(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 : தொடர்ச்சி)

பெரிய திரை என்று மட்டுமல்ல. சின்ன திரைக் கலைஞர்களையும் கதைகளில் வருவதுபோல் காட்சிகளை அமைத்து விடுவோம். அது மட்டுமல்ல.ஒரு தொலைக்காட்சித் தொடரையும் மற்றொரு தொடரையும் அல்லது மற்ற இரு தொடர்களையும் இணைத்து ஒன்றாகக் காட்டுவோம்.

தொலைக்காட்சித் தொடர்களை இணைத்துக் காட்டுவீர்களா?

ஆமாம். வெவ்வேறு தொடர்களில் உள்ள கதைமாந்தர்கள் சந்திப்பது போலும் ஏதேனும் சிக்கல்களைச் சேர்ந்து அவிழ்ப்பதுபோலும் உதவிக் கொள்வதுபோலும் கதைகளை அமைப்போம்.

குடும்பத்தினர் சேர்ந்து விளையாடுவதாகவும் காட்சிகள் வைப்போம். பாட்டுக்குப் பாட்டு விளையாட்டுப் புதிர் போன்றவற்றை நடத்துவோம். வீடுகளிலிருந்தே மக்களும் தங்களுக்குள் இதில் பங்கேற்பர். இந்த ஆர்வம் அவர்களை நிகழ்ச்சியைப் பார்க்கத் தூண்டுகோலாய் அமையும். அப்படியும் பார்ப்பவர் எண்ணிக்கையில் சறுக்கல் ஏற்பட்டால் நெருக்கமான காட்சிகளை வைப்போம்.

நெருக்கமான காட்சிகளா? குடும்பத்தோடு அல்லவா மக்கள் பார்ப்பர்.

இந்தக்காலப் பிள்ளைகள் எல்லாம் பிஞ்சிலே பழுத்தவர்கள். எனவே அது குறித்துக் கவலைப்பட மாட்டோம். எனவே, முத்தக்காட்சிகளையும்  நெருங்கிய கட்டியணைப்புகளையும் ஆவலுடன்தான் அனைவரும் பார்ப்பர். இதற்குப் பின்னணியாக நெருக்கமான நேரத்தில் பாடும் திரைப்படப்பாடல்களைப் பின்னணியில் வைத்தால் இல்லாத நெருக்கத்தையும் இருப்பதாக எண்ணி மக்கள் மகிழ்வர்.

சரி, சரி. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என் கதையில் இப்படியெல்லாம் புகுத்த வேண்டா.

உங்களை மீறி எதுவும் புகுத்த மாட்டோம்.  ஆனால், உங்கள் கதையில்  காதல் காட்சிகள், கணவன் மனைவி தனித்திருக்கும் காட்சிகள் எலலாம் இருக்கின்றன அல்லவா?

ஆமாம். இருக்கின்றன.

அக்காட்சிகளில் சுவையூட்ட  இப்படி ஏதாவது செய்தால் தவறில்லை. 

இப்படி யெல்லாம் செய்து என் கதையையே நீங்கள் மாற்றி விட மாட்டீர்களா?

இல்லை ஐயா. அப்படியெல்லாம் உங்கள் கதையில் சிதைவு ஏற்படும் வண்ணம் மாற்ற மாட்டோம்.

இதற்கு முன்பு  எழுத்தாளர்கள் சிலர், திரைப்பட நிறுவனத்தினர் தங்கள் கதையைப் படமாக்குவதாகக் கூறிவிட்டுப்  பெயரை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் கதையைத் தங்கள் பெயரில் காட்டுகிறார்கள் என்று சொல்லியுள்ளார்களே!

 ஆமாம் உண்மைதான். ஆனால், அதனால் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துக் கதையை வாங்கி விட்டோம். அதற்குப் பிறகு ஒன்றும் சொல்ல இயலாது என்று சொல்லி விடுவோம்.

அப்படியானால் எனக்கும் அப்படித்தான் சொல்லப் போகிறீர்களாட,

சே! சே! அதெல்லாம் இல்லை. உங்கள் கதையில் அப்படி நேராது.  திரைக்கதை உரையாடலே நீங்கள்தானே. உங்களுக்கு மீறி என்ன தவறு நடந்து விடப் போகிறது. கதையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எங்கள் நோக்கத்திற்கேற்ப மாற்றுவோம். அவ்வளவுதான்.

தன்னம்பிக்கையை ஊட்டும் வண்ணம் தொடர்கள் வருகின்றனவா?

ஏன் வராமல்? இ.ஆ.ப.(ஐ.ஏ.எசு) ஆகி மாவட்ட ஆட்சியராக வேண்டும், இ.கா.ப.(ஐ.பி.எசு.) ஆகிக் காவல் கண்காணிப்பாளர்(எசு.பி.) ஆக வேண்டும் என்று இலட்சியம் கொண்டவர்களை – குறிப்பாகப் பெண்களைக் கதாநாயகிகளாகக் காட்டும் தொடர்களும் உள்ளன. என்றாலும் இவற்றிலும் வழக்கமாக மேலே குறிப்பிட்டவாறான காட்சிகள் எல்லாம் வரும்.

ஆமாம். ஒருவர் 20 வருடங்களாக மாவட்ட ஆட்சியராக இருப்பதாக எல்லாம் கதை எடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

அப்படிச் செய்தால்தான் கதை ஓடும். எனவே, நாங்கள் தெரிந்தே செய்யும் தவறுகள் இதுபோல் நிறைய உண்டு. மக்களும் இது குறித்துக் கவலைப்பட மாட்டார்கள். சிலர் இது குறித்துப் பேசினாலும் மக்கள் மத்தியில் தொடர் நிலைக்க இஃது உதவத்தான் செய்யும்.

பெற்றோர் பிள்ளைகள் பாசம் எல்லாம் காட்டுவீர்களா?

ஆமாம். காட்டுவோம். ஆனால் திரைப்பட அப்பாக்கள்போல்தான். அப்பா பிள்ளைகளிடம் நேரடியாகப் பாசம் காட்ட மாட்டார். அளவுக்கு மீறிக் கண்டிப்பார். ஆனால் பிள்ளைகள் இல்லாத பொழுது தங்கள் மனைவியரிடம் பிள்ளைகள்பற்றி அன்பாகப் பேசுவார்; அக்கறைாகக் கேட்பார்.

மாமியார் மருமகள் உறவு எப்படி இருக்கும்?

நல்ல மாமியார்களும் உள்ளனர். மோசமான மாமியார்களும் உள்ளனர். பொதுவாக மாமியார் மருமகள் உறவு மோசமாக இருப்பதுபோல் கதைகள் மிகுதியாக உள்ளன. நல்ல மருமகளைக் காட்டும் பொழுது தங்கள் வீட்டிற்கு இப்படி ஒரு மருமகள் வரவேண்டும்  என விரும்பி அத் தொடரை விருப்பத்துடன் பார்க்கத் தொடங்குகின்றனர். ஆனால் மாமனார் மருமகள் உறவு நன்றாகத்தான் இருக்கும். எனினும் மாமனார் மருமகள் அல்லது மருமகன் உறவு சரியில்லாததுபோலும் கதைகள் வருகின்றன. மாமனார் எல்லாரிடமும் அடக்குமுறையுடன் நடந்து கொள்வது போலும் கதைகள் வருகின்றன. எப்படி வந்தாலும் மக்கள் விரும்பியே பார்க்கின்றனர்.

கதைகளில் படிதத இளைஞர்களைக் காட்டுவீர்களா?

காட்டுவோம். பொதுவாகப் பெண்கள் படித்து இருப்பார்கள். ஆண்கள் அந்த அளவிற்குப் படித்திருக்க மாட்டார்கள். அவர்கள் விரும்பும் பெண் படிப்பாளி என்று தெரிந்தும் படிப்பில் கருத்து செலுத்தாமல் அப்பெண்களை அடையவே விரும்பித் திருமணமும் செய்து கொள்வார்கள். மனைவியைக் கணவன் எப்படி விரும்பச் செய்கிறான் என்பதுபோல் கதைகளை அமைப்போம்.

உங்கள் கதைகள் எல்லாம் மூலக் கதைகளா?

பெரும்பான்மை பிற மொழித் தொடர்களைத் தமிழில் எடுக்கிறோம். தமிழ்த் தொடர்களையும் பிற மொழிகளில் எடுக்கின்றனர். கதையை இறக்குமதி செய்திருந்தாலும் காட்சி யமைப்பில் எங்கள் கைவண்ணங்களைக் காட்டி விடுவோம்.

அப்படியா? திரைப்படங்களைத் தழுவியும் கதை அமைக்கிறீர்களா?

அப்படியும் உண்டு.  எங்களது தொடர்களையே நாங்களே தழுவி எடுப்போம். அதற்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றது. இந்தக் காட்சி இந்தத் தொடரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்தக்காட்சி அந்தத் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது என்று மக்கள் பேசிக் கொண்டாலும் தொடரைப் பார்க்கத் தவறுவதில்ல. அவர்களைப் பொறுத்தவரை தழுவல்களைக் கண்டு பிடித்த பெருமை மனத்தில் இருக்கும். அவ்வளவுதான்.

சரி, சரி. மீண்டும் நாளை சந்திப்போம்.

(தொடரும்)