(குறள் கடலில் சில துளிகள் 5. தொடர்ச்சி)

 செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்

(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கேள்விகுறள் எண்: 420)

செவி மூலம் பெறும் கேள்விச் செல்வத்தின் சுவையை உணராதவர்கள், வாய் மூலம் பெறும் உணவுச்சுவையை மட்டும் விரும்புபவர்கள் இறந்தாலும் என்ன? உயிரோடு இருந்தாலும் என்ன?

தகவலியலறிஞர்கள் கேள்வியறிவு உடையவர்களே வெற்றிகரமான தலைவர்களாகவும் தொழில் தலைவர்களாகவும் உள்ளனர் என்கின்றனர்இரிச்சர்டு பிரான்சன் (Richard Branson) வெற்றிக்குப்பின்னணி கேள்வியறிவே என்கிறார். இதனை உணராமல் வாழ்ந்து என்ன பயன் எனத் திருவள்ளுவர் கேட்பது சரிதானே!

கேள்விச் செல்வம் இல்லாதார் பிறர்க்குப் பயன்பட மாட்டார் என இதன் மூலம் திருவள்ளுவர் உணர்த்துவதாக மணக்குடவர் கூறுகிறார். காலிங்கர், வாய்ச்சுவைக்கு மட்டுமே முதன்மை அளித்துக் கேள்விச்சுவையைப் பொருட்படுத்தாதவர்கள், மாய்ந்தால் வரும் சேதமும் இருந்தால் வரும் இலாபமும்  உலகத்தோர்க்கு ஒன்றுமில்லை என விளக்குகிறார்.

இக்குறளை விளக்கும் பரிமேலழகர், “செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். ‘வாயுணர்வு’ ‘என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்’ இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும் கேளாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது” என விவரிக்கிறார்.

“செவியின் உணவு வகைகளை அறிந்து அவற்றை நுகர்வோர் நன்மையடைவர் பிறர்க்கும் நன்மை செய்வர் வாயுணவின் சுவைகளைமட்டும் அறிந்து அவற்றை உண்பதிலேயே காலம் கழிப்போர், தாமும் துன்பப்படுவர் பிறர்க்கும் துன்பம் கொடுப்பர்” என இரண்டிற்குமான வேறுபாட்டைப் பேராசிரிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார்.

நன்மையை விளைவிக்கும் கேள்விச்செல்வத்தைப் பெறுபவர்கள் வாழ்வதுதானே அனைவர்க்கும் நன்மை. தீமை விளைவிக்கும் வாய்ச்சுவையை மட்டுமே பெறுபவர்களால் யாருக்கும் பயனில்லை என்பதால் அவர்கள் வாழ்வது ஏன் எனக் கடுமையான போக்கில் திருவள்ளுவர் கூறுகிறார். எனவே, கேள்விச்செல்வத்திற்கு எந்த அளவு அவர் முதன்மை அளிக்கிறார் எனப்புரிந்து கொள்ளலாம். அவர் வாய்ச்சுவையை வெறுக்கவில்லை. அதற்கே முதன்மை அளித்துக் கேள்விச்சுவையை ஒதுக்குபவர்கைளத்தான் கண்டிக்கிறார்.

அறுசுவையாகிய வாய்ச்சுவை விரும்பி ஒன்பான் சுவையாகிய செவிச்சுவையைப் புறக்கணிக்காதே!