(குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – தொடர்ச்சி)

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்அறிவுடைமைகுறள் எண்: 428)

அஞ்சத்தக்கவற்றிற்கு அஞ்சாதிருத்தல் அறியாமை; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடையார் இயல்பு என்கிறார் திருவள்ளுவர்.

அஞ்சாமை உடையவர்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பதில்லை(Fearless people are not afraid to be afraid) என்கின்றனர் மனஅறிவியல் அறிஞர்கள். அஃதாவது அஞ்சவேண்டிய நேர்வுகளில் அஞ்சுவர்.

மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய மூவரும் “இறைமாட்சியில் அஞ்சாமை வெண்டும் என்று சொல்லப்பட்டாலும் இடம் கருதி இங்கு அஞ்சல் வேண்டும் என்கிறார்” என விளக்குகின்றனர். பேராசிரியர் சி.இலக்குவனாரும்  இவ்வாறு குறிப்பிட்டு எப்பொழுதும் எதைக் கண்டும் அஞ்சாமலிருத்தல் அறிவுடைமை ஆகாது என்கிறார். மக்களாட்சியில் ஆள்வோர் அஞ்ச வேண்டியது மக்கள் எதிர்ப்பே என்றும் விளக்குகிறார். இப்பொழுது அரசு மக்கள் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சில திட்டங்களைச் செயற்படுத்த முனைகின்றனர். இஃது அறிவுடைமை ஆகாது என்பதை உணர வேண்டும். மக்கள் எதிர்ப்பனவற்றைக் கைவிடுதல் கோழைத்தனம் ஆகாது; அறிவுடையார் செயலாகும்.  எனவே, ஆட்சிநலன் கருதியும் தன் நலம் கருதியும் மக்கள் நலன் கருதியும் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சிச் செயலாற்ற வேண்டும்.

தொழிற் சூழல், பணிச்சூழல், குடும்பச் சூழல் முதலான நேர்வுகளிலும் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சுதல் சிக்கல்களைத் தவிர்க்கும். முதலாளிகள், தொழிலாளர்கள் போராட்டங்களைத் தமக்கு அச்சமில்லை என்று காட்டுவதற்காக ஒடுக்கும் போக்கில் ஈடுபடக் கூடாது. பின் விளைவுகளை உணர்ந்து முடிவு எடுக்க வேண்டும். தொழிலாளர்களும் போலியான மதிப்பைக் காக்க எண்ணாமல், அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சிச் செயலாற்ற வேண்டும்.

போர்ச்சூழல் போன்றவற்றில் மிகை மதிப்பு கொண்டு அஞ்சாமல் போரில் இறங்குவதை விட அடுத்தவர் வலிமைக்கு அஞ்சி வலிமையுள்ள பிறரைத் துணைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  ஏதேனும் முடிவெடுத்து அதற்கு எதிர்ப்பு வந்தால் அச்சமில்லை என்று காட்டுவதற்காகத் தொடரக் கூடாது. எதிர்நோக்கும் தீமைகள் குறித்த அச்சமே மக்களின் எதிர்ப்பிற்குக் காரணமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அஞ்ச வேண்டிய தேவை இருப்பின் அஞ்சிப் பின்வாங்குவதே அறிவார்ந்த செயலாகும்.

(தொடரும்)