( குறள் கடலில் சில துளிகள் 17. பெருமிதத்துடன் வாழ்க! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
18. கஞ்சத்தனமும் மாணமில்லா மானமும்
முறையற்ற மகிழ்ச்சியும் குற்றங்களாம்!
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 432)
கஞ்சத்தனமும் மாட்சிமை இல்லாத மான உணர்வும் தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனுக்குக் குற்றங்களாகும் என்கிறார் திருவள்ளுவர்.
பிறருக்குக் கொடுக்கும் தலைமை இடத்தில் கொடையுள்ளம் கொண்டவர்களே இருக்க வேண்டும் என ஆட்சியியலர்கள் கூறுகின்றனர்.
இவறல்=தேவைக்கு ஏற்பப் பொருள் கொடாமை; மாண்புஇறந்த=மாட்சிமை நீங்கிய; மாணா-பெருமையற்ற; உவகை=மகிழ்ச்சி; ஏதம்=குற்றம்; இறை-தலைவன்
சிற்பி பாலசுப்பிரமணியம் “பகிர்ந்துகொள்ள இசையாத பொருட்பற்றும், பொய்ப் பெருமைகளில் பிறந்த மான உணர்ச்சியும், தகுதி குறைவான செயல்களால் விளையும் மகிழ்ச்சியும் ஆளும் தலைவனை அழிக்கும் பண்புகள் ஆகும்.” என்று விளக்குகிறார்.
“பற்றுள்ளம் என்னும் இவறன்மை” எனத் திருவள்ளுவர் மற்றொரு குறளில் (எண் 438) இவறல் என்பதைப் பற்றுள்ளம் என்கிறார். தன் பணத்தில் பற்றுள்ளம் கொண்டு, கொடுக்க வேண்டிய தேவை இருக்கும் பொழுது கொடுக்காமையும் செலவு செய்ய வேண்டிய நேர்வின்பொழுது செலவழிக்காமையும் ஆகிய கஞ்சத்தன்மையைத் திருவள்ளுவர் கூறுகிறார்.
மாண்பு இறந்த மானம் என்றால் நன்மையின் நீங்கிய மானம் என்னும் பரிமேலழகர், “அஃதாவது, ‘அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவரை(புறப்பொருள் வெண்பா மாலை, பாடாண்திணை-33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின.” என விளக்குகிறார். செயலைத் தொடங்கிய பின் தவறு எனத் தெரிந்த பின்னரும் விடாப்பிடியாக முடித்தல் மானமாகாது. இத்தகைய சிறப்பு இல்லா மானத்தையே திருவள்ளுவர் குற்றமாகக் கூறுகிறார்.
மகிழ்ச்சியும் அளவோடுதான் இருக்க வேண்டும். அளவு கடந்த உவகையில் கடமை மறப்பர். மிகை மகிழ்ச்சியில் பிறரை ஏளனம் செய்வோரும் உள்ளனர். அளவிறந்த மகிழ்ச்சியில் அதைக்கொண்டாடுவதாகக் கூறிக்கொண்டு இன்று குடிக்கவும் உரிமையல்லாதாரைக் கூடவும் செய்கின்றனர். அளவற்ற மகிழ்ச்சியில் பிறரைத் துன்புறுத்துவோரும் உள்ளனர். இதுபோன்ற குற்றங்களுக்குக் காரணமான அளவு கடந்த மகிழ்ச்சியைத் திருவள்ளுவர் குற்றமாக உணர்த்துகிறார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment