(குறள் கடலில் சில துளிகள் 11. உலகம்தழுவியதேஅறிவு! – தொடர்ச்சி)

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.

 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்அறிவுடைமைகுறள் எண்: 426)

உலகம் எவ்வாறு இயங்குகிறதோ அவ்வழியில் இயங்குவதே அறிவு என்கிறார் திருவள்ளுவர்.

ஆள்வோர்கள் உலகம் தழுவிச் செல்லும் அறிவை இழப்பதாலேயே போர்கள் உண்டாகின்றன என வரலாற்றிஞர்கள் கூறுகின்றனர்.

பரிமேலழகர், ‘உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,’ எனக் கருதித்தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று.  என்கிறார். எனவே,

உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன.( கீதை 10.8). இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும் ….   …. நானேதான் (கீதை 9.16) “இந்த உலகத்தின் அப்பன், அம்மா, இதைத் தரிப்போன், பாட்டன் நான்; “(கீதை 9.17)”எவை எல்லாம் பெருமை, உண்மை, அழகு, வலிமை உடையதோ அவை எல்லாம் என் மகிமையின் அம்சத்தில் இருந்து பிறந்தது என்று நீ அறிந்து கொள் (கீதை – 10.41), இந்த உலகம் என் சக்தியால் இயங்குகிறது”(கீதை – 10.42 ), எனக் கீதையில் கண்ணன் எல்லாமும் தான்தான் எனச் சொல்வதை அறிவின்மையாகப் பரிமேலழகர் கூறுகிறார்.

உலகத்தோடு ஒட்ட ஒழுக வேண்டும்(குறள் 140) என முன்னரே திருவள்ளுவர் கூறியுள்ளார். முன் குறளிலும் உலகம் தழுவி இருத்தலேஅறிவுடைமை என்றார். இப்பொழுது மீண்டும் உலகத்தோடு பொருந்தி இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறார்.

மன்பதை சார்ந்து வாழ்பவன் மனிதன். மன்பதை புதிய புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் பொழுது தானும் புதிய சிந்தனைகளை ஏற்க வேண்டும். இதையே உலகத்தோடு ஒட்ட ஒழுகல் எனத் திருவள்ளுவர் கூறுவதாக உரையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

(தொடரும்)