(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-4 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

காந்தி, சத்தியமூர்த்தி வழியில் இராசாசியும் இந்திப் பரப்புரைப் பணியில் ஈடுபட்டார். இந்தியப் பள்ளிகளில் பிரித்தானியர் வரலாறு ஆங்கிலத்தில் சொல்லித்தரப்படவேண்டும்; இந்திய வரலாறு இந்தியில் சொல்லித்தரப்படவேண்டும் என்று திருநெல்வேலியில் நடந்த பள்ளிவிழா ஒன்றில் கூறினார் அவர்.  தென்னிந்தியர்களுக்கு இந்தி அறிவைப் புகட்டுவது அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற வழிவகுக்கும் என்றார்.

இராசாசியும் சத்தியமூர்த்தியும் தொடர்ச்சியாக இநதிப் பரப்புரையில் ஈடுபட்டனர்.  எனவே, பெரியார் ஈ.வெ.இரா. “தம் குடியரசு இதழில், பழையன கழிந்து புதியன புகுவதாக இருந்தால் நமக்குக் கவலை இல்லை. ஆனால், புதியவை வந்து பலாத்காமாய்ப் புகுந்து கொண்டு பழையனவற்றை வலுக்கட்டாயமாகக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதைச் சகித்துக் கொண்டு அதற்கு வக்காலத்து பேசுவது மொழித் துரோகம், சமூகத் துரோகம்” என்று எழுதினார்.

இந்தித்திணிப்புக் குரல்கள்போல், இந்திக்கான எதிர்க்குரல்களும் எழுந்துகொண்டிருந்தன. முதலில் ‘பேராயக் கட்சியின் அலுவல் மொழியாக இந்தி’  என்பது எதிர்க்கப்பட்டது.

தங்கள் கட்சியின் மூலம் இந்தித்திணிப்புப் பணியில் ஈடுபட்ட பேராயக்கட்சியினர், ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் மட்டுமே அரசுமொழியாகப் பயன்படுத்தப்பட்டதை மாற்ற வேண்டும் என்றனர்.  ஆட்சியில் இந்தி அமர, அதனைக் கல்வியில் திணிக்க வேண்டும் என்றனர்.  காந்தியடிகளும் நேருவும் இந்துத்தானி மொழியை இந்தி பேசாத மாநிலங்களில் பரப்பும் பணிகளில் ஈடுபட்டனர். பெரியார் ஈ.வெ.இராமசாமி தொலைநோக்கு உணர்வுடன் கருதிப்பார்த்து, இந்தி அல்லது இந்துத்தானியைப் பொதுமொழியாக்குவது, தமிழரை வட இந்தியர்களுக்கு அடிமையாக்கும் என்றார்.

 ஆனால், இவற்றிற்கெல்லாம் முன்னதாகவே இந்தியைத் தென் மாநிலங்களில் திறந்துவிடக் காந்தி வழி வகுத்தார். 1918இல் காந்தியடிகள், அப்போதைய சென்னை மாகாணத்திலும் பங்கனப்பள்ளி, கொச்சின், ஐதராபாத்து, மைசூர், புதுக்கோட்டை, சந்தூர், திருவிதாங்கூர் ஆகிய தனியரசு மாநிலங்களிலும் இந்திக் கல்வியை பரப்புவதற்காகத் தென்னிந்தியா இந்தி பரப்புரை அவையைச் (Dakshina Bharat Hindi Prachar Sabha) சென்னையில் நிறுவினார். இந்த அவையைச் சென்னையில் கோகலே அரங்கில் அன்னி பெசண்டு, 17.06.1918 அன்று தொடங்கி வைத்தார். முதல் வகுப்பைக் காந்தியின் மகன் தேவதாசு காந்தி எடுத்தார். காந்தியடிகள் சாகும் வரை இதன் தலைவராக இருந்தார். மாணவர்களின் எண்ணிக்கை 1919இல் 80 ஆக இருந்தது. இன்று, அடுத்தடுத்த ஆண்டுகளில் நூறாயிரக்கணக்கில் பெருகியுள்ளது. இந்த இயக்கம் 6000 மையங்களில், 7000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் பெரிய அவையாக உள்ளது. 8 நிலைகளில் தேர்வுகள் நடத்துகிறார்கள். 2021 இல் மட்டும் மூன்று நூறாயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

ஒரு மொழியைக் கற்றுக்கொண்டால் தவறில்லை என்ற நல்லெண்ணத்தில் இந்தி பரப்பு அவையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், பொய்யான புள்ளிவிவரஙக்ளை அளித்தும் ஏறத்தாழ 80 மொழிபேசுவோர் எண்ணிக்கையை இந்தி பேசுவோராகக் காட்டியும் இந்தியைப் பொதுமொழியாக்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் இந்தி அறிந்தோர் பெரும்பான்மையராக இருப்பதாகக் கூறி அதனை முதலில் பொதுமொழியாக ஏற்கச் செய்து பின்னர் ஆட்சி மொழியாக மாற்றச் சதி செய்வதே நோக்கம். நாம் இதைத் தொலைநோக்கு உணர்வுடன் கருதிப் பார்க்க வேண்டும். இந்தி படிக்க விரும்புவோர், இணையவழியிலும் அஞ்சல் வழியிலும் கற்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். இந்தி பரப்பு அவையை மூடுவதே தமிழுக்கும் பிற தேசிய மொழிகளுக்குமான பாதுகாப்பாகும்.

கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்தது முதல் மொழிப்போர்! முதல் மொழிப்போரை வழிநடத்தியவர் தந்தை பெரியார்.

1930களின் தொடக்கத்திலேயே இந்துத்தானி சேவாதள், இந்துத்தானி இதாசி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள்  சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன. ஆனால், இதே நீதிக்கட்சி, பின்னர் இந்திக்கு எதிராகப் போராடியது. நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கு முன்னதாகவே 1926 இலிருந்து பெரியார் ஈ.வெ.இராமசாமி இந்தித்திணிப்பிற்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தார். இந்தி, கட்டாயப் பாடமாக்கப்படும் எனச் செய்திகள் வந்தமையால்,  27.8.1937 இல் தஞ்சாவூரில் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது. மறியலும் போராட்டமும் நிகழ்ந்தன.

1937ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பேராயக்கட்சி வெற்றி பெற்றது; மொத்தமுள்ள 215 இடங்களில் 152 இடங்களைப் பெற்றது பேராயக் கட்சி.  14.07.1937 அன்று சென்னை மாகாண முதல்வராக மூதறிஞர் இராசாசி பொறுப்பேற்றார். தேர்தல் பரப்புரையின்பொழுதே இந்தி தேவை எனப் பேசி வந்தார். வட மாநிலங்களில் தனியார் துறைகளில் வேலை தேட இந்தி தேவை எனச் சுதேசமித்திரன் நாளிதழில்(06.05.1937) எழுதினார்.

மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற்றவராவர். அப்பொழுதுதான் அடுத்த வகுப்பிற்குப் போக முடியும் என்றும் முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாகவும்  அரசு அறிவித்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நிறைந்ததே சென்னை மாகாணம். எனவே, பள்ளிகளில் இந்நான்கு மொழிகளும் விருப்பப் பாடங்களாக இருந்தன. இவற்றுடன் இராசாசி அரசு  இந்தியையும் நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் கட்டாயமாக்கியது. அஃதாவது தாய்மொழிகள் எல்லாம் விருப்பப்பாட முறையிலும் இந்தி, கட்டாயப்பாடமாகவும் இருந்தன. இதனால், இராசாசிக்கு உட்கட்சியிலேயே எதிர்ப்பு வந்தது. இருப்பினும் இராசாசி இந்தியாவில் பரவலாகப் பேசப்படும் மொழி என்று சொல்லி இந்தியைப் பாடமொழியாக வைப்பதில் உறுதியாக இருந்தார்.

1910இல் கல்வித்துறை இயக்குநர் கிருட்டிணசாமி (ஐயர்) தமிழைக் கட்டாயப்பாடமாக்கக்கூடாது என்றார். (இவர்களுக்கெல்லாம் தமிழ், தமிழ்நாட்டில் கட்டாயப்பாடமாக இருக்கக் கூடாது ஆனால், இந்தியும் சமற்கிருதமும் கட்டாயப்பாடங்களாக இருக்க வேண்டும். இத்தகையோர்களால்தான் பிராமணர்களைத் தமிழர்களல்லர் என்றும் தமிழ்ப்பகைவர்கள் என்றும் கூறும் சூழல் ஏற்பட்டது. ஆனால், தமிழைத்தாயாகக் கருதும் பிராமணர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.)  இதன் காரணமாக இதனை எதிர்த்துத் தமிழைப் பரப்பத் தோன்றியதே தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்ச்சங்கம். இத்தகைய கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் 28.08.1937 இல்   இந்தி கட்டாயப்பாடமாக்கப்படுவதைக் கண்டித்துக் கண்டனக் கூட்டம் நடைபெற்றது கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.