(சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 926 – 930
926. assistance, seek; seek assistance | உதவி நாடல் பொதுவாக தேவைப்படும் உதவியை நாடுவதைக் குறிக்கிறது. எனினும் புதியனவற்றைக் கற்றுக் கொள்வதில் அல்லது புரிந்து கொள்வதில் அறைகூவல்களைச் சந்தித்தல் அல்லது உறுதியற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் போது முன் முயற்சி உதவியை நாடுவது. உதவி நாடல் என்பது தேவைப்படும் உதவியை புரிந்து அறிந்து கொள்ளுதல், யாரிடம் உதவியை நாட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்தல், என்னவாறு உதவியைக் கேட்க வேண்டும் என்று திட்டமிடல், தெளிவாகவும் நேர்மையாகவும் தொடர்பு கொள்ளல் ஆகியவற்றை உள்ளடக்கியது. வழக்குகள் தொடர்பிலான உதவியை வழக்குரைஞர்கள் அல்லது சட்ட வல்லுநர்களிடம் நாடுதல். |
927. assistance, technical; technical assistance | நுட்பிய உதவி தொழில் நுட்ப உதவி வல்லமை, வளங்களை வழங்குவதன் மூலம் நாடுகளின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் ஒரு வழியே நுட்பிய உதவியாகும். கொள்கை வடிவமைப்பு, திட்டச் செயலாக்கம், திறன் மேம்பாட்டிற்கு இது உதவும். சட்டச் சிக்கல்களுக்கு உதவுவதற்கு அறிவுரை, பயிற்சி, பிற பணிகளை வழங்குவது சட்ட அடிப்படையிலான நுட்பிய உதவியாகும். சட்டங்கள் தொடர்பான கொள்கைகளை மதிப்பாய்வு செய்தல், புதுப்பித்தல், புதிய நிறுவன கட்டமைப்பை உருவாக்குதல், சட்ட நூல்களைப் பயன்படுத்துவதற்கான திறனை உருவாக்குதல் முதலியவை இதில் அடங்கும். |
928. assistance, urgent ; urgent assistance | சடுத்த உதவி உடனடி உதவி அடுத்த கணமே தேவைப்படும் அல்லது வழங்கப்பெறும் உடனடி உதவி. உடனடிக் கவனம் தேவைப்படும் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான அவரச முறையீட்டிற்கான சட்ட உதவி வேண்டுதல் அல்லது பெறுதல். |
.929. Assistant public prosecutor | அரசு குற்றவழக்கு உதவி வழக்கிடுநர் அரசு குற்றவியல் உதவி வழக்குரைஞர் என்கின்றனர். குற்றவியல் என்பது குற்றம் தொடர்பான அறிவியல் துறையைக் குறிக்கிறது. சட்டத்துறையில் குற்ற வழக்கு என்பதே பொருந்தும். prosecutor – வழக்குரைஞர் என்பதைவிட வழக்கிடுநர் என்பதே சரியாக இருக்கும். சட்டப்புலமையும் சிறப்பான பணியறிவும் கொண்டு வழக்குரைப்பவர்களை நாம் வழக்கறிஞர்கள் எனலாம். சட்டம் படித்து முடித்தவுடன் வழக்காட வருநரை, வழக்கு+அறிஞர் என்பது பொருந்தாது. இவர்களை – வழக்கை எடுத்து உரைப்பவர்களை – வழக்கு+உரைஞர்களை வழக்குரைஞர்கள் என்பதே சரியாகும் என வழக்குரைஞர் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினேன். குற்ற வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்குரைஞரை வழக்கு தொடுப்பவர் என்பதால் வழக்கு தொடுநர் எனக் குறிப்பிட்டேன். தொடுநர் என்பது தொடுத்தல் அடிப்படையில் மட்டுமல்லாமல் ,தொடுதல் என்னும் பொருளும் தருகிறது. எனவே அரசுத்தரப்பில் வழக்கை இடுபவர் என்னும் பொருளில் வழக்கிடுநர் எனக் குறித்துள்ளேன். குற்ற வழக்கிலான அரசு சார்பில் வருபவரைத்தான் அரசு வழக்கிடுநர் எனலாம். pleader என்பவர்களையும் வழக்குரைஞர் என்பது பொருந்தாது என்பதால் வாதுரைஞர் எனக் குறிப்பிட்டுள்ளேன். வழக்கிடுநருக்கு இணையாக அரசு வாதிடுநர் எனலாம். தனியார்த் தரப்பினரை மட்டும் வாதுரைஞர் எனலாம். |
930. Associateship | கீழிணை கீழிணைஞர் இணைவுறுத்து Associate என்றால் கூட்டு, இணை எனப் பொருள்கள் இருந்தாலும் பதவி நிலையில் ஒரு பதவி நிலைக்கு அல்லது தகு நிலைக்கு இணையாக ஆனால் அதைவிடக் கீழ் நிலையில் இருப்பவர். ஓர் அமைப்பு அல்லது நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து நிற்றல். சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் ஆனால் பங்காளியாக இல்லாதவர். சட்டத்துறையில் புதியவராகவும் பிற வழக்குரைஞர்களைவிடக் குறைந்தபட்டறிவு உடையவராகவும் இருப்பவர். joint என்றால் இணை என்பதால் சமநிலைக்குக் கீழ் நிலை என்பதைக் குறிப்பிடக் கீழிணை என்று குறிக்கப்பெற்றது. அகராதிகளில் உள்ளதுபோல் துணைவர் பதவி என்று சொல்வதைவிடக் கீழிணைப்பதவியில் உள்ளவரை – கீழிணைப் பதவியரை – கீழிணைஞர் எனலாம். Associate editor – திரைத் துறையில் கீழிணைத் தொகுநர், இதழ்த்துறையில் கீழிணை யாசிரியர். Associate director- கீழிணை இயக்குநர் Associate Professor – கீழிணைப் பேராசிரியர் Associate Member – கீழிணை உறுப்பினர் கீழிணை என்பதைக் கீழான – இழிவான – சொல்லாகக் கருதக் கூடாது. அடுத்த நிலையைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். அண்மை நிலையில் உள்ளவர் என்னும் பொருளில் அருகர் என்றும் குறிக்கலாம். அருக சமயத்தவரை அருகர் என்பதால் இதனைக் குறிக்கவில்லை. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment