(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 : தொடர்ச்சி)

5

மறுநாள்:

உங்கள் கதைகளில் நீங்கள் விறுவிறுப்பிற்கு என்ன செய்வீர்கள் என்ற தெரிந்து கொள்ளலாமா?

கண்டிப்பாகச் சொல்கிறேன்.

திடீரென்று ஒருவரைப் புகுத்துவோம்.

ஏன்? எதற்கு அவர் வந்தார் என்று பார்ப்பவர்கள் கருத மாட்டார்களா?

அப்படியெல்லாம் இல்லை. மாறாக, அவர் குறித்த பரபரப்பு பார்ப்பவர்களிடம் தொற்றிக் கொள்ளும்.

முன்பே இறந்த போன ஒருவர் உயிரோடு இருப்பதாகக் காட்டுவோம்.

 அடக்கம் செய்யப்பட்ட அல்லது எரியூட்டப்பட்ட ஒருவர் எப்படி மீண்டு வருவார் எனப் பார்ப்பவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

அப்படி யெல்லாம் மக்கள் சிந்திப்பார்கள் என்று நாங்கள்  எண்ண மாட்டோம். ஏனெனில் அது குறித்த விவாதத்தை ஓட்டிக் கொண்டாலும் விறுவிறுப்பாகக் கருதிப் பார்ப்பர்.

ஒற்றுமையாக இருந்த இருவரிடையே சண்டை மூட்டி விடுவோம்.

ஏன் இப்படிச் சண்டை மூட்டி விடுவீர்கள்.

சண்டை போடுபவர்கள் சண்டை போடுவதை விட ஒற்றுமையாக இருப்பவர்கள் சண்டை போடுவது விறுவிறுப்பாக இருக்கும்.  திரைப்படங்களில் நெருங்கிய நண்பர்கள் அல்லது பாசமான உடன்பிறப்புகள் சண்டையிடுவதுபோல் காட்டுவதில்லையா? அதுபோல்தான். சண்டையைப் பார்த்து எப்பொழுது மீண்டும் ஒற்றுமையாவார்கள் எனச் சிந்தித்துப் பரபரப்பு அடைவார்கள்.

பரம்பரைச் சண்டைக்காரர்கள் எந்தக் காரணமும் இன்றித் திடீரென்று ஒன்று சேர்ந்தது  போல் காட்டுவோம் .

சண்டைக்காரர்கள் ஒற்றுமையாவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், காரணமின்றி இத்தகைய ஒற்றுமையை ஏன் காட்டுவீர்கள்?

ஒற்றுமையாகவே இருப்பார்களா? மீண்டும் சண்டையிடுவார்களா என்றுதான் மக்கள் சிந்திப்பர். அதுவே தொடருக்கு வெற்றிதான்.

கொஞ்சம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தால், இந்த ஒற்றுமைக்கு எதிராக இரு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வருவதாகக் காட்டி விறுவிறுப்பைக் கூட்டுவோம்.

வேறு என்ன செய்வீர்கள்?

தொடரில் தொய்வு ஏற்படும்போது திரைப்படப் பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்து மக்களைத் திசை திருப்பி விடுவோம். அப்படியும் கதையைத் தொடரத் தெரியாவிட்டால் ஒருவர் காணாமல் போய்விட்டதுபோல் அவரைப் பற்றிய காட்சிகளை வைக்க மாட்டோம். அவர் எங்கே போய்விட்டார் என்று சிந்திப்பார்களே தவிரக் கதையில் ஓட்டைஇருப்பதாக மக்கள் எண்ண மாட்டார்கள்.

அஃதாவது யாராவது ஒருவர் காணாமல் போய்விடுவார். அவரை மற்றவர்கள் தேடுவார்கள். அப்படித்தானே.

அப்படியும் இருக்கும். காணாமல் போனவரைத் தேடுவதில் 2 வாரம் ஓட்டி விடுவோம். நான் சொல்ல வந்தது கதையிலேயே அவரை இல்லாமல் செய்வது. குறிப்பிட்ட ஒருவர் கதையிலேயே திடீரென்று வரமாட்டார்.

அப்படியானால் அவர் தொடர்பான காட்சிகள் என்ன ஆகும்?

இல்லாமல் போகும். மக்கள் இவற்றை மறந்தாலும் நல்லதுதான். மறக்காமல் நினைவில் வைத்திருந்தாலும் எப்பொழுது அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருப்பர். இதுவும் நல்லதுதான்.

இருப்பவர்களை மட்டும் தொலைப்பீர்களா? புதியதாக யாரையும் வரவைப்பீர்களா?

ஆமாங்க ஐயா. கண்டிப்பாகப் புதிய வரவு இருக்கும். திடீரென்று கோபித்துக் கொண்டுபோன பையன் அல்லது பெண் திரும்பி வந்ததுபோல் அல்லது வெளிமாநிலத்திலிருந்தோ வெளி நாட்டிலிருந்தோ மகனோ மகளோ வேறு உறவினரோ வருவதுபோல் காட்சியமைப்போம். முதலில் இவ்வளவுதான் குடும்ப உறுப்பினர்கள் என்று சொல்லி விட்டுப் பின்னர் எங்கிருந்தோ யாரோ வருவதுபோல் காட்டுவது கண்டு பார்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்களே தவிர, வெறுப்பைக் காட்ட மாட்டார்கள்.

அம்மா, அப்பாவைக்கூட மாற்றி விடுவீர்கள் போலே.

ஆமாம். திடீரென்று சொந்தப் பிள்ளை இல்லை. தத்துப் பிள்ளை. அல்லது யாருமற்றோர் இல்லத்திலிருந்து எடுத்து வளர்க்கும் பிள்ளை.  கோயிலில் இருந்து எடுத்து வந்த பிள்ளை. குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து வந்த பிள்ளை. என்றெல்லாம் நாயகனோ நாயகியோ சொந்தப் பிள்ளை இல்லை எனக் காட்டி விடுவாம். அது மட்டுமில்லை. புதிய காதலனையோ காதலியையோ கதையில் புகுத்திவிடுவோம். நன்றாகச் செல்லும் இருவர் காதலை முக்கோணக் காதலாக மாற்றி விடுவோம்.

ஆகத் தொலைக்காட்சி நேயர்களைக் குழப்புவதற்காக எதையாவது செய்து விட்டு விறுவிறுப்பிற்காகச் செய்ததாகக் காட்டி விடுவீர்கள். அப்படித்தானே!

ஆமாங்க ஐயா. மேலும் அடிக்கடிக் கனவுக் காட்சிகளையும் சேர்த்து விடுவோம்.

கனவுக் காட்சிகளா? காதலர்கள் கனவு காண்பதுபோலா?

அதுவும் இருக்கும். ஒரு தலையாகக் காதலிக்கும் ஒருவர் தான் விரும்பும் ஆண் அல்லது பெண்ணுடன் காதல் செய்வதுபோல் காட்சிகள் அமைப்போம். கதையில் திருப்பம் வருவதுபோல் துன்பக் காட்சிகளைக் காட்டி விட்டு அவற்றைக் கனவாக மாற்றி விடுவோம். காதலனுக்கோ காதலிக்கோ கேடு வருவது போல் அல்லது காதல் முறிவதுபோல் யாரும் தீங்கு செய்வதுபோல் கனவுக்காட்சி வைப்போம். சதிகாரர்கள் தங்கள் சதி நிறைவேறியதுபோல் கனவு காண்பதாக வைப்போம். மறுநாள்தான் இதைக் கனவு என்று காட்டுவோம்.

குடிப்பது போன்ற காட்சிகளும் இடையிடையே வைப்போம்.

ஆமாம். அப்பாவும் மகனும், அண்ணனும் தம்பியும் மாமனாரும் மருமகனும், மாப்பிள்ளையும் மைத்துனரும் சேர்ந்து குடிப்பதுபோல் எல்லாம் காட்சிகள் வைக்கின்றீர்கள். என் புதினத்தில் இப்படியெல்லாம் நுழைத்து விடாதீர்கள்.

எங்களுக்கும் இவையெல்லாம் பிடிக்காது. இப்போது பெண்கள் குடிப்பதுபோலும் காட்சிகள் வருகின்றன. நல்ல கதையாசிரியர்களும் இயக்குநர்களும் கூட இப்படி ஏன் கதையைக் கொண்டு போகிறார்கள் என்று தெரியவில்லை. மதுபானக்கடைகள், சாராயக் கடைகள், குடிப்பிடங்கள் எல்லாம் இல்லாமல் காட்சிகளை அமைக்க முடியாதா என்ன?

நல்ல வேளை உங்களுக்காவது இந்த எண்ணம் உள்ளதே பாராட்டுகள்இவ்வளவுதானா? இன்னும் உத்திகள் வைத்துள்ளீர்களா?

இன்னும் பல உள்ளன. திரைப்பட நடிகர் நடிகைகளையே தொடரில் வர வைத்து விடுவோம். மாநில அளவில் சமையல் போட்டி, கோலப்போட்டி, நல்ல மருமகள், சிறந்த கணவன்-மனைவி, சிறந்த மாமியார் – மருமகள் என்பன போல் போட்டிகள் வைப்போம். தனியாக இல்லை. கதையில் வைப்போம். இதை எப்படியும் ஒரு மாதம் ஓட்டி விடுவோம். போட்டிகளைப் பார்ப்பதில் மக்களுக்கும் ஆர்வம் ஏற்படும். பரிசு கொடுப்பவர்கள், சிறப்பு விருந்தினர்கள் என்ற முறையில் திரைப்பட நடிகர் நடிகைகளையே தொடரில் வர வைத்து விடுவோம். அந்தந்த நடிக, நடிகையரின் நேயர்களும் தொடரைப் பார்க்கத் தொடங்கிப் பின் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஓகோ. பெரிய திரைக் கலைஞர்களையே சின்ன திரைக்குள் கொண்டுவந்து விடுவீர்களா? நன்றாகத்தான் உள்ளது

(தொடரும்)