(குறள் கடலில் சில துளிகள் 4 – இலக்குவனார்திருவள்ளுவன் – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
5. நுட்பமாய்க் கேட்பவர் பணிவாய்ச் சொல்வார்!
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 419)
நுட்பமான கேள்விச்செல்வத்தைக் கேட்டு அறியாதவரால், பணிவான சொற்களைக் கூற இயலாது என்கிறார் திருவள்ளுவர்.
தீவிரமாகக் கேட்பவர்(active listener) அடுத்தவர் என்ன சொல்கிறார என்பதை அடக்கத்துடன் கேட்கும் இயல்பைப்பெற்று விடுகிறார் எனக் கல்வி உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அடக்கத்துடன் கேட்பவர்கள், பணிவுடன் இருப்பது இயற்கைதானே.
வணங்கிய வாயினர் என்பது வணக்கமான – பணிவான சொற்களைக் கூறும் வாய் உடையவர் என்று விரிகிறது. கேள்விச் செல்வத்திற்கும் பணிதலுக்கும் என்ன தொடர்பு? தனக்கு எல்லாம் தெரியும் என எண்ணுவோர்க்குப் பணிவு இருக்காது. நமக்குத் தெரியாத எதைச் சொல்லப் போகிறார்கள் என்ற ஆணவம் இருக்கும். பணிவு இருந்தால்தான் சொல்லப்படும் செய்தியைக் கேட்கும் ஆர்வமும் அதன் உண்மைப் பொருளை ஆராயும் ஈடுபாடும் அறியாத செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வேட்கையும் கொண்டு கற்றறிந்த மதிக்கத்தக்கவரை மதித்துக் கேட்பர். பணிவில்லையேல் கேள்விச்செல்வத்திற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது. எனவே, பணிவாகப் பேசத் தெரியாதவர்கள், நாவடக்கம் இல்லாதவர்கள், கேள்விச் செல்வத்தை இழப்பதுடன் மதிப்பையும் இழப்பர்.
மணக்குடவர் “இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது” என்கிறார். பரிப்பெருமாள், “(கேள்வியுடையார்) தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை” என்கிறார்.
தன்னைத்தான் வியந்து கொள்பவர்களும் ஒருமுறையேனும் அடக்கத்துடன் தக்கவர் சொல்வதைக் கேட்டால், அவரது பெருமையும் தனது சிறுமையும் உணர்ந்து பணிவுடையவராக மாறுவர்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment