குறள் கடலில் சில துளிகள் 8. மனத்தை நல்வழி செலுத்துவதே அறிவு – இலக்குவனார் திருவள்ளுவன்
குறட் கடலிற் சில துளிகள்
8. மனத்தை நல்வழி செலுத்துவதே அறிவு
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 422)
மனத்தைச் சென்றவிடங்களில் எல்லாம் செல்லவிடாமல், தீமையிலிருந்து நீக்கி, நல்லன பக்கம் செல்ல விடுவதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர்.
“அறிவுவழியில் செல்வதே வலிமைக்கு வழி” என்கின்றனர் கல்வியியலர்கள்.
ஒரீஇ=நீக்கி; உய்ப்பது=செலுத்துவது; எனப் பொருள்கள். செலவிடாது -செல்லவிடாது என்பது செலவிடா என்று குறைந்து வந்துள்ளது. உள்ளத்தைச் செல்லவிடாது என உள்ளம் என்பது மறைபொருளாகக் குறிக்கப்பட்டு்ளளது.
பணம் படைத்தவன் படத்தில் வாலி எழுதிய பாடல் ஒன்றில்
கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?
என்னும் வரிகள் வரும். ஐம்புலன்கள்வழியே மனத்தை அலையவிடக் கூடாது. அதை ஒருமுகப்படுத்தி, நல்லதின் பக்கம் செல்ல விடுவதே அறிவாகும்.
பரிமேலழகர், “குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.” என விளக்குகிறார்.
“மனம் ஒரு குரங்கு” என்பார்கள். குரங்கு மனம் தாவும் போக்கில் எல்லாம் மனிதன் சென்றால் தீமைக்குத்தான் அவன் தள்ளப்படுவான். அவ்வாறு மனத்தை, அது செல்லும் பாதையில் எல்லாம் செல்ல விடாமல் அத்தகைய தீமையை நீக்கி அதனால் வரும் தீமைகளில் இருந்து காத்தல் வேண்டும். தீமையை விலக்கும்பொழுது உள்ளம் நல்லன பக்கம் செல்ல வேண்டும். அவ்வாறு நன்மையின் பக்கம் செலுத்துவதே அறிவாகும்.
தீமையின் பக்கமிருந்து விலக்கி நன்மையின் பக்கம் செலுத்தும் அறிவைப் பெருக்குக!
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment