மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-7 : தொடர்ச்சி)
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8
முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு
இராசாசியின் பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. இராசாசிக்கும் இந்திக்கும் எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது . இராசாசியின் கட்டாய இந்திச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், பெரியார் ஈ.வே.இரா. ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு, பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது.
முதல் மொழிப்போரின் எழுச்சியால் எழுந்த தமிழகம் 1938 மொழிப்போரை “முதல் தமிழ்த் தேசியப் போர்” என அடையாளங் கண்டது. தந்தை பெரியாரை “தமிழ்தேசியத் தந்தை” எனப் போற்றியது., பாவேந்தர் பாரதிதாசனைத் “தமிழ்த் தேசியத் புரட்சிப் பாவலர்” என அறிமுகப்படுத்தியது.
வங்காள மொழிப்போர் அடிப்படையில் பிப்பிரவரி 21, உலகத் தாய்மொழி நாள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டாய இந்தித் திணிப்பு கைவிடப்பட்ட பிப்பிரவரி 21 ஆம் நாளும் இதற்குப் பொருந்துகிறது என நாம் அற்ப மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் மொழிக்காக உயிர் ஈந்த தமிழ் ஈகியருக்க உலக அறிந்தேற்பு கிடைக்க நாம் ஏதும் செய்யவில்லை.
தமிழர் மாநாட்டுத் தலைமையுரை (1938) – சோமசுந்தர பாரதியார்
ஆரிய மொழியாலும், அதன் கலையாலும் தேசியம் என்ற போர்வை போர்த்துத் தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்குரிய இடமும், உரிமையும், நிலை தளரச் செய்தது போதாதது போல, நமது தமிழ் மொழி, இதுபோது (1938) எதிர்பாராதவிடத்திலிருந்து கொணர்ந்து புகுத்தப் பெறும் புதியதொரு பகை மொழியை எதிர்க்க வேண்டியிருக்கிறது. நமது மாகாணத்துத் தற்காலக் காங்கிரசு மந்திரி சபை தனக்குள்ள செல்வாக்கைக் கருவியாகக் கொண்டு, தமிழ்நாட்டுத் தமிழுக்கு விபத்தொன்றைச் செய்யத் தொடங்கித் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பாட சாலைகளிலும் எல்லா மாணவர்களும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தப் போவதாகத் தமிழர்களாகிய நம்மைப் பயமுறுத்துகின்றது. அரசாங்கத்தின் கொள்கையென்று சொல்லி, பாடசாலைப் பாடங்களுள் இரண்டாவது மொழி வகையில் விருப்பப்பாடமாக வைப்பதாயினும் நமது மாகாண மொழியாகிய தமிழ்மொழியின் சிறப்பையும் உரிமை நிலையினையும் கெடுத்துச் சீர்குலைத்து வரும் வடநாட்டு ஆரிய மொழியின் கிளையாய், சமசுகிருதத்தின் முடிவாய் வந்திருக்கும் இந்தி மொழியை நமது தமிழ்நாட்டு அறிவுப் பக்குவமில்லாத இளஞ்சிறுவர்கள் கட்டாயம் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் இத்தீச் செய்கையால் நமது தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெருங்கேடும், தமிழர் நாகரிகத்துக்கு அனர்த்தமுமே உண்டாகும். இந்தி மொழியை எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் அது நம் தமிழ் மொழியின் காற்கீழ் ஒதுங்கக்கூடிய சிறுமையுடையது. இந்தியைக் கட்டாயப்படுத்திப் படிக்கச் செய்வது, தமிழ்க் கல்விக்கு இசைந்ததாக இல்லாமலிருப்பதோடு தற்காலம் நம் தமிழ் இருக்கும் நிலையில், அதற்கும் அதன் கலைவளர்ச்சிக்கும் பெரிதும் தடையும் இடையூறும் விளைவிப்பதாகவே இருக்கிறது. தமிழ்ச்சிறுவர்களுக்குச் சிறு வகுப்பிலேயே இந்தியைக் கட்டாயமாக நுழைப்பது, தமிழ் இளைஞர்களின் முற்போக்கைத் தடுத்து அவர் உயர் கல்வியைக் கற்க வொட்டாமல் தடை செய்வதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சியே தவிர வேறில்லை. இது, சாதிச்செருக்காலும், சமூகத்திமிராலும், தங்களுக்கு உரியது சமசுகிறதமேயென எண்ணி, பல நூற்றாண்டுகளாகத் தமிழுக்குத் தாழ்வு செய்து கொண்டே வந்த ஒரு சாதி இளைஞர்களுக்கு உயர் கல்விக்குரிய சலுகை காட்டுவதற்காகச் செய்யப்படும் சுயநலத் தந்திரமேயாகும். இந்தியென்பது சமசுகிருதத்தின் கிளைமொழி யாகையால், அந்தச் சம்சுகிருதமே தங்கள் “சுவ பாசை” என்று கொண்டு பயின்று வரும் அந்தச்சாதி இளைஞர்களுக்கு இந்தி மொழி சுலபத்தில் வந்துவிடும். இந்தியை நுழைத்துவிடின், எதிர்காலத்தில் இந்தி படித்தவர்களுக்கு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்குரிய வசதிகளும் பிற்கால வாழ்வுக்குரிய தகுதிப்பாடுகளும் வழங்கப்படும். அந்நிலையில் இந்தியைக் கற்கமுடியாமல், நம் தமிழ்சிறுவர்களே மிகவும் பாதிக்கப்பட்டு மேற்கூறிய தகுதிப்பாடுகளையும் பெறமுடியாமல் வருந்த நேரிடும். தற்கால நமது மாகாண மந்திரிசபை, இந்த வகையில் தமிழர்களை அலட்சியம் செய்து, அவர்கள் கவுரவத்தையும் நிராகரித்து, தங்களுடைய கட்சிப் பலத்தாலும், காங்கிரசின் பெயராலும், இந்தக் காரியத்தைச் செய்ய முனைந்திருக்கின்றது. நமது பாசை, கலை முதலியவற்றுக்குத் தீங்கு செய்யுமிடத்து, காங்கிரசாயிருந்தாலும் நாம் அதற்கு இடந்தரக்கூடாது. உண்மையில் காங்கிரசு நிறுவனங்கூட, இந்தியே எல்லா மக்களுக்கும் கடடாயமான பொதுமொழியென முடிவு செய்துவிடவில்லை. ஆகவே நமது மாகாண மந்திரி சபை செய்யும் இது, தமிழர்களாகிய நம்மால் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
– வட ஆர்க்காடு தமிழர் மாநாட்டுத் தலைமையுரை 26.2.1938, திருவத்திபுரம்
தமிழுக்கே தகுதி (1938) – மறைமலையடிகள்
ஆங்கிலம் கற்றவர் அம்மொழியைப் பேசினால் அதன் பொருளை அறியாமல் நம் ஏழை மக்கள் திகைத்து விழிப்பது போலவே; இந்தி மொழியைக் கற்றவர் நம் மக்களிடையே இந்தியில் பேசினால் அவர் அதன் பொருளை அறியாமல் திகைத்து விழிப்பர் என்பதை நாம் சொல்லுதலும் வேண்டுமோ? ஆகவே; இவ்விந்திய தேயத்தில்……தாம்தாம் பேசும் தாய்மொழியையே நன்கு பயின்று அதன் வாயிலாக இம்மை மறுமை வாழ்க்கைக்குரிய பல துறைகளிலும் நல்லறிவு பெற்று முன்னேற்றம் அடையும்படி உதவி செய்தல் வேண்டும்.
.. .. .. இங்ஙனம் செய்வதை விட்டு இந்தி மொழியைக் கட்டாயப் பயிற்சிக்காக வைக்கப் பெரிதும் முயல்வது; உமிக்குற்றிக் கைசலிப்பதாய் முடியுமே அல்லாது; அதனால் ஒரு சிறு பயன்தானும் விளையமாட்டாது.
எல்லா வகையாலும் சிறந்த தமிழ்மொழி இவ்விந்திய நாடு முழுமைக்கும் பொதுமொழி யாவதற்குரிய நலன்கள் எல்லாம் வாய்த்ததாயிருந்தும் அதனை பொதுமொழியாக்க முயலாமல் “இந்தி” முதலான சிதைவு கலப்பு மொழிகளை இத்தேயத்திற்கு பொது மொழியாக்க வேண்டுமென்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவாரா என்பதனை அறிவுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும்.
– மறைமலை அடிகள், இந்தி பொதுமொழியா? (Is Hindi a common Language?) 1938
இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிப்போர் வரலாறு அறிவோம்!
No comments:
Post a Comment