(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன் : தொடர்ச்சி)

வணக்கம் ஐயா.

வணக்கம். வாங்க, வாங்க! இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம்?

ஐயா, உங்கள் புதினத்தின் மையக் கருத்து வளரும் தலைமுறையினர் மூத்த தலைமுறையினரைப் போற்றிப்பேண வேண்டும் என்பதுதானே.

ஆமாம். ஆமாம். கூட்டுக் குடும்பமே இல்லாமல் போன இக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தின் நன்மையைக் கருதிச் செயற்பட வேண்டும்.

ஒரு குடும்பத்தில் மூன்று அண்ணன் தம்பியரும் ஒரு தங்கையும் உள்ளனர். மேலும், இவர்களின் சித்தியும் இங்கேயே உள்ளார். அவருக்குக் கணவன் உறவில் வந்த   மணமாகா மருமகள் உள்ளார்.

அடுத்த தெருவில் இவர்களின் உறவினர் குடும்பம். பெற்றோர் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் பெற்றோரை மதிக்காமல் உள்ளனர். ஆனால் முதலில் கூறிய கூட்டுக் குடும்ப நன்மையைப் பார்த்துத் திருந்தி பெற்றோரை மதித்து வாழத் தொடங்குகின்றனர். இரு குடும்பத்தினருமே இணைந்து தத்தம் பெற்றோருக்கு வரும் சிக்கல்களை நீக்கி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

இதன் உச்சக்கட்டமே கதையின் முடிவு. இவ்வளவுதானே! ஆனால், நயம்பட ஆங்காங்கே சிறப்பான வரிகளை இணைத்துப் புதினத்திற்குப் பெருமையைச் சேர்த்துள்ளீர்கள். இப்புதினம் சிறப்பாகப் போற்றப்படுவதன் காரணமே அத்தகைய வரிகள்தாம். உணர்ச்சியுடன் நீங்கள் எழுதிய அவையே புதினத்திற்குப் பாராட்டுகளை வழங்கக் காரணமாக அமைந்துள்ளன.

 ஆமாம், ஆமாம். சரியாகச் சுருக்கமாகக் கூறி விட்டீர்கள். உங்கள் தொடர்களில் வேறு என்ன மாதிரி கதை யமைப்பை வைத்திருப்பீர்கள்.

எந்தத் தொடராக இருந்தாலும் கணவன் தரப்பில் அல்லது மனைவி தரப்பில் மணமாகாத உறவினன் அல்லது வாழா வெட்டியான உறவுப்பெண் இருப்பார். இவர்கள் அடைக்கலமாக அவர்கள் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்குத் தெரியாமல்  குடும்பத்தினருக்கு எதிராகச் சதிச் செயல் புரிவார்கள். அதுபோல் சாப்பாட்டு இராமனான ஒருவனோ பெருந்தீனிக்காரியாக ஒருத்தியோ இருக்க வேண்டும்.

இவர்களும் சதிகாரர்களா?

அப்படி யில்லை. சில நேரம் அப்படிப்பட்ட கதைகளும் உள்ளன. பொதுவாக, இவர்கள் மூலம் நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து விடுவோம்.

அது சரி. நகைச்சுவைக் காட்சிகளும் தேவைதானே. மேலும் எப்படியெல்லாம் கதையைக் கொண்டு போவீர்கள்?

பொய்ப்பழி சுமத்தி வீட்டை விட்டு விரட்டுவது, உண்மை தெரிந்து சேர்த்துக் கொள்வது, வேண்டுதலுக்காகக் கோயிலுக்குப் போவது, நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது அதில் இடையூறு ஏற்படுத்துவது, குல தெய்வக் கோயிலுக்குப் போவது என்று பல நிகழ்ச்சிகளையும் இணைத்து விடுவோம். அதற்குள் கதையை வேறு எம்மாதிரி கொண்டு போகலாம் என்று சிந்தித்து அதற்கேற்பக் கதையை அமைத்து விடுவோம். சில கதைகளில் தந்தை அன்பாக இருந்தாலும் முரட்டுத் தனமாக நடந்து கொள்பவராகக் காட்டுவோம். இவ்வாறு தொடர்களுக்கென்றே சில இலக்கணங்கள் வைத்துள்ளோம்.

இதிலும் கூடக் கோயில் திருவிழா வெல்லாம் வருகிறது. அதனால் பரவாயில்லை.

ஐயா,சொல்வதற்கு நிறைய உள்ளன. அடிப்படையான சிலவற்றை மட்டும் சொல்லியுள்ளோம்.

போதும் போதும். நீங்கள் மாறி மாறி விளக்கி விட்டீர்கள். நான் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் பார்ப்பதில்லை. ஆனால், இன்றைய தொலைக்காட்சிகளின் போக்கினை அறிய நேயர்களின் நாடியைப் பிடித்துப் பார்க்க உதவுவதற்காக இவை குறித்தெல்லாம் கேடடுத் தெரிந்து கொண்டேன்.

அதற்கு நாங்கள் விளக்கியது போதும் அல்லவா ஐயா.

போதும் போதும். நான், உங்களிடம் ஒரு செய்தி சொல்லப் போகிறேன். அது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா? மகிழ்ச்சி அளிக்குமா என்று தெரியாது.

அப்படி என்ன செய்தி சொல்லப் போறீங்க ஐயா.

உங்களுக்கு இந்தக் கதைதான்வேண்டுமா? அல்லது புத்தம் புதிய கதை உங்களுக்கென்றே எழுதித் தரட்டுமா?

புதியதாகவா? சரி எழுதித் தாருங்கள். உங்களுக்கென்றே “விருதாளர் வழங்கும் புத்தம் புதிய கதையில் வரும் தொடர்” என்று விளம்பரம செய்கிறோம். அது சரிங்க ஐயா. என்ன கதை அது?

இப்பொழுது நாம் பேசினோம் அல்லவா? அதையே புதினமாக எழுதித் தருகிறேன். கதை நடைபெறுமிடம், காட்சியில் உள்ள மாந்தரகள், புதியதாக வருவோர், காட்சியிலிருந்து வெளியேறுவோர், அணிய வேண்டிய உடைகள், அணிகலன்கள், காட்சியில் இருக்க வேண்டிய பொருள்கள், எனத் திரைக்கதைக்கு வேண்டிய எல்லாக் குறிப்புகளையும் எழுதித் தருகிறேன்.

அருமை ஐயா. திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பெயரில் புத்தகங்கள் உள்ளன. ஏதாவது உங்களுக்கு வாங்கித் தரலாமா? அல்லது நாங்களே விளக்கலாமா?

காரன் என்பவர் எழுதிய புத்தகம் உள்ளதா?

இருக்கிறதே. எங்களுக்கெல்லாம் அவர் புத்தகம்தான் வழிகாட்டி.

‘காரன்’ பற்றி வேறு என்ன தெரியும்.

20 வருடங்களுக்கு முன் மும்பையிலிருந்து வந்த அவர் ஒரு திரைப்படம் தயாரித்து இயக்கியுள்ளார்.  அத்துடன் திரைப்பட வாழ்க்கையை விட்டே ஒதுங்கிவிட்டார்.

என்ன திரைப்படம் அது?

கைப்பெண்கள் பற்றிய திரைப்படம் எனக் கேள்விப்பட்டோம்.

வேரில் பழுத்த பலா’ என்னும் படம்தானே அது.

ஆமாம் ஆமாம். அதுவேதான். உங்களுக்கு எப்படித் தெரியும் அவரைப்பற்றி. நீங்கள் மும்பையில் இருந்திருக்கிறீர்களா?

ஆம். நான் முன்பு மும்பையில்தான் இருந்தேன்.

அப்படியானால் காரன் இப்பொழுது எங்கே உள்ளார்? உங்களுக்குத் தெரியுமா? யாருக்குமே அவரைப்பற்றி ஒன்றும்  தெரியவில்லை. நீங்கள்சொன்னால் நாங்கள அவரைப்பார்ப்போம்.

காரன் இப்பொழுது இங்கே தான் இருக்கிறார்.

இங்கே என்றால் தமிழ்நாட்டிலா? சென்னையிலா?

இங்கே என்றால் இங்கேதான்.

எங்களுக்குப் புரியவில்லை. அவரிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.

நான்தான் அந்தக் காரன்.

நீங்களா? உங்களுக்கே நாங்கள் திரைக்கதை எழுதுவது குறித்துக் கற்றுக் கொடுக்க வந்துள்ளோமா? மன்னித்து விடுங்கள் ஐயா.  அது ஏன் ஐயா, காரன் எனப் பெயர் வைத்துக் கொண்டீர்கள்?

திரைத்துறையினருக்கு நான் ஒரு வேலைக்காரன் என்பதற்காக வேலைக்காரன் எனப் பெயர் வைத்துக்கொள்ள விருமபினேன். ஆனால், நான் மும்பையில் இருந்து வந்ததால்,  மும்பைக்காரனாகக் காட்டிக் கொள்ள வேலைக்காரன் என்பதைச் சுருக்கிக் காரன் எனப் பெயர் சூட்டிக் கொண்டேன். அந்தப் பெயருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

உங்கள் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்ததே. பிறகு ஏன் திரைப்படத் துறையை விட்டு விலகினீர்கள்?

நாணயம், நேர்மை, ஒழுக்கம் முதலியவற்றிற்கு வாய்ப்பு குறைந்ததால் இதில் நீடிக்க விரும்பவில்லை. காதல் காட்சிகளில் நாயகன் நாயகியிடம் நெருக்கம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடையே நெருக்கம் உண்டாகும் வகையில் அவர்களைச் சேர்த்து வைப்பது, காட்சி யமைப்பை வெவ்வேறு கோணங்களில் எடுப்பதாகக் கூறி மிகுதியான படச்சுருளை வீணாக்குவது, படுக்கைப் பகிர்வுகள், போன்ற பலவும் என்னைத் திரைத்துறையில் இருக்க விடவில்லை. எனினும் என் கதையார்வம் ஓயவில்லை. எனவே, பத்தாண்டுகள் பின்னர் இங்கே வந்து, விருதாளர் என்ற பெயரில் கதைகள், புதினங்கள் எழுதினேன்.

அதனால் இலக்கிய உலகிற்கும் நல்ல எழுத்தாளர் கிடைத்தார்.

ஐயா, இதற்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை. நீங்கள் இயக்குவதாக இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. உங்கள் இசைவைச் சொல்கிறீர்களா?

எனக்கு முழு உரிமை அளித்தால் இயக்குவதற்குத் தடையில்லை.

மிக்க மகிழ்ச்சி ஐயா. எங்கள் நிறுவனத்தினர் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள். சரிங்க ஐயா. நீங்கள் எழுதி இயக்கித் தரப்போகிற  தொலைக்காட்சிக் கதைக்கு என்ன பெயர்?

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்.”

000