(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 1. மிக்கதைக் கொள்க! – தொடர்ச்சி)

பெரியார் ஈ.வெ.இரா.குறித்து நாம் பின்வருவனவற்றை அறிவோம்.

1. பெரியார் ஈ.வெ.இரா. நிறைகள்

2. பெரியார் ஈ.வெ.இரா. குறைகள்

3. பெரியார் ஈ.வெ.இரா. மீது குறைகளாகச் சொல்லப்படுவன

4. பெரியார் ஈ.வெ.இராகுறித்த பழிப்புரைகள்

பெரியார் மீதான பழிப்புரைகளையும் குறைகளாகச் சொல்லப்படுவனவற்றையும் பார்த்தாலே அவரைப்பற்றிய நிறைகளையும் நாம் அறியலாம். எனவே, மேற்குறித்தவற்றை நாம் வரிசை மாறிப்பார்க்கலாம்.

இதழ்களிலும் பிற ஊடகங்களிலும் வந்த கருத்துகளின் தொகுப்பாக்கமே இத் தொடர். எனினும் யார், எதைச் சொன்னது என்ற குறிப்பு இடம் பெறவில்லை. ஏனெனில் ஒரே செய்தி பலராலும் சொல்லப்பட்டிருப்பதாலும் எது முந்தையது என்ற தகவல் இன்மையாலும் தரவுக் குறிப்புகள் இடம் பெறவில்லை.

பெரியார் மன்பதைச் சீர்திருத்தவாதி. அந்த முறையில் நம் நாட்டில் இருக்கும் மதங்களில் மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதியும் பேசியும் வந்துள்ளார். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதத்தைப்பற்றிக் குறை கூறினால் அது மத வெறுப்பாகப் பார்க்கப்படும். அதன் உண்மையைப்பற்றி ஆராயாமல் அடுத்த மதத்துக்காரர் எங்கள் மதத்தில் குறுக்கிடுவது ஏன்? என்ற பேச்சிற்கே வழி வகுக்கும். இருப்பினும் பெரியார் ஈ.வெ.இரா. நம் நாட்டில் உள்ள இசுலாம், கிறித்துவ மதங்கள் குறித்த தம் குறையாய்வையும் அவ்வப்பொழுது தெரிவித்துத்தான் வந்துள்ளார். ஆனால் இந்து மதத்தில் மூடநம்பிக்கைகள் மண்டிக்கிடப்பதால் அதனைப்பற்றிய குறையாய்வும் மிகுதியாக இடம் பெறுவது இயற்கையே.

தமிழ்நாட்டில் சைவ, வைணவ சமயங்கள் இருந்தனவே தவிர, இந்துமதம் என்று ஒன்று கிடையாது. தமிழ் நாட்டில் உள்ள இச்சமயத்தினர் இந்துவாகத் திணிக்கப்பட்டனர். இச்சொல்லாட்சியே இன்று நிலைத்துவிட்டது. ஆகவே, இவர்கள் இந்து மதத்தினர் அல்லர். இந்துவாக மாற்றப்பட்டவர்கள் எனலாம். இது குறித்தும் பெரியார் ஈ.வெ.இரா.பேசியும் எழுதியும் வந்துள்ளார்.

பெரியார் ஈ. வெ. இராமசாமி 1940இல் நீதிக்கட்சி மாநாட்டில் உரையாற்றும் போது பின்வருமாறு பேசியுள்ளார்:

திராவிடர்களாக நாம் கற்பிக்கப்பட்டுள்ள இந்து சமயத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். பெரும்பாலான திராவிடர்கள் தங்களை இந்து சமயத்தினர் என்று கருதிகிறார்கள். நீங்கள் உங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொண்டால், ஆரியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களாக கருதப்படுவீர். நம் முன்னோர்களின் நூல்களில், நாம் இந்துக்கள் என்றும் இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் என்று எங்கும் குறிக்கவில்லை.

உலக வரலாற்று ஆசியர்கள், இந்துக்களின் புனித நூல்கள் என வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள் எனக் கூறுகிறார்கள். மேற்படி பண்டைய சாத்திரங்களில் எதிலும் திராவிடர்களைப் பற்றிக் கூறவில்லை. அவை ஆரியர்களை மட்டும் கூறுகின்றன என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேத சாத்திரங்களைக் கூர்ந்து படித்தால், அவை திராவிடர்களை அடிமைப்படுத்தவும், சுரண்டவும் சொல்லப்பட்டுள்ளன என ஐயத்திற்கு இடமின்றி அறியலாம். இந்து சமயம் திராவிடர்களை அரக்கர்கள் என்றும் சூத்திரர்கள் என்றும் கூறுகிறது. இந்து சமயம் சாதி வேறுபாட்டை அறிமுகம் செய்து, இம்மண்ணின் மைந்தர்களிடையே மோதல்களை உண்டாக்கியது, அதிகரித்தது. நமது மூடநம்பிக்கைகளும், பொருளற்ற, மடமை வாய்ந்த சடங்குகளும், விழாக்களும் இந்துத்துவத்தின் தத்துவங்களைப் பின்பற்றுவதன் விளைவாகும். திராவிடர்களின் சமூக அடிமைத்தனமும் கீழ்மைத்தனமும் ஆரியர்களின் அரசியல் அடிமைத்தனத்திற்கும் வழிவகுத்தது. அரசியல் வழியிலும் திராவிடர்கள், இந்து சமயம் பயிலப்படும் ஆரியவர்த்ததிலிருந்து விடுபடுவது அவசியம் என்பதை நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்“.

இவ்வாறு இந்து சமயம் என்பது ஆரிய சமயம் என்ற உண்மையைக் கூறியதன் மூலம் அவர் ஆரியத்திற்கு எதிரான கருத்துகளைத்தான் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எம்மதமும் சம்மதம் என்பது பெரியார் ஈ.வெ.இரா.வின் கொள்கையன்று. “மதமான பேய் என்னைப் பிடியாதிருக்க வேண்டும்” என்னும் வள்ளலாா் வழியில் எம்மதமும் வேண்டா என்பதே பெரியார் ஈ.வெ.இரா.வின் கொள்கை. எனவேதான், “மதம் மனிதனை விலங்காக்கும்; மதம் மனிதர்கள் ஒற்றுமைப்படுவதைத் தவிர்க்கிறது. ஆகையால், அனைத்து மதங்களும் தேவையற்றவைதான்” என்பதையே நிலைப்பாடாகக் கொண்டிருந்தார். ஆனால் தன் குடும்பத்தார் சார்ந்திருந்த மதமும் இங்கே பெரும்பான்மையாக இருந்த மதமும் இந்துமதம் என்பதால் இந்துமதம் குறித்து எழுதவும் பேசவும் தள்ளப்பட்டார் எனலாம்.

இராசா இராம்மோகன் இராய், தேபேந்திரநாத்து தாகூர், கேசப்பு சந்திர சென், ஆத்துமராம் பாண்டுரங்கன், எம்(ஞ்)சி.இரானடே, என்றி விவியன் தெரோசியோ(Henry Louis Vivian Derozio), சோதிராவு பூலே, கோபாலகிருட்டிண கோகலே, இராமகிருட்டிண பரமஃகம்சர், விவேகானந்தர், சிவ நாராயண் அக்னிஃகோத்திரி முதலிய பலரும் மதச் சீர்திருத்தவாதிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களில் ஒருவர்கூடப் பிறமதச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியதில்லை. அவர்களை யாரும் இந்துமதத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று கூறியதில்லை. ஆனால், பெரியார் ஈ.வெ.இரா.பற்றி மட்டும் தவறான கருத்தீட்டை வழங்குகிறார்கள். பெரியார் ஈ.வெ.இரா. தொடுக்கும் வினாக்களுக்கு விடையிறுக்க இயலாமல் இவ்வாறு திசை திருப்புகிறார்கள் எனலாம்.

(தொடரும்)