(குறள் கடலில் சில துளிகள் : 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
16.
அறிவை உடைமையாக்கி எல்லாம் உடையவனாகத் திகழ்க!
அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 430)
அறிவுடையார் எல்லா நலன்களும் உடையவர்; அறிவில்லாதவர் வேறு எச்செல்வம் பெற்றிருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவார் என்கிறார் திருவள்ளுவர்.
உடையர்=உடைமையாகக் கொண்டவர்.
அறிவு மாணிக்கங்களை விட மிகுதியும் மதிப்பானது. நீங்கள் விரும்பும் எதனுடனும் அதை ஒப்பிட முடியாது(Wisdom is more precious than rubies, and nothing you desire can compare with her.) என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பரிமேலழகர், “செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை ‘எல்லாம் உடையார்’ என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, ‘என்னுடயரேனும் இலர்’ என்றும் கூறினார்.” என்கிறார்.
வாழ்விற்கு அடிப்படை, பொருட் செல்வமே! பரம்பரைச் செல்வம் பெற்றிருப்பினும் அதைப் பெருக்கவும் பேணிக் காக்கவும் அறிவு தேவை. அறிவில்லாதவன் அவற்றை முறையற்ற வழிகளில் செலவழித்து இழப்பு அடைகிறான். செல்வம் பெற்றிராதவனும் அறிவால் திட்டமிட்டுச் செயலாற்றிப் பொருட் செல்வத்தைப்பெற இயலும். இவ்வாறு அறிவுச் செல்வம் உள்ளவர் பிற செல்வங்களைப் பெற முடியும். பிற செல்வங்களில் ஒன்றோ பலவோ அனைத்துமோ இருப்பினும் அறிவுச் செல்வம் இல்லாதவரால் உரிய பயன்களை அடைய முடியாது. முறையற்றவற்றில் முதலீடு செய்து அவற்றை இழப்பான். அல்லது பாதுகாக்கத் தெரியாமல் களவு, கொள்ளை, மோசடித் திட்டங்கள் போன்றவற்றால் உள்ளவற்றைப் பறி கொடுப்பான். எனவே, எச்செல்வம் பெற்றிருந்தாலும் அறிவுச் செல்வம் இல்லையேல் ஒன்றும் இல்லாதவானாகிறான். அறிவுள்ளவன் எதையும் எளிதில் நிறைவேற்றக் கூடியவனாக இருக்கிறான். அதனால் வேறு ஒன்றும் உடைமையாக இல்லாவிட்டாலும் எல்லாம் உடையவன்போல் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அறிவு உடையவனிடம் பிற உடைமைகள் வந்து சேர்கின்றன.
இதனை வழிமொழிந்து, பின் வந்த நாலாடியாரும் நுண்ணறிவின்மையே வறுமை என்றும் நுண்ணறிவேமிகப்பெருஞ்செல்வம் ( பாடல் 251 ) என்றும் கூறுகிறது. பழமொழி நானூறும் ஆடையில்லாதவனை அணிமணி ஒப்பனை அழகு செய்யுமா? அறிவில்லாதவனைப் பிற செல்வங்கள் பெருமையுறச் செய்யுமா? என வினா தொடுக்கிறது(பாடல் 271).
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment