(குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! –தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
15. வந்தபின் காப்பதை விட வருமுன் காத்திடு!
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 429)
எதிர் வருவதை முன்பே எதிர்நோக்கி – அறிந்து காக்க வல்ல அறிவு உடையவர்க்கு அவர் நடுங்கும் படி வரக்கூடிய துன்பம் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.
நடக்க இருப்பதை முன்கூட்டி உணர்பவர்கள் துன்பத்தைத் தடுப்பர் (Those who foresee the outcome will avoid suffering) என்கின்றனர் ஆளுமை அறிவியலாளர்கள்.
எதிரது=எதிர்காலத்தில் நேரக் கூடியது; ஆ-ஆகும்படி; காக்கும்=காப்பாற்றும்; அதிர=நடுங்கும்படி; நோய்=துன்பம்/வாழ்க்கைத்துயரம்,பிணி.
ஆள்வோராயினும் ஆளப்படுவோராயினும் எதிர்காலத்தில் வருவதை எதிர்நோக்கும் அறிவு இருப்பின் எத்துன்பத்திலிருந்தும் காத்துக் கொள்ளலாம். மழை, புயல், வெள்ளம், வறட்சி, பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் தொடர்பிலான முன்கூட்டிய அறிவு இருப்பின் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றலாம் அல்லது தீமைகளின் கடுமைகளைக் குறைக்கலாம். தொற்றுநோய்கள், பிற நோய்கள் குறித்த எதிர்கால விழிப்புணர்வு இருப்பின் நோயின்றி வாழச்செய்யலாம், வாழலாம்.
நாடாயினும் வீடாயினும் இன்றைய பணத் தேவையைமட்டும் கருத்தில் கொண்டு செயலாற்றாமல் எதிர்காலப் பணத்தேவையையும் உணர்ந்து செயல்பட்டால் பின்னர் வரும் துன்பங்களிலிருந்து தப்பிக்கலாம்.
நேற்றைய துன்பங்கள் இடர்கள் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிராமல் அவற்றைப் பாடங்களாக எடுத்துக் கொண்டு நாளை வரும் துன்பங்கள் இடர்களிலிருந்து காத்துக் கொள்ளும் அறிவுடைமை வேண்டும். வீட்டிற்கும் நாட்டிற்குமான எதிர்காலத் தேவைகளை முன் கூட்டியே அறிந்து திட்டமிட்டு அதற்கான வருவாயைப் பெறும் முறை குறித்து முடிவெடுத்துச் செயற்படுத்தினால் தேவைகள் வரும் பொழுது அவற்றைச் சமாளிக்க முடியாமல் அல்லல்பட வேண்டியதில்லை. குடிமக்கள் சிக்கல்கள், தொழிலாளர்கள் சிக்கல்கள், பணியாளர்கள் சிக்கல்கள், தொடர்ச்சியாக இயங்குவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் முதலியவறைப்பற்றி முன்னரே உணர்ந்து வரும் தீமைகளிலிருந்து காத்துக் கொண்டால் அத்தகையோரை வெல்ல இருப்பவர் யார்தான் உளர்? (எவருமிலர்.)
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment