(குறள் கடலில் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
11. உலகம் தழுவியதே அறிவு!
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 425)
உலகத்தைத் தழுவிச் செல்லுதல் அறிவு. இன்பத்திற்கு மகிழ்தலும் துன்பத்திற்கு வருந்தலும் அறிவாகா என்கிறார் திருவள்ளுவர்.
துன்பத்திலிருந்து அறிவு வரும். ஆனால், அறிவு துன்பமோ இன்பமோ தராது என்கின்றனர் கல்வியியலறிஞர்கள்.
தழீஇயது என்பது உலகத்தாரைத் தழுவிச் செல்லுதல் – நட்பு கொள்ளுதல் என்னும் பொருளில் வருகிறது.“உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” என்பதே தமிழர் நம்பிக்கை. எனவே, உலக ஆன்றோர்களைப் பொருந்தி வாழ்வதும் அறிவு எனப்படுகிறது.
மணக்குடவர், “ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு.இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.” என்கிறார். மலர்தலும் கூம்பலும் என்பதன் மூலம் பயிரறிவியல் உண்மையைக் கூறுகிறார். மரஞ்செடி கொடிகளில் தோன்றும் பூ கோட்டுப் பூ எனப்படும். இவை ஒரு முறை விரிந்து மலர்ந்த பின்னர் வாடிக் கீழே விழும்; மீண்டும் குவியாது. குளம் முதலிய நீர்நிலைகளில் மலரும் பூ நீர்ப்பூ எனப்பெறும். நீர்ப்பூக்கள் மலர்ந்து பின்னர் குவியும் தன்மை கொண்டவை. இந்த அறிவியல் உண்மையை உவமையாக்கி முதலில் மகிழ்ந்து பின் துன்புறும் நிலையைத் திருவள்ளுவர் கூறுகிறார்.
பொதுவாழ்வில் ஈடுபடும் பொழுது சிலர் புகழ்வர். மற்றும் சிலர் இகழ்வர். புகழ்ச்சியில் மயங்கியோ இகழ்ச்சியில் கவலைப்பட்டோ கடமையை மறக்கக் கூடாது. உள்ளம் ஒரு நிலைப்பட்டதாக இருக்க வேண்டும். ஆள்வோரும் தமக்கு வரும் புகழுரைகளால் மயங்கி நிற்கவோ இகழுரைகளால் தடுமாறி விழவோ கூடாது. ஆன்றோரைத் துணையாகக் கொண்டு சிறப்பான ஆட்சியை அளிக்க வேண்டும்.
உலகம் தழீஇயது என்பதன் மூலம் உலகக்கண்ணோட்டத்தைத் திருவள்ளுவர் வலியுறுத்துவதாகப் பேரா.சி.இலக்குவனார் விளக்குகிறார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment