குறள் கடலில் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 9. யாரிடம் கேட்டாலும் மெய்ப்பொருள் காண்க! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்!
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 424)
அரிய பொருளையும் பிறர் புரிந்து கொள்ளுமாறு எளிதாக உணர்த்திப், பிறர் கூறும் நுண்ணிய பொருள்களையும் எளிதாக உணர்ந்து கொள்வதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர்.
எதையும் புரியுமாறு சொல்லலும் எதையும் புரிந்து கொள்ளுமாறு கேட்டலுமே அறிவு என்று பேச்சு அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
எண்பொருள்=எளிய பொருள்; பிறர் எண்ணிக் கொள்ளும்படியான பொருள் என்றும் கூறுவர். செலச் சொல்லி = நுண்ணிய பொருள்களையும் பிறர் மனத்துள் செல்லுமாறு எளியபொருள்போல் சொல்லுதல்.
அரியவற்றை எளிதாகச் சொல்லவும் எளிதாக உணரவும் உதவுவதே அறிவாகும். எதையும் புரியும்படிச் சொல்லலும் புரிந்து கொள்ளலுமே அறிவு.
அறவிலார்க்கு ஒன்றைப் புரிந்து கொள்ளலும் கடினம். தான் புரிந்து கொள்வதைப் பிறர் புரியுமாறு சொல்லுதலும் கடினம். எனவே, புரியவும் புரியச் செய்யவும் உள்ள திறனே அறிவு.
மணக்குடவர், “பிறர் சொல்லும் நுண்ணிய பொருளையும் அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவு” என்கிறார். பரிப்பெருமாள், “பிறர் சொல்லும் நுண்ணிய பொருளையும் அவர் சொல்லியவாறே காண்பது அறிவு” என்கிறார். பரிமேலழகர் “பிறர் சொல்லின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காணவல்லது அறிவு” என்கிறார்.
சரிவரப் புரிந்து கொள்ளாமையும் சரிவரப் புரிந்துகொள்ளச் செய்யாமையுமே பல சிக்கல்களுக்குக் காரணம். இத்தகைய சிக்கல்கள் வராமல் இருக்க அறிவு தேவை. எனவே, கல்விச்செல்வத்தையும் கேள்விச்செல்வத்தையும் தொடர்ச்சியாகப் பெற்று அறிவில் சிறந்திருக்க வேண்டும்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment