(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

அடுத்து இக்கால இந்திஎதிர்ப்புப் போராட்டங்களுக்கு வருவோம்.

1930-1940 இல் எழுந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ‘முதல் மொழிப்போர்’ என்கின்றனர்.

இந்தியைப் பரப்பும் பணி 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. 1893இல் ‘நகரி பிரச்சாரனி சபா’ எனக் காசியிலும் 1910 இல் அலகாபாத்தில் ‘இந்தி சாகித்திய சம்மேளன்’ என்றும் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

1905 இல் பனாரசில் தேவநாகரி பரப்புரை அவை மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பாலகங்காதர திலகர், “உங்களுக்குத் தேசம் தேவையாயின் அதைக் கட்டமைக்க ஒரு பொதுமொழி அனைவருக்கும் தேவை. அதனால், தேவநாகரி எழுத்தை நாம் பொதுமொழியாகப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

அதன்பின், இந்தித்திணிப்பிற்கு மூலவாய் காந்தியடிகளே. ஆண்டுதோறும் நடைபெறும் பேராயக்கட்சி(காங்கிரசு) மாநாடு 1925 இல் கான்பூர் நகரில் கூடியது. அம்மாநாட்டின் முடிவு வாயிலாகத்தான் இந்தி இந்தியாவைத் துண்டாக்க நுழைந்தது.

 அந்த மாநாட்டில் இந்தியைப் பற்றிய தனது எதிர்காலத் திட்டங்களையும் கனவுகளையும் வெளிப்படுத்தினார் காந்தி.

பேராயக்கட்சியின் கொள்கைகளும் நோக்கங்களும் கடைக்கோடி இந்தியனுக்கும் சென்று சேர, அக்கட்சிக் கூட்டங்களில் பேசப்படும் மொழி ஆங்கிலமாக இருப்பது மாற்றப்பட வேண்டும். ஓர் இந்திய மொழியாக இருக்க வேண்டும். ஆக, ஆங்கிலத்தின் பயன்பாட்டைத் தவிர்த்து, எல்லாரும் இந்தியைப் பயன்படுத்தவேண்டும்!’ என வலியுறுத்தினார்.

காந்தியின் கனவை நனவாக மாற்ற வேண்டும் எனப் பேராயக்கட்சித் தலைவர்கள் முடிவெடுத்தனர். அலுவல் மொழி தொடர்பான அக்கட்சி விதியான 33ஆவது பிரிவைத் திருத்தம் செய்வதற்கு இறங்கினர்.  பேராயக்கட்சிக் கூட்டங்களும் கருத்துகளும் பரிமாற்றங்களும் ஆங்கில மொழியில் நடத்தப்படவேண்டும் என்பதுதான் 33 ஆவது பிரிவு.

அப் பிரிவு, “இனிமேல் பேராயக் கட்சியின் கூட்டங்கள் இந்தி மொழியில் நடத்தப்படும். இந்தி தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் பேசலாம்” என்று திருத்தம் செய்யப்பட்டது.

காந்தியின் இந்தி முன்மொழிவைப் பேராயக்கட்சியின் பிற தலைவர்களும் வழிமொழிந்தனர். இந்திய அரசுப்பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்தவர் வயவர்டி. விசயராகவாச்சாரி. பள்ளி, கல்லூரிகளில் இந்தியை இரண்டாவது மொழிப்பாடமாக வைக்கவேண்டும். அதன்மூலம் இந்தி கற்றுக்கொடுக்கும் பணிகள் கல்வித்துறைக்கு எளிமையாகும்; மக்களுக்கும் பலன் தரும் என்றார் இவர். அவர், இந்தித் தேர்வில் ஒருவர் வெற்றிபெற முடியவில்லை என்றால் அவரைப் படித்தவராகவே கருதமுடியாது என்றார்.

இந்தியாவின் பொதுமொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பதே காந்தியின் விருப்பம். அதை முதலில் தங்கள் கட்சியில் கொண்டு வந்தார்கள் பேராயக் கட்சியினர்.

ஒவ்வோர் ஆண்டும் அகில இந்தியப் பேராயக் கட்சி மாநாடு நடத்தும்போது அகில இந்திய இந்தி மாநாட்டையும் சேர்த்து நடத்தும் நடைமுறையை 1924இல் நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

பெரியார் ஈ.வெ.இராமசாமி, 1922இல்  பேராயக் கட்சியில் இருந்த போது இந்திப்பள்ளியை நிறுவினார். பின் அவர், சமற்கிருதத்தையும் ஆரிய நாகரிகத்தையும் நிலைநாட்டவே கட்சியிலிருந்த ஆதிக்க சக்திகள் இந்திமொழியைக் கருவியாகக் கையாளுகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே 1926 முதல் இந்தியைக் கடுமையாக எதிர்த்தார்.

இவ்வாறு நான்காவது அகில இந்திய இந்தி மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. மாநாட்டுத் தலைவர் சரோசினி(நாயுடு). இந்திப் பரப்புரை இயக்கம் என்பது ஒரு கட்சியின் அல்லது ஒரு வகுப்பாரின் வேலை அல்ல; இது நாட்டிலுள்ள அனைத்து மக்களின் – கட்சிகளின் – வகுப்பாரின் ஒற்றுமை உணர்வின் அடையாளம் என்று அவர் பேசினார். மாநாட்டினர் பெருமளவு இவ்வுரைக்கு வரவேற்பு அளித்தனர். ஆனால், இவ்வுரை இந்தி பேசா மக்களிடையே எதிர்ப்பையே விளைவித்தது.

கட்டாய இந்தி கொண்டுவருவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர், அஃதாவது 1930 இல் நன்னிலத்தில் கூடிய தன்மதிப்பு(சுயமரியாதை) மாநாட்டில் இராமநாதன் என்பார்  இந்தியை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அவர் 1938இல்  விளம்பரத்துறை அமைச்சர். என்கிறது ஒரு கட்டுரை.

அம் மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்துப்  பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார் என்கிறது ஒரு கட்டுரை.

1930ஆம் ஆண்டு நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றியுள்ளனர்  எனப் பொதுவாகக் கூறுகிறது தந்தை பெரியார் நூல் (கவிஞர் கருணானந்தம்)

‘நினைவலைகள்’ நூலில் நெ.து.சுந்தரவடிவேலு, 1931இல் விருதுநகரில் நடந்தது மூன்றாவது சுயமரியாதை மாநாடு என்கிறார். இதே மாதிரிப் பெண்கள் தலைமையில் நடந்த மாநாடுகளைக் குறிப்பிடும் கட்டுரை ஒன்றிலும் 1931 இல் மூன்றாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது என்கிறது.

மற்றொரு கட்டுரை ஒன்றில் விருதுநகரில் மாகாண சுயமரியாதை நடைபெற்ற பொழுது மூன்றாவது சுயமரியாதை இளைஞர்(வாலிபர்)மாநாடு நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறது.

ஆனால், தன்மதிப்பு  மாநாடு ஒன்றில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் வந்தது மட்டும் உண்மை. ஒருவேளை நன்னிலம் மாநாடு மாநில மாநாடாக இல்லாமல் இருந்திருக்கலாம்.

மாநாட்டில் உலகமொழியாக விளங்கும் ஆங்கிலத்தையே தாய்மொழிக்கு அடுத்தபடியாக நமது இளைஞர்கள் கற்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்க முடிவெடுத்தனர். சென்னை மாநகராட்சி மன்றத்தில் இந்தியை ஐந்தாம் வகுப்பு தொடங்கி உயர்நிலைப் பள்ளிகளிலும் விருப்பப்பாடமாக வைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை  கொண்டுவந்தார் சுயராச்சியக் கட்சி உறுப்பினர் சத்தியமூர்த்தி. இந்திக்கு மாற்றாக இந்துத்தானியை வைக்கவேண்டும் என்றார் இசுலாமிய வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர். சென்னை மாநகராட்சி மன்றத்தில் நீதிக்கட்சி பெரும்பான்மையுடன் இருந்ததால் சத்தியமூர்த்தியின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

ஆனாலும் தன்னுடைய முயற்சிகளை எசு. சத்தியமூர்த்தி கைவிடவில்லை.” இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பரப்புரை மட்டும் போதாது. இந்தியைக் கற்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவேண்டும். ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாய மொழிப்பாடமாக ஆக்கவேண்டும். அதைச் செய்தால் இன்னும் பதினைந்தே ஆண்டுகளில் இந்தியா இந்தி நாடாகிவிடும்” என்று பேசினார்(சென்னை மெயில், 12.07.1934). இந்தியை எதிர்க்கின்றவர்கள் தலைகளை வெட்ட வேண்டும் என்றவர் சத்தியமூர்த்தி.