(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : தொடர்ச்சி)

கட்சிக் கண்ணோட்டமின்றித் தமிழர் அனைவரும் பங்கேற்கும் வகையில் 1938 மொழிப் போரை நடத்த பெரியார் திட்டமிட்டார். அதனால் அரசியல் முகமாகப் பெரியாரும் பண்பாட்டு முகமாக மறைமலையடிகளாரும் நாவலரும் ச.சோமசுந்தர பாரதியாரும் மொழிப்போரில் முன் நிறுத்தப்பட்டனர். 

முதல் மொழிப்போர் வெடிக்கக் கருத்துநிலைத் தூண்டுதலாய் இருந்தோர் மூவர் ஈழத்து சிவானந்த அடிகள், புலவர் அருணகிரிநாதர், அறிஞர் அண்ணா. சென்னையில் இதற்கான பணிகளைத் திட்டமிட்டுக் களம் அமைத்த மூவர் செ.தெ.நாயகம், காஞ்சி மணிமொழியார், சண்முகாநந்த அடிகள். 

கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து  01.05.1938 அன்று இளைஞர் தாலின் செகதீசன் உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கினார்.  போராட்டக்காரர்களின் சின்னமாக அவர் மாறினார். விடுதலை இதழில்  நேர்முகமொன்றில் “தமிழ்த்தாய்க்கு இன்னும் உண்மையான மகன்கள் இருக்கிறார்கள்” என்று நேர்முகச் செய்தி அளித்தார்.

பேரறிஞர் அண்ணா, இந்தி எதிர்ப்பு போராட்டக் கூட்டமொன்றில் “இன்று சகதீசன் இறந்தால் அவரிடத்தை நிரப்ப நான் பத்து பேருடன் அமருவேன். அவர் இறந்தால் நீங்களும் இறக்கத் தயாராகுங்கள்” என முழக்கமிட்டார். சகதீசன் உண்ணா நோன்பை இடையிலேயே நிறுத்திக் கொண்டார். (ஒரு நூலில் பத்து வாரங்களில் நிறுத்திக்கொண்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை பத்து நாள் என்பது தவறுதலாக வந்துள்ளதா எனத் தெரியவில்லை.)

திருச்சிராப்பள்ளியில் 28.05.1938 அன்று தமிழ்ப்  பாசறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில்  இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவராக நாவலர் சோமசுந்தர பாரதியார், செயலாளராக கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாரியத்தின் உறுப்பினர்களாகப்  பெரியார் ஈ.வெ.இராமசாமி, தமிழவேள் தா.வே. உமாமகேசுவரன், கே.எம்.பாலசுப்பிரமணியன், ஊ. பு. அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மாணவர்கள் இந்திப் பாடங்களைப் புறக்கணிக்கும்படி செய்தல், இந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்களை நடத்துதல், உண்ணாநோன்பு இருந்தல், பேராயக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுதல், முதலமைச்சர் வீட்டுக்கு முன்னால் மறியல் நடத்துதல் என்று பல்வேறு போராட்ட முறைகள் வகுக்கப்பட்டன.

3.06.1938 அன்று முதலமைச்சர் இராசாசியின் வீட்டுக்கு முன்னால் மறியல் போராட்டம் நடைபெற்றது. தொண்டர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு பிரிவு மறியலில் ஈடுபட்டுக் கைதானதும், அடுத்த பிரிவு களத்தில் இறங்கியது. அதற்குச் செ.தெ. நாயகம் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.   அதன்பிறகு ஈழத்தடிகள் தலைமையில் அடுத்த குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அவர்களையும் கைது செய்தது. தமிழன் தன்னுடைய தாய்மொழிக்காகப் போராடினால் கைது செய்வதா என்று தலைவர்கள் கண்டனக்குரல்  எழுப்பினர்.ஆனால்,  காவல்துறை அதிகாரிகள், “முதலமைச்சர் இராசாசி வீட்டுக்கு முன்னால் மறியல் செய்தவர்களைத்தான் நாங்கள் கைது செய்கிறோம்” என்றார்கள். உடனே பெரியார் ஈ.வெ.இரா., முதலைமச்சர் வீட்டு முன் மறியல் செய்ய வேண்டா என்றும்  பொது இடங்களில் மறியல் செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் நடந்த வழக்கு விசாரணை முடிவில் செ.தெ. நாயகத்துக்கு ஒரு மாத வெறுங்காவல் தண்டனை, இருநூறு உரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட்டது. சண்முகானந்த அடிகளுக்கு நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.

மேற்படி போராட்டங்களுக்கு முன்னதாக 01.06.1938 அன்று பல்லடம் பொன்னுச்சாமி என்னும் மற்றோர் இளைஞரும் முதலைமச்சர் இராசாசி வீட்டின் முன்னர் உண்ணாநோன்பைத் தொடங்கினார். பெரியார் ஈ.வெ.இராமசாமி உண்ணாநோன்பு போராட்டத்தை விரும்பவில்லை. எனினும்   மற்ற தலைவர்கள் உண்ணா நோன்பு இருப்பவர்களை ஓர் எடுத்துக்காட்டாக அறிவித்தனர். உண்ணாநோன்பிருந்த பல்லடம் பொன்னுச்சாமி இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முதல் ஆளாகக் கைதானார்.

03.06.1938 முதல் கட்டாய இந்திக்கு எதிராகத் தமிழ்நாட்டுப்பள்ளிகள் முன் மறியல் போர் நடைபெற்றது. 3.6.38 இல் கோடம்பாக்கத்தில் கூடிய இந்தி ஒழிப்பு மாநாட்டிற்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார்.

 முதலமைச்சர்(அப்போது தலைமையமைச்சர் என்றுதான் குறிப்பர்) இராசாசி வீட்டு முன்னரும்  மக்கள் திரள் திரளாகக் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்து இறையியல் பள்ளி(Hindu theological school) முன்பும் மக்கள் புற்றீசல் போல் குவிந்து எதிர்ப்பைக் காட்டினர். 1271 பேர் இந்தி எதிர்ப்பிற்காகக் கைதாகிச் சிறை சென்றனர். இவர்களுள் ஆண்கள் 1166, பெண்கள் 73, குழந்தைகள் 32 பேராவர்(இக்குழந்தைகளுள் ஒருவரே பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இணைப்பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த என்.வி.என்.சோமு).)

“இந்தியத் தேசிய வாழ்வில் இம்மாநிலம் தனக்கு சரியான இடத்தைப் பெற, நமது கல்விபெற்ற இளைஞர்கள் இந்தியாவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியில் நடைமுறை அறிவு பெற்றிருத்தல் இன்றியமைததாகும். எனவே அரசு நமது மாநில இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் இந்துத்தானியைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. எந்தவொரு தொடக்கப்பள்ளியிலும் இந்திப்பாடம் இருக்காது, தாய்மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த அரசு விரும்புகிறது. இந்தி இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே அதுவும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் படிவங்களில், அதாவது பள்ளிவாழ்வின் 6ஆவது, 7ஆவது, 8ஆவது ஆண்டுகளிலேயே அறிமுகப்படுத்தப்படும். எனவே இடைநிலைப்பள்ளிகளிலும் தாய்மொழிக் கல்விக்கு இது எந்தவிதத்திலும் குறுக்கீடாக இருக்காது. இந்தி வகுப்புகளில் வருகை கட்டாயம் என்றளவில் மட்டுமே கட்டாயமே தவிர மாணவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் அல்லது கன்னடத்திற்கு மாற்றாக இந்திப் பாடத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது, அவற்றில் ஒன்றுடன் கூடுதலாகவே இந்தியைப் பயிலவேண்டும்.