(குறள் கடலில் சில துளிகள் 8. மனத்தை நல்வழி செலுத்துவதே அறிவு – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
9. யாரிடம் கேட்டாலும் மெய்ப்பொருள் காண்க!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 423)
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மையான இயல்பை காண்பதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர்.
அறிவுப்புலன் குறித்து ஆராயும் அறிவியலறிஞர்கள், அறிதலின் ஆழ்ந்தநிலையே (the deepest level of knowing) – அஃதாவது உண்மைத்தன்மையை அறிதலே, நுண்மையான அறிவு என்கின்றனர்.
பரிமேலழகர், “குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்’ என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது.” என விளக்குகிறார்.
பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை தமிழகத்தில் இருந்தன என்பதற்கு இக்குறளைச் சான்றாகப் பேரா.சி.இலக்குவனார் கூறுகிறார். அவர், இச்சூழல் அடிப்படையில், “பேசுவதற்கு முன்பே வாய்க்குப் பூட்டிட்டுவிட்டு, எழுதுவதற்கு முன்னே விரல்களை நறுக்கிவிட்டு, எதையும் பேசலாம், எதையும் எழுதலாம் என்றால் உரிமைக் கடவுள் உயிர் வாழ்கின்றது என்று கூற முடியுமா? அறிவு வளர்ச்சிக்குத்தான் இடமுண்டா? இல்லையே! ஆதலின் விரும்பியதைக் கூறும் உரிமை அளித்திட வேண்டும் கூறியவற்றின் உண்மையை அறியும் ஆற்றலும் மக்கள் பெற்றிட வேண்டும்.” என உரிமைக்குரல் எழுப்புகிறார்.
யார் யார் என்பதற்குச் சொல்பவர் நோக்கில் யாவர் யாவர் அல்லது எவர் எவர் என்பனபோல்தான் அனைவரும் கூறுகின்றனர். அவ்வாறு இல்லாமல் முதலில் குறிப்பிட்டுள்ள யார் என்பது கேட்கப்படுபவரையும் அடுத்த யார் என்பது சொல்பரையும் குறிப்பதாகக் கருதுவதே சிறப்பாகும்.
எப்பொருண்மை குறித்த எப்பொருளாயினும் எத்தகைய தகுதி அல்லது செல்வ அல்லது உயர்ந்த நிலையில் இருந்தாலும் தன்னைவிட அறிவில் அல்லது பதவியில் அல்லது செல்வத்தில் அல்லது வேறு நிலையில் உயர்ந்தவராக அல்லது தாழ்ந்தவராக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதே அறிவு எனத் திருவள்ளுவர் கூறுகிறார். எனவே, சொல்பவன் யார், கேட்பவன் யார் என்னும் அளவுகோல்கள் அறிவிற்குத் தேவையில்லை. சொல்லப்படும் செய்தியின் மெய்த்தன்மைதான் முதன்மையானதாகும்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment