்யாவிட்டாலும் கேடில்லை. யாருக்கும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இது உவகை தருவது மட்டுமல்ல. வாழ்க்கையை நல்வழிக்கண் அழைத்துச் செல்லும் நன்னெறியுமாகும்.

“தீயவை தீய பயத்தலால், தீயவை
தீயினும் அஞ்சப்படும்”
             என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

அத்தகைய தீயதை வாயால் சொல்வதற்கும் விரும்பாது “அல்லது” என்று கூறியுள்ளதாக உரைவேந்தர் ஒளவை துரைசாமி விளக்குகிறார்.

நன்மை செய்ய முடியாமற் போகலாம். ஆனால், தீயது செய்யாமல் இருக்க முடியுமல்லவா? எனவேதான் குறைந்தது “தீயவற்றைத் தவிர்க்கவாவது செய்யுங்கள்” என எளிய வழியைக் கூறுகிறார் புலவர்.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்

என்பது எந்நாட்டவர்க்கும் எக்காலத்திற்கும் ஏற்ற பொன்னுரை ஆகும்.




குறள் கடலில் சில துளிகள் 18. இம்மூன்றும் குற்றங்களாம் – இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 18. இம்மூன்றும் குற்றங்களாம் – இலக்குவனார்திருவள்ளுவன்



குறள் கடலில் சில துளிகள் 17. பெருமிதத்துடன் வாழ்க! – தொடர்ச்சி)

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 432)

கஞ்சத்தனமும் மாட்சிமை இல்லாத மான உணர்வும் தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனுக்குக் குற்றங்களாகும் என்கிறார் திருவள்ளுவர்.

பிறருக்குக் கொடுக்கும் தலைமை இடத்தில் கொடையுள்ளம் கொண்டவர்களே இருக்க வேண்டும் என ஆட்சியியலர்கள் கூறுகின்றனர்.

இவறல்=தேவைக்கு ஏற்பப் பொருள் கொடாமை; மாண்புஇறந்த=மாட்சிமை நீங்கிய;  மாணா-பெருமையற்ற; உவகை=மகிழ்ச்சி; ஏதம்=குற்றம்; இறை-தலைவன்

சிற்பி பாலசுப்பிரமணியம் “பகிர்ந்துகொள்ள இசையாத பொருட்பற்றும், பொய்ப் பெருமைகளில் பிறந்த மான உணர்ச்சியும், தகுதி குறைவான செயல்களால் விளையும் மகிழ்ச்சியும் ஆளும் தலைவனை அழிக்கும் பண்புகள் ஆகும்.” என்று விளக்குகிறார்.

“பற்றுள்ளம் என்னும் இவறன்மை” எனத் திருவள்ளுவர் மற்றொரு குறளில் (எண் 438) இவறல் என்பதைப் பற்றுள்ளம் என்கிறார்.  தன் பணத்தில் பற்றுள்ளம் கொண்டு, கொடுக்க வேண்டிய தேவை இருக்கும் பொழுது கொடுக்காமையும் செலவு செய்ய வேண்டிய நேர்வின்பொழுது செலவழிக்காமையும் ஆகிய கஞ்சத்தன்மையைத் திருவள்ளுவர் கூறுகிறார்.

மாண்பு இறந்த மானம் என்றால் நன்மையின் நீங்கிய மானம் என்னும் பரிமேலழகர், “அஃதாவது, ‘அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவரை(புறப்பொருள் வெண்பா மாலை, பாடாண்திணை-33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின.” என விளக்குகிறார். செயலைத் தொடங்கிய பின் தவறு எனத் தெரிந்த பின்னரும் விடாப்பிடியாக முடித்தல் மானமாகாது. இத்தகைய சிறப்பு இல்லா மானத்தையே திருவள்ளுவர் குற்றமாகக் கூறுகிறார்.

மகிழ்ச்சியும் அளவோடுதான் இருக்க வேண்டும். அளவு கடந்த உவகையில் கடமை மறப்பர். மிகை மகிழ்ச்சியில் பிறரை ஏளனம் செய்வோரும் உள்ளனர். அளவிறந்த மகிழ்ச்சியில் அதைக்கொண்டாடுவதாகக் கூறிக்கொண்டு இன்று குடிக்கவும் உரிமையல்லாதாரைக் கூடவும் செய்கின்றனர். அளவற்ற மகிழ்ச்சியில் பிறரைத் துன்புறுத்துவோரும் உள்ளனர். இதுபோன்ற குற்றங்களுக்குக் காரணமான அளவு கடந்த மகிழ்ச்சியைத் திருவள்ளுவர் குற்றமாக உணர்த்துகிறார்.

(தொடரும்)

Wednesday, February 26, 2025

குறள் கடலில் சில துளிகள் 17. பெருமிதத்துடன் வாழ்க! – இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் 17. பெருமிதத்துடன் வாழ்க! – இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் – 16. அறிவை உடைமையாக்குக!-தொடர்ச்சி)

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்குற்றங்கடிதல்குறள் எண்: 431)

அடுத்து வரும் குற்றங்கடிதல் முதலான ஆறு அதிகாரங்களையும் பேரா.சி.இலக்குவனார் ‘தள்ளற்பாலன சாற்றும் இயல்’ என்கிறார். இவற்றை நம் வாழ்விலிருந்து தள்ளிவிடுவதன் மூலம் நல்வாழ்வைக் கொள்ளலாம்.

செருக்கும் வெகுளியும் கீழ்மைப் பண்பும் இல்லாதவர் உயர்வு மேம்பாடானது என்கிறார் திருவள்ளுவர்.

தலைக்கனம், சினம், கீழ்மை முதலானவற்றில் இருந்து தலைவர் விலகித் (Stay away from these demons: Pride, Anger and Lust) தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியியலாளர்கள் கூறுகின்றனர்.

பதவி, செல்வம், செல்வாக்கு முதலியவற்றால் வருவது செருக்கு. செருக்கு இருப்போர் மமதையில் திரிவர். நேரான பாதையில் செல்ல மாட்டார். எனவே, செருக்கு கூடாது. மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோர் “பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் அதனைச் செருக்கு” என்கின்றனர்.

 சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி என்பதால் அதுவும் கூடாது. பரிமேலழகர், “செருக்கு என்றால் மதம். அஃதாவது, பெற்றதைப் பெரிதாக மதிக்கும் மகிழ்ச்சி”; “அளவிறந்த காமம் ‘சிறுமை’ எனப்பட்டது” என்கிறார். பரிப்பெருமாள், “சிறியார் செய்வன செய்தலாவது காமநுகர்ச்சியும், சூதும், கள்ளும், வேட்டையும் முதலானவற்றின் மிக்கொழுகுதல்” என்கிறார். பரிப்பெருமாள் மேலும்,  “சிறியார் செய்வன செய்தலாவது காமநுகர்ச்சியும், சூதும், கள்ளும், வேட்டையும் முதலானவற்றின் மிக்கொழுகுதல்” என்கிறார். “பிறர்மனை நயத்தலாற் கெட்டான் இராவணன்; வெகுளியாற் கெட்டான் சனமேசயன்; நுகர்ச்சியாற் கெட்டான் சச்சந்தன்” என எடுத்துக்காட்டுகளும் கூறுகிறார். பேரா.சி.இலக்குவனார், “காமம் ஒன்றுமட்டும் கூறினால், பொறாமை, பொய்மை, ஏமாற்று, நன்றி மறத்தல், வஞ்சகம் முதலிய இழிகுணங்களைத் தனியே கூறுதல் வேண்டும். ஆதலின் இழிகுணங்கள் அனைத்தையும் குறிக்கவே சிறுமை என்று கூறினார் என்றால் மிகப் பொருத்தம்” என விளக்குகிறார்.

இம்மூன்றும் யாருக்கும் இருக்கக்கூடாது. கண்டிப்பாக ஆள்வோருக்கு இருக்கக் கூடாது. ஆள்வோருக்கு ஆக்கத்திற்குக் கேடு தரும் இம்மூன்றும் இருப்பின் தாமும் அழிந்து நாட்டையும் அழிவுப்பாதையில் செல்ல விடுவர்.

(தொடரும்)  

Tuesday, February 25, 2025

சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

936. Assistantஉதவியாளர்  

அமைச்சுப்பணியில் கீழ்நிலையில் இருந்து இரண்டாம் நிலையில் – இளநிலை உதவியாளருக்கு மேல் நிலையில் உள்ள பணியிடம்.  

சட்டத்துறையில் சட்ட உதவியாளர் அல்லது வழக்கு உதவுநர் எனக் குறிக்கப் பெறுகிறார்.   சட்ட ஆவணங்களை ஒழுங்கு படுத்தல், விசாரணையில் உதவுதல், சான்றுரைஞர்களிடம் நேர்காணல் மேற்கொள்ளல், வழக்குரைஞருக்கும் வழக்காளிக்கும் தொடர்பாளராக இருத்தல் முதலான பணிகளைப் பார்க்கிறார்.  

ஒரு பதவி நிலையில் அதற்கடுத்த கீழ்நிலையில் உள்ள பணியிடத்தை உதவி என்று சேர்த்துக் குறிப்பிடுவர். சில இடங்களில் துணை என்பதற்கு அடுத்த கீழ்நிலையில் வரும். வருவாய்த்துறையில் மட்டும்  deputy collector – உதவி ஆட்சியர் என்றும் assistant collector –  துணை ஆட்சியர் என்றும் மாறுபடக் கூறுவர்.    Assistant comptroller – உதவி நிதியாளர்  Assistant controller – உதவிக் கட்டுப்பாட்டு அலுவலர், Assistant Public Relation Officer – உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்பன போன்று உள்ளன.  

மின்வாரியம் முதலான துறை களில் helper  உள்ளனர். இவர்களை உதவியாளர் என்று சொல்லாமல் துணையாள் என்று சொல்ல வேண்டும்.
937. Assistant commandantஉதவிக் கட்டளையர்  

உதவிக் கட்டளையர்  என்பது படைத்துறை, கப்பற்படை, சீருடைப் பணித்துறை, பயிற்சி நிறுவனம் அல்லது பயிற்சிக்கழகம், ஆயுதப்படை முதலானவற்றில் இரண்டாம் நிலை தளபதிக்கு வழங்கப்படும் பதவி.   பொதுவாக ஆங்கிலப் பயன்பாடு உள்ள நாடுகளில் இப்பதவி உள்ளது.    
938.Assistant Sub-Inspector/ Assistant Police Sub Inspector (A.S.I.)    உதவிச் சார்பு ஆய்வாளர்  

உதவிக் காவல் சார்பு ஆய்வாளர்    

உதவி ஆய்வாளர் என்னும் பணியிடம் வேறு சில துறைகளிலும உள்ளதால் உதவிக் காவல் சார்பு ஆய்வாளர் என்று குறிக்கின்றனர்.   காவல்துறை அதிகார வரிசையில் உதவிச்சார்பு ஆய்வாளர் இடைநிலைப் பணியாகும்.

அரசுப்பதிவில்லா பணியிடமாகும் (NGO) இது.
939. Asst. Commissioner of Policeகாவல்‌துறை உதவி ஆணையர்  

உதவிக் காவல் ஆணையர்  

உதவிக் காவல் ஆணையர் (ACP) இந்தியக் காவல் துறையில் மூத்த பதவியில் இருப்பவர். மேலும் பெருநகரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு,போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் உதவி ஆணையர் பணியிடங்கள் உள்ளன.

பிற பகுதிகளில், உகாஆ(ACP) என்பது துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பணியிடத்திற்குச் சமம். இப் பெயரில்தான் பணியிடங்கள் உள்ளன.
உள்ளாட்சித்துறை, உணவு வழங்கல் துறை முதலான பிற துறைகளிலும் உதவி ஆணையர் பணியிடங்கள் உள்ளன.
940. Assumeமேற்கொள்  

ஏற்றுக் கொள்  

ஏற்கை  
பாவனைசெய்
ஊகம்செய்
கருதிக்கொள்
ஆராயாது எண்ணு
செருக்கிக்கொள்
வலிந்து பற்று
அனுமானம்   (அனுமானம் என்பது தமிழ்ச்சொல்லே)   “அனுமானம்” என்பது மற்றொருவரின் பொறுப்பு, கடமை அல்லது கடமைகளைத் தானாக முன்வந்து ஏற்றுக்கொள்வது அல்லது “எடுப்பது”, கடன் அல்லது குத்தகையை ஏற்றுக்கொள்வது, அடிப்படையில் மற்றொரு தரப்பினரின் பொறுப்பாக இருந்த ஒன்றுக்குப் பொறுப்பு எடுத்தல்.  இது வேறொருவருக்குச் சொந்தமான சட்டப்பூர்வ கடமையை தீவிரமாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.

(தொடரும்)

Monday, February 24, 2025

குறள் கடலில் சில துளிகள் – 16. அறிவை உடைமையாக்குக! : இலக்குவனார்திருவள்ளுவன்

 

குறள் கடலில் சில துளிகள் – 16. அறிவை உடைமையாக்குக! : இலக்குவனார்திருவள்ளுவன்



(குறள் கடலில் சில துளிகள் : 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு! – தொடர்ச்சி)

அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்அறிவுடைமைகுறள் எண்: 430)

அறிவுடையார் எல்லா நலன்களும் உடையவர்; அறிவில்லாதவர் வேறு எச்செல்வம் பெற்றிருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவார் என்கிறார் திருவள்ளுவர்.

உடையர்=உடைமையாகக் கொண்டவர்.

அறிவு மாணிக்கங்களை விட மிகுதியும் மதிப்பானது. நீங்கள் விரும்பும் எதனுடனும் அதை ஒப்பிட முடியாது(Wisdom is more precious than rubies, and nothing you desire can compare with her.) என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

பரிமேலழகர், “செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை ‘எல்லாம் உடையார்’ என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, ‘என்னுடயரேனும் இலர்’ என்றும் கூறினார்.” என்கிறார்.

வாழ்விற்கு அடிப்படை, பொருட் செல்வமே! பரம்பரைச் செல்வம் பெற்றிருப்பினும் அதைப் பெருக்கவும் பேணிக் காக்கவும் அறிவு தேவை. அறிவில்லாதவன் அவற்றை முறையற்ற வழிகளில் செலவழித்து இழப்பு அடைகிறான். செல்வம் பெற்றிராதவனும் அறிவால் திட்டமிட்டுச் செயலாற்றிப் பொருட் செல்வத்தைப்பெற இயலும். இவ்வாறு அறிவுச் செல்வம் உள்ளவர் பிற செல்வங்களைப் பெற முடியும். பிற செல்வங்களில் ஒன்றோ பலவோ அனைத்துமோ இருப்பினும் அறிவுச் செல்வம் இல்லாதவரால் உரிய பயன்களை அடைய முடியாது. முறையற்றவற்றில் முதலீடு செய்து அவற்றை இழப்பான். அல்லது பாதுகாக்கத் தெரியாமல் களவு, கொள்ளை, மோசடித் திட்டங்கள் போன்றவற்றால் உள்ளவற்றைப் பறி கொடுப்பான். எனவே, எச்செல்வம் பெற்றிருந்தாலும் அறிவுச் செல்வம் இல்லையேல் ஒன்றும் இல்லாதவானாகிறான். அறிவுள்ளவன் எதையும் எளிதில் நிறைவேற்றக் கூடியவனாக இருக்கிறான். அதனால் வேறு ஒன்றும் உடைமையாக இல்லாவிட்டாலும் எல்லாம் உடையவன்போல் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அறிவு உடையவனிடம் பிற உடைமைகள் வந்து சேர்கின்றன.

இதனை வழிமொழிந்து, பின் வந்த நாலாடியாரும் நுண்ணறிவின்மையே வறுமை என்றும் நுண்ணறிவேமிகப்பெருஞ்செல்வம் ( பாடல் 251 ) என்றும் கூறுகிறது.  பழமொழி நானூறும் ஆடையில்லாதவனை அணிமணி ஒப்பனை அழகு செய்யுமா? அறிவில்லாதவனைப் பிற செல்வங்கள் பெருமையுறச் செய்யுமா? என வினா தொடுக்கிறது(பாடல் 271).                                              

  (தொடரும்)  

Followers

Blog Archive