(குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? ….தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
7. பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக் கொள்க!
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 421)
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி. அதுவே பகைவராலும் அழிக்கமுடியாத அரணுமாம் என்கிறார் திருவள்ளுவர்.
அறிவு யாரிடம் இருக்கின்றதோ அதுவே அவர்களைக் காக்கும் கருவி என மேனாட்டுக் கல்வி அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
கல்வி கேள்வி முதலானவற்றால் பெறுவது அறிவுதானே! எனவே அறிவுடைமையின் சிறப்பையும் பயனையும் அடுத்துத் திருவள்ளுவர் கூறுகிறார். பேராசிரியர் சி.இலக்குவனார், கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை ஆகிய நான்கு அதிகாரங்களையும் ‘கல்விஅறிவுப் பேறியல்’ என்கிறார்.
மணக்குடவர், “இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று” எனக் கூறுகிறார். காலிங்கர், “அரசர்க்கு ஆனை, குதிரை, தேர், காலாள் என்னும் நாற்பெரும் சிறையும் அரணன்று. தமக்கு இங்ஙனம் சிறந்த அறிவு யாது? அதுவே தமக்கோர் இடையூறு வரும் வழி பாதுகாக்கும் படையாவது” என்கிறார்.
அற்றம் என்பதற்கு அச்சம், சமயம், சோர்வு, மறைவு, மெலிவு, அழிவு முதலிய பொருள்கள் உள்ளன. அறிவு தன்னிடம் உள்ள குற்றத்தையும் தனக்கு வரும் அழிவையும் தடுக்கவும் காக்கவும் செய்யும் கருவியாகும் என்கிறார் திருவள்ளுவர். ஆளும் தலைவராயின் நாட்டின் பாதுகாப்பிற்கான படைவகைகளையும் பாதுகாப்பு அரண்களையும் பகைவரால் அழித்துவிட இயலும். ஆனால், ஆள்வோர்க்கும் ஆள்வோர்க்குத் துணை நிற்கும் அமைச்சர், படைத்தலைவர் முதலானவர்க்கும் உள்ள அறிவைப் பிறரால் அழிக்க முடியாது. அந்த அறிவால் பகைவரை ஒடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர்.
அரசர் அல்லது ஆள்வோர்க்குத் தொடர்பு படுத்திப் பெரும்பாலும் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் பிற தரப்பினருக்கும் – பொதுமக்களுக்கும் – இது பொருந்துமன்றோ? எனவே, பேராசிரியர் சி.இலக்குவனார் அறிவானது மக்கள் குலத்திற்கு அழிவு வராமல் தடுக்கும் கருவியாகும் எனப் பொதுவில் விளக்குகிறார்.
ஆள்வோர் நாட்டைக் காக்கும் வகையில் நல்லறிவைப் பயன்படுத்தி நல்ல திட்டங்கள் தீட்டி நல்லாட்சிபுரிய வேண்டும். பிறரும் அறிவைக் கருவியாகக் கொண்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவரையும் பாதுகாக்க வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment