(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-5 : தொடர்ச்சி)

இவ்வாறு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் 28.08.1937 இல்  கண்டனக் கூட்டம் நடைபெற்றுக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமான முந்தைய சில சூழலையும் பார்ப்போம்.

1937இல் சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதிவ் இந்தியத்  தேசியப் ்பேராயக் கட்சி(காங்கிரசு) 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.   14.07.1937இல் இராசகோபாலாச்சாரி சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக இந்திப் பரப்புரை அவையத்தில்(இந்தி பிரச்சார சபாவில்)பேசிய இராசாசி வணிகத்திற்கும் அரசியல் தொடர்பிற்கும் தென்னிந்தியர்க்கு இந்தி இன்றியமையாதது என்று பேசினார். இதனை வரவேற்று ஆனந்தவிகடன் இதழ் எழுதியது. பேராயக்கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி இராமராச்சியம் அமைப்பதற்கும் வருணாசிரமத் தருமத்தைக் காப்பதற்கும் இந்தியுடன் சமற்கிருதம் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றார். தான் முதலைமச்சராகப் பொறுப்பேற்றவுடன் இந்துசுதானி கட்டாயப்பாடமாக்கப்படும் என இராசாசி அறிவித்தார். 27.08.1937 அன்று துறையூர் மாநாட்டில் அறிஞர் அண்ணா எதிர்ப்பு தெரிவித்தார். இந்தி எதிர்ப்பின் முதல் கணை அரசியல் தலைவர்களில்  இவரிடமிருந்தே வீசப்பட்டது.

11.08.1937 இல் முதல்வர் இரசாசி, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். பெரியார் ஈ. வெ. இராமசாமி,  நீதிக்கட்சித் தலைவர் அ.தா. பன்னீர் செல்வம் ஆகியோர், உடனடியாக இதனை எதிர்த்து அறிக்கை விட்டனர். எனவே சென்னை மாகாணம் முழுவதும் 4.10.1937 முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் சூலை முதல் நாள் இந்தி மொழி நாள் என்று அறிவிக்கப்பட்டது.  இதற்கு எதிராகவும் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள், கருப்புக் கொடி ஏந்தி விளக்கக் கூட்டங்கள் நடத்துதல் அரசு அலுவலகங்கள் முன் நின்று மறியல் செய்தல், இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்துதல்  எனப் பல வகைகளிலும் இந்தித் திணிப்பிற்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

10.8.1937இல் இராமகிருட்டிணா மடம் மாணவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் இராசாசி இந்தி, பள்ளிகளில் கட்டாயமொழி என்று அறிவித்தார். இந்தியில் பாடநூல்கள் விரைவில் எழுதப்படவேண்டும். புதிய இந்தி எழுத்துகளைத் தமிழக மாணவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்களேயானால் பிறகு இந்தி, சமற்கிருதத்தை அவர்கள் எளிதில் பயில வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அந்த விழாவில் அவர் பேசினார்.

10.8.1937 இல் கட்டாயப் பாடத் திட்டத்தை இராசாசி அறிவித்த போது தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்ச்சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ்க்கழகம் சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

27.8.37 இல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழவேள் உமா மகேசுவரனார் தலைமையில் கட்டாய இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது.

5.9.1937 இல் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில்  நாவலர் சோமசுந்தர பாரதியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பேசினர்.

4.10.1937 இல் சென்னை கோகலே மன்றத்தில் பெருந்திரளானோர் பங்கேற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதற்குத் தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமை வகித்தார். 

26.12.1937இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் திருச்சியில் சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டின் தலைவர் சோமசுந்தர பாரதியார். இதில் பெரியார் ஈ.வெ. இராமசாமி முதன் முறையாகப் பங்கேற்றார்.

1937இல் தமிழ்நாடு முழுமையும் ஓங்கி வளர்ந்த இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மக்கள் உள்ளத்தில் தமிழார்வத்தைத் தூண்டியது. தமிழரின் பண்டைய பெருமைகளை உணரவும் புகழார்ந்த தமிழக வரலாற்றுச் செய்திகளை அறியவும் தமிழிலக்கியச் சிறப்புகளை அறிந்து அவற்றில் ஈடுபாடு காட்டவும் இது வழிகாட்டியது.

“இந்தியாவின் தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், பொதுமொழியாகவும் ஆக்கிடும் நோக்கத்தில் தமிழகத்தில் கட்டாய இந்தி புகுத்தப்பட்ட நோக்கில், தமிழார்வம் கொண்ட பேரறிஞர்களும், பொதுமக்களும் அந்தக் கட்டாய இந்தியைத் தீவிரமாக எதிர்க்கும் பணியில் ஈடுபட்டார்கள். இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தமிழகம் தனியே பிரிய வேண்டும் என்ற கருத்து இந்தி எதிர்ப்பின் விளைவாக 1938 இல் உருவாகியது. வடநாட்டு அரசியல் ஆதிக்கத்தையும், பொருளாதார ஆதிக்கத்தையும், வணிக ஆதிக்கத்தையும் நாளடைவில் தமிழ்ப் பேரறிஞர்களுக்கு உணர்த்திற்று. அதன் விளைவாக, 1938 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் கூட்டப் பெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் மறைமலையடிகள் ஆவார்கள். அதனை வழி மொழிந்து பேசியவர்கள் பெரியார் இராமசாமி, ச.சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆவார்கள்.” (இரா.நெடுஞ்செழியன்,  தி.மு.க.வரலாறு)

தமிழறிஞர்கள் தலைமை தாங்கி நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை அடித்தளமாகக் கொண்டு திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் வளர்ந்தது. தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அணி திரள வேண்டிய தேவையையும் இஃது உருவாக்கியது. அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழுடன் தமிழ்க்குடும்ப  மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோரும் இருந்தனர். எனவே,  ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது வெற்றி பெறாது என எண்ணிய திராவிட இயக்கத்தலைவர்கள் “திராவிட நாடு திராவிடருக்கே” என்று மாற்றி முழங்கினர்.(பின்னர் இது கைவிடப்பட்டது தனி வரலாறு.) இதற்கு மாற்றாக அவர்கள், “தமிழ்நாடு தமிழருக்கே! அவரவர் மொழி பேசும் நிலம் அவரவருக்கே!” என முழங்கி யிருக்கலாம். அவ்வாறு இருந்திருப்பின் “தமிழ்நாடு தமிழருக்கே” என்பது நீர்த்துப் போகாமல் வெற்றி பெற்றிருக்கும். தமிழ்நாடு . இன்றுள்ளவாறான பிற மொழியினர் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாறியிருக்காது.

27.02.1938 இல் முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு, காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் கான்பகதூர் கலிபுல்லா சாகிபு தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, தமிழவேள் உமாமகேசுவரம்(பிள்ளை), சிதம்பரம் என்.தண்டபாணி முதலிய பலரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அறிஞர்களும் தலைவர்களும் ஆற்றிய உரைகள் மக்களுக்கு இந்தியை எதிர்ப்பதில் எழுச்சி ஏற்படுத்தின.

ஒவ்வொரு நாள் போராட்டத்தின் போதும் ஒவ்வொருவரைத் தளகருத்தாக்களாகச்  சருவாதிகாரிகள்  என்ற பெயரில் பெரியார் ஈ.வெ.இரா. நியமித்தார். முதல் நாள் சிடி.நாயகம், இரண்டாம் நாள் ஈழத்தடிகள், மூன்றாம் நாள் கே.எம். பாலசுப்பிரமணியம், நான்காம் நாள் சி.என்.இராசு, ஐந்தாம் நாள் எசு.கே.சாமி, ஆறாம் நாள் எம்.எசு.மொய்தீன், ஏழாம் நாள் புவனகிரி நமச்சிவாயம், 8, 9, 10, 11, 12, 13 ஆம் நாள்களில் முறையே மாயவரம் சம்பந்தம், காஞ்சி பரவசுத்து ஆச்சாரியார், பெரியகுளம் இரங்கசாமி, கந்தம் (உ)ரோசு அம்மாள், மாரியம்மாள், புலவர் இராமநாதர் ஆகியோர்  எனத் தளகருத்தாக்களை நியமித்தார். 

இலக்குவனார் திருவள்ளுவன்